தகர்க்கப்பட்ட இரண்டுவருட உழைப்பு: அஜித்

நேற்றுவரைக்கும் இலங்கைத் தீவிற்கு அப்பால் போருக்குப் பிந்திய காலத்தைய விவாதங்களின் கருப்பொருளாக அமைந்ததெல்லாம் இன்னமும் உரிமைப் போர் தேவையா என்பது தான். உரிமையா அபிவிருத்தியா, மறுசீரமைப்பா தன்னுரிமையா என்பவை விவாதங்களின் மையப்பகுதி. தமிழ் நாட்டின் முன்னைய புலிகளின் வலையமைப்பின் மற்றொரு பகுதி, இழந்து போன ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்று தமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. சு.ப.வீரபாண்டியன், ரவிக்குமார், ஜெகத் கஸ்பர், கனிமொழி என்று ஒரு நீண்ட பட்டியல் உரிமை வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றனர்.

ஏற்கனவே புலியெதிர்ப்பில் அரசியல் வளர்த்த இன்னொரு பகுதி இவர்களோடு கைகோர்த்துக் கொண்டனர். இடது சாரியத்தையும், பின்நவீனத்துவத்தையும் துணைக்கழைத்த இவர்கள் ஈழத் தமிழர்கள் மறுவாழ்வையும் மனிதாபிமானத்தையும் மட்டும் தான் எதிர்பார்பதாக மறுபடி மறுபடி உச்சரித்தனர்.

இந்த இரு பிரிவினருக்கும் வலுச் சேர்க்க இலங்கை அரச துணைக் குழுக்கள் தமது பங்களிப்பை “உரிமை மறுப்பில்” இணைத்துக்கொண்டனர்.

போருக்கு முன்னமே புலம் பெயர் நாடுகளில் “உரிமை மறுப்பு” அரசியலை இலங்கை அரச வலைப்பின்னல்கள் புலியெதிர்ப்பாளர்களூடாகப் புகுத்தியிருந்தது. பெரும்பாலும் அரசின் இரகசிய வலையமைப்புக்களூடாகச் செயற்பட்ட பலர் புலிகள் பலவீனமான நிலையில் தம்மை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டனர். 2009 ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பசிலை கொழும்பில் சந்தித்த 21 பேர் கொண்ட புலம் பெயர் குழு மக்கள் மறுவாழ்வை மட்டும் தான் எதிர்நோக்குகிறார்கள் என்றது.

இலங்கை அரசோடு இணைந்து உரிமை மறுப்பு அரசியலை முன்னெடுக்கும் நோக்கோடு முரண்பட்டவர்கள் இணைந்துகொண்டனர். படிப்படியாக ராஜபக்ச குடும்பம் தமிழ்ப் பேசும் மக்களுக்கு உரிமையை வழங்கும்; நாங்கள் உணவை மட்டும் வழங்குவோம் என்றனர். அடிக்கடி வடபகுதிக்குச் செல்லும் பாதுகாப்பையும் “தகமையையும்” பெற்றிருந்த இவர்கள், மக்கள் யாரும் உரிமை குறித்துப் பேசவில்லை அவர்கள் உதவியை மட்டும்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று தாம் கேட்டதை ஒப்புவிப்பதாகக் கூறினர். இதில் ஒருவர் உரிமை மறுப்பின் உச்சத்திற்கே சென்று, “யாழ்ப்பாணம் வரவேற்கிறது, ஆயுபோவன்” என்று கட்டுரை வேறு வடித்திருந்தார்.

உலகம் முழுவதும் தடுப்பு முகாம்களில் மனித அவலத்தைக் கண்டு செய்வதறியாது திகைத்துப்போயிருக்க, முகாம்கள் தரமாக அமைக்கப்பட்டிருக்கிறது மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றது இன்னொரு குழு.

இலங்கை அரச தமிழ்த் தொலைக்காட்சிகள், இணையங்கள், வானொலிகள், பத்திரிகைகள் என்று அனைத்துமே “அபிவிருத்தி” சூறாவளியை ஏற்படுத்தின.

இவற்றின் நடுவே ஆயுதக் கடத்தல் கிரிமினல் கே.பி களத்திற்கு வருகிறார். தடுப்பு முகாம்கள், இடம்பெயர் கூடங்கள், பல்கலைக் கழக மாணவர்கள் என்ற அனைத்து மட்டத்திலும் தன்னை அறிமுகப்படுத்துகிறார். நடந்தது நடந்ததாகட்டும் இனிமேல் நாம் அபிவிருத்தி அடைவோம் அதுதான் மக்களும் கோருகிறார்கள் என்கிறார்.

புலிகளின் ஆளுமை மிக்க ஒரு பகுதி கே.பி உடன் இணைகிறது. அதன் பிரதிநிதிகள் சிலர் கே.பியை சந்திக்கின்றனர். இப்போது அபிவிருத்திக்காகவும், மறுவாழ்விற்காகவும் உரிமையை அடகுவைக்கவேண்டும் என்று கே.பி ஆதரவுக் குழு புலம்பெயர் தமிழர்களைக் கோருகிறது. புலி ஆதரவு புலம் பெயர் தமிழர்கள் சிலர் கே.பியைச் சந்திக்கின்றனர். மேற்கிற்கு மீண்ட இவர்களில் பெரும்பாலோனோர் கே.பியையும் ராஜபக்சகளையும் நம்புங்கள் நாங்கள் மறுவாழ்வு வழங்குவோம் என்றனர்.

இவர்கள் சார்ந்த அனைத்துத் தரப்புகளுமே உரத்த குரலில் முன்வைத்த ஒரே முழக்கம் “உரிமை என்பது அரசியல் அழிவை மட்டுமே உருவாக்குகிறது, ஈழத் தமிழர்கள் எதிர்ப்பார்பதெல்லாம் மறுவாழ்வும் அபிவிடுத்தியும் மட்டும்தான்” என்பதே.

முன்பதாக அவதூறுகளைக் கட்டவிழ்த்து தமக்கிடையே முரண்பட்டுக்கொண்ட இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரச தலைமையில் ஒன்றிணைந்து கொண்டனர்.

புலம் பெயர் நாடுகளிலோ அல்லது தமிழ் நாட்டிலோ உரிமை குறித்தும் ராஜபக்ச அரசின் இனப்படுகொலை குறித்தும் பேசும் போதெல்லாம் தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கை என்றனர். மக்களைப் புரிந்து கொள்ளாத துரோகம் என்றனர். மக்களுக்கு உதவிசெய்ய மறுக்கும் கயமைத்தனம் என்றனர்.
போராட்டம் குறித்தும் மக்கள் உரிமை குறித்தும் பேசும் ஒவ்வொரு தனிமனிதனையும் குற்ற உணர்விற்விற்கு உட்படுத்தும் இவர்களின் தந்திரோபாயம், மனிதாபிமானம் மிக்க ஒரு பகுதி மக்கள் கூட்டத்தை கவர்ந்து கொண்டது. உரிமைக்கான குரல் என்பது மக்கள் விரோதமானது என்ற பொதுக் கருத்து புற்று நோய் போல பரவ ஆரம்பித்தது.

மக்கள் வேண்டாத ஒன்றை அவர்கள் மீது திணிக்கும் தீவிரவாதம் என்றனர். இவற்றையே பொதுப்புத்தியாக மாற்றி இலங்கைக்கு அப்பால் வாழும் தமிழர்கள் மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரசாரம் மேற்கொண்டனர்.
மிகுந்த தந்திரோபாயமாக, திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட இலங்கை அரசின் திட்டத்திற்குப் பலியாகிப்போன அப்பாவிகளான மனிதாபிமானிகள் ஆயிரமாயிரம்.

மனிதாபிமான உதவியும், மீள்கட்டமைப்பும், அபிவிருத்தியும், மறுவாழ்வும் மட்டுமே மக்களின் இன்றைய எதிர்பார்பு என்ற கருத்தை பொதுக்கருத்தாக்கிக் கொண்டவர்களின் பிரசாரத்தின் அடுத்த படி நிலை இவற்றையெல்லாம் ராஜபக்ச குடும்பத்தின் அரசின் துணையோடு மட்டுமே மேற்கொள்ளலாம் என்பதே.

இதே வேளை ராஜபக்ச அரசு பாதிப்படைந்த மக்களுக்கு உதவி தேவை என்றும் அதனைத் தமக்கு ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் என்றனர். உதவிகளைச் சுயமாக அனுமதித்தால் மறுபடி புலிகள் புகுந்துவிடுவார்கள் என்றனர்.

இப்போது உதவிக்கரம் நீட்ட்டுவோர் உரிமை பேசக் கூடாது அதே வேளை ராஜபக்ச அரசோடு இணைந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் உருவாக்கினர்.

இப்படித்தான் இலங்கைப் பேரினவாத அரச வலைப்பின்னல் இலங்கைக்கு வெளியால் கட்டமைக்கப்பட்டது.

இவர்கள் இதுவரை உருவமைத்த ராஜபக்ச ஆதரவுக் கருத்து இன்று குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கைங்கரியத்தைச் செய்தது வேறு யாருமல்ல. இலங்கை அரசு தான்.

இலங்கை அரசினால் கண்துடைப்பிற்காக உருவாக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் தற்செயலாக ஒத்துக்கொண்ட உண்மை
“நாங்கள் அண்மையில் வட பகுதிக்கு விஜயம் செய்து அங்கு மக்களைச் சந்தித்துப் பேசினோம். அதன் போது எம்மால் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. வடக்கு மக்கள் தங்களுக்குச் சமத்துமான உரிமைகளும் சம சந்தர்ப்பங்களும் வேண்டுமென்றே கோருகின்றனர் ” .

இந்த உண்மையை ஒப்புவித்தது வடபகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் துணையோடு சென்ற புலம்பெயர் கனவான்களல்ல. இந்திய துணைக்கண்டத்தின் தெற்கு மூலையில் மக்கள் பணத்தை கணக்கிடும் முன்நாள் புலி ஆதரவாளர்கள் அல்ல. கே.பியின் அடியாட்கள் அல்ல. வெறும் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட அரச ஊழியர்.

தமிழ்ப் பேசும் மக்களைச் சுட்டிக்காட்டி உரிமை குறித்துப் பேசக் கூடது என்று ஜனநாயவாதிகளதும், மனிதாபிமானிகளதும் வார்த்தைகளுக்குப் பூட்டுப்போடும் இலங்கை அரசி வெளியூர் அடியாட்களின் இரண்டுவருடக் கடின உழைப்பு தகர்ந்து தவிடுபொடியாகிவிட்டது.

6 thoughts on “தகர்க்கப்பட்ட இரண்டுவருட உழைப்பு: அஜித்”

 1. உண்மைகள் திரும்பத் திரும்ப நிருபணமாகின்றன. ஏனெனில் எவையும் மறைத்து நடத்தப்படவில்லை. ஒரு அகதி முகாம்> ஒரு தடுப்பு முகாம்>ஒரு அரசியற் கூட்டம் போதும். ஆயினும் ஒடுக்குமுறையாளர்களும் அதன் அடிவருடிகளும் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. மாறாக புதிய புதிய பொய்களைக் கட்டவிழ்த்து தங்கள் செயற்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

  புலிகள் காலத்தில் புலிகளை விமர்சிப்பவர்களை தேசத்துரோகிகளாக்கினர். இன்று அரசின் செயலை விமர்சிக்கவர்களை மக்கள் விரோதிகள் – யதார்த்த நிலையைப் புரியாதவர்கள் என்கின்றனர். ‘
  உரிமை குறித்தும் பேசும் ஒவ்வொரு தனிமனிதனையும் குற்ற உணர்விற்விற்கு உட்படுத்தும் இவர்கள்” >ஒரே நபர்கள்தான்.
  இன்றும் இன்றும் கருணா>கேபி.பிள்ளையான்!!!>

  1. அன்றும் இன்றும் என வரவேண்டும் !!

 2. உள்ளே வெள்ளயாகவும் வெளீயே பிறவுணாகவும் தேங்காய்களாக மாறீப்போன புலம்பெயர்ந்த வயோதிபர்கள், தமிழர்க்குத் தம்மை தலைவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.சிங்கள ஆதிக்கம் எதையாவது மனிதாபிமான நோக்கில் செய்தாலும் இவர்கள் அதை தடுத்து தம்மை முன்னிலைப்படுத்த முனைகிறார்கள்.எந்த சமூக உணர்வும் இல்லாமல் பகிடி எனும் போர்வையில் நாட்டிலே வறூமைதான் வீட்டிலே செல்வம் சேர்ப்பது தப்பா என் கேட் கிறார்கள்.இருப்பதை பகிர்வது பண்பாடு என வரும்போது மக்களது சோகங்களீல் ஆறூதலாக இருப்பதும் மனிதாபிமானம் என்பது ஏன் இந்த மனிதர்க்கு புரியவில்லை.

  1. சிங்கள ஆதிக்கம் – மனிதாபிமானம் ?

 3. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். இங்கு பட்டியலிட்டவர்கலோடு ஒப்பிடுகையில் தமிழர் கூட்டணியும் சளைத்தவர்கள்ளல்ல.

 4. எல்லோருக்கும் அவசரம். ஓய்ந்து கிடக்கும் தாய்மண்ணில் கொழுத்த லாபத்தைப் பார்த்து விட வேண்டும். தம்மிடமுள்ள சிறு தொகை என்றால் என்ன பெருநிதி என்றால் என்ன அதை பெருப்பிக்க வைக்க வேண்டும். கூடவே புலம்பெயர்ந்ந நாடுகளில் தாம் பெற்ற அரைகுறை அறிவு அநுபவங்களைக் கொண்டு தம்மை ஜம்பவான்களாக காட்டிக் கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி வளைந்து நெளிந்து பல்லைக்காட்டி நாயை விட கேவலமாக வாலை ஆட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லுகிறார்கள் “நாம் சமூக சேவகர்கள்”

Comments are closed.