தடுப்பு முகாம்களில் உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு : ரொபர்ட் ஓ பிளேக்

வடபகுதி இடம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
வவுனியா உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களது உறவுகளை பார்வையிடச் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் இவ்வாறான கோரிக்கைகளுக்கு எந்த வகையிலும் இணங்க முடியாதென அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயோர்க் நகரில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது ரொபர்ட் ஓ பிளேக் இந்தக் கோரிக்யையை முன்வைத்துள்ளார்.

உறவினர்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் இடம்பெயர் மக்களுக்கு ஆறுதல் அளிக்க முடியும் என பிளேக் தெரிவித்திருந்தார்.

எனினும், இடம்பெயர் முகாம்களில் பதுங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்படும் வரையில் இவ்வாறான கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் முழு நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.