ஜே.வி.பி.க்கும், அரசாங்கத்திற்குமிடையே முறுகல் வலுக்கிறது!

  
 நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்கமைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யாதிருக்க அரசாங்கத்திற்கு கூறுவதற்கு எந்தவொரு காரணமும் மீதமில்லையெனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பொறுப்பு வாய்ந்தப் பதவிகளில் இருந்துகொண்டு பொய்யான பிரசாரங்களையும், அடிப்படையற்ற வாதங்களையும் முன்வைப்பதன் மூலம் அந்தப் பதவிக்கு ஊடகத்துறை அமைச்சர் களங்கம் ஏற்படுத்துவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்து ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜே.வி.பி. இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
 
  இதுகுறித்து ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தனவிற்கு விளக்கமளிப்பதற்காக, ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

லக்ஸ்மன் யாபா அபேவர்த்தனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக ஜே.வி.பி. வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஓகஸ்ட் 19ம் திகதி தாங்கள் கருத்து வெளியிட்டிருந்தீர்கள். இதனைப் பார்க்கும்போது எமது நிலைப்பாடு குறித்து உங்களுக்கு போதுமான தெளிவின்மை இருப்பதாக உணரமுடிகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விற்கு இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான உரிமையில்லை. இதனைத் தங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜே.வி.பி. மஹிந்த ராஜபக்~வுடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தம் அலரி மாளிகையில் பகிரங்கமாக கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து அனைத்து ஊடங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்த ஒப்பந்தத்திலுள்ள 13 விடயங்களில் ஒரு விடயம் மாத்திரமே ஜே.வி.பி.யினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. அதுவே மஹிந்த ராஜபக்ச வை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவது. அந்தப் பணியை நாம் செய்துமுடித்தோம். எஞ்சிய 12 விடயங்களும் மஹிந்த ராஜபக்ச வினால் நிறைவேற்றப்பட வேண்டியவையாகும். இந்த ஒப்பந்தத்தின் 7வது சரத்திற்கு அமைய, 2005ம் ஆண்டு ஆரம்பமாகும் 6வது ஜனாதிபதி பதவிக் காலத்தின் பின்னர், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக மஹிந்த ராஜபக்ச  உறுதி வழங்கியிருந்தார். மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதென்பது அந்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

அரசாங்கத்துடன் இணைந்திருக்காது ஜே.வி.பி. இந்த ஒப்பந்தத்தை மீறியதாக தாங்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளீர்கள். 2005ம் ஆண்டுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஜே.வி.பி. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான பிழையான வாதங்களை முன்வைப்பதன் மூலம் தங்களுக்கு அந்த ஒப்பந்தம் குறித்து எந்தவொரு தெளிவும் இல்லையென்பது புலப்படுகிறது. அத்துடன், இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளமை குறித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக மஹிந்த ராஜபக்ச , ஜே.வி.பிக்கு மாத்திரம் உறுதி வழங்கவில்லை. இதற்காகவே அவர் மக்கள் ஆணையையும் பெற்றார். மஹிந்த சிந்தனையில் 84வது பக்கத்தை வாசிப்பதன் மூலம் இந்த விடயம் குறித்த மேலதிக விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முன்னர், குறைந்த பட்சம் அந்தக் கொள்கைப் பிரகடனத்தை வாசித்திருந்தால், இவ்வாறான பிழையான வாதங்களை முன்வைக்க நேரிட்டிருக்காது.

அத்துடன், ஊடகவியலாளர்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தீர்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல் எதற்காக நடத்தப்பட வேண்டும்? தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் மேலும் இரண்டு வருடங்கள் மீதமுள்ளன. குறித்த இரண்டு வருடத்திற்கு முன்னதாகவே மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி, மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தலை எதற்காக நடத்த வேண்டும்? 2005ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி, 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய மக்கள் ஆணையை உதாசீனப்படுத்தி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது பாரிய குற்றமாகும்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி, அதிகாரத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு பயணிக்கும் இந்த அரசாங்கத்திற்கு ஒரு ஒழுங்கமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதுகுறித்து முன்வைப்பதற்கு எவ்வித காரணமும் அரசாங்கத்திடம் இல்லை. எனவே இன்று மக்களுக்குச் செய்துள்ள மோசடி குறித்து ஜனாதிபதி என்ற ரீதியில் பொறுப்பு கூறவேண்டிய மஹிந்த ராஜபக்ச , மௌனித்துள்ளதுடன், தாங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் மிகவும் பொய்யான மற்றும் அடிப்படையற்ற வாதங்களை முன்வைக்க முயற்சித்து வருகின்றீர்கள்.

அரசியலை நடத்தக்கூடிய குறைந்தபட்சமான ஒழுக்கம் இருக்குமாயின் ஜே.வி.பி. செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய 2005ம் ஆண்டு கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணைக்கு அமைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்துச் செய்யுமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம். அத்துடன் இவ்வாறான பொய்யான அறிக்கைகளின் ஊடாக தாங்கள் வகிக்கும் பொறுப்புவாய்ந்த பதவிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனக் கோருகின்றோம் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.