ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை, அரசியல் வாழ்வு முடிந்தது, தமிழகத்தில் வன்முறை

jayalalithaகடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்ற ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவிற்கு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழகத்தின் அதிகார வெறிகொண்ட அரசியல் வாதியாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வித்திது பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 100 கோடி இந்திய ரூபாய்கள் அபராதம் விதிக்கப்பட்டது. பிணையில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக் காலம் நான்கு வருடங்களும் அதன் பின்னர் மேலும் ஆறு வருடங்களுமாக பத்து வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது. தனது நண்பியான சசிகலாவுடன் இணைந்து கோடிக்கணக்கில் மக்களின் சொத்தச் சுருட்டிய ஜெயலலிதா கடந்த பதினைந்து ஆண்டுகள் நீதி மன்றத்திற்கும் நீதித்துறைக்கும் கட்டுபடாமல் வழக்கை தள்ளிப்போட்டு வந்தார்.

1991ஆம் ஆண்டு ஜெயா முதன்முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றபொழுது, அவருக்கிருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடியே ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.2,01,83,000) என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு அறுபத்து ஆறு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.66,44,73,000) என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயாவின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 33 மடங்கு அதிகரித்தது. ஒரு நேர உணவிற்காக குழந்தைகள் ஏங்கும் தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான சொத்துக்களை உடமையாக்கிக்கொண்ட ஜெயலலிதா நீதித்துறையையும் அவமதித்துவந்தார்.

1996, டிசம்பரில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர் மீது வழக்குத் தொடுத்த அன்றைய தி.மு.க. அரசு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு இவ்வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றத்தையும் அமைத்தது.

2001 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்குவந்த ஜெயலலிதா, நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்தார். தனக்குத் தொண்டை கட்டிவிட்டதால் நீதிமன்றத்திற்கு வர முடியாது எனவும் விசாரணக் கேள்விகளை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் ஜெயலலிதா கூறி இந்திய அடிப்படைச் சட்டங்களையே அவமதித்தார். வழக்கு ஆரம்பித்த காலத்திலிருந்து அதனைத் இழுத்தடிப்பதற்காக 130 இற்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒவ்வொரு தடவைக்கும் கோடிக்கணக்கில் மக்கள் பணம் அழிக்கப்பட்டது.
இறுதியில் நரேந்திர மோடி அரசிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையேயான அதிகாரப் போட்டியின் பலனாக ஜெயலலிதா சிறையில் தள்ளப்பட்டார். ஜெயலலிதா உருவாக்கிவைத்திருந்த சாம்ராஜ்யம் இத்தோடு சரிந்து விழுந்தது. ஊழல் பேரரசின் ஊழியர்கள் பதைபதைத்துப் போகின்றனர்.

தமிழகம் எங்கும் வன்முறை தலைவிரித்தாடுகின்றது. தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது. மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர். மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சென்னையில் பல இடங்களில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு அருகேயும், பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி வீட்டுக்கு அருகேயும் ஆதிமுக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அங்கு பாதுகாப்பை காவல்துறையினர் பலப்படுத்தியுள்ளனர்.

எப்போதும் தம்மைச் சந்தர்ப்பவாதிகளாகவே காட்டிக்கொள்ளும் தமிழ் உணர்வாளர்கள் ஜெயலலிதா மீதான தீர்ப்பு தமிழர்களுக்கு எதிரானது என குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா மீதான தீர்ப்பினால் ஏற்பட்ட அனுதாப அலையில் அடிபட்டு விழுபவர்களைப் பொறுக்குவதற்காக நடத்தப்படும் இக் கேவலமான அரசியல் ஈழத் தமிழர்களின் பேரால் நடைபெறுகிறது. தவிர, கருணாநிதி என்ற மற்றைய ஊழல் பேர்வளி தண்டிக்கப்படவில்லை என்பதால் ஜெயலலிதா தண்டிக்கப்படக்கூடாது என்று கோரும் அரசியல் தமிழத்தின் பேரால் நடத்தப்படுகின்றது.

இதேநேரம் அதிமுக மகளிர் அணியினர் கதறி அழுவதையும், தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததையும் உள்ளூர் தொலைக்காட்சிகள் காட்டின.
இதனிடையே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில உள்துறைச் செயலருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

3 thoughts on “ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை, அரசியல் வாழ்வு முடிந்தது, தமிழகத்தில் வன்முறை”

 1. This is really contrasting to SL where no high profile politician is ever procecuted leave alone incarceration. Even an ex-PM was sent to jail there. Their system may have many holes but it seems their justice system works.

 2. ஜெயலலிதா வழக்குத் தினத்தில் ஏதேச்சையாக இந்திய ஒளிபரப்புக்களை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. புதிய தலைமுறைகள்-தந்தி என்பன காலையிலிருந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. வல்லுனர்கள் கருத்துக் கூறிக்கொண்டிருந்தனர். களநிலவரங்கள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஜெயாவின் தொலைக்காட்சிகள் மெளனமாக இருந்தன.
  ஆட்சித்துறையின் இரண்டு துறைகளான நீதித்துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையலான தொடர்பு இந்த வழக்கில் பிணைந்திருக்கிறது. பொதுவில் வழக்கின் நீண்ட காலத் தன்மை> பின்னரான ஜெயாவின் அரசியல் வாழ்வு> மக்கள் அபிமானம்> முதலமைச்சர் என்ற தகுதிகள் சாதகமான தீர்ப்பு வழங்கப்படும் என்றோ அல்லது குறைந்த தண்டனை வழங்கப்படும் என்றே கருதக் கூடிய நிலையைத்தான் ஏற்படுத்தியிருந்தது. 
  தீர்ப்பு வெளியாவாதில் காலதாமதம் ஏற்பட பதட்டநிலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. எனினும் காலதாமதமும்  நடைபெற்ற முன் ஏற்பாடுகளும் கடுமையான தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது என்பதையே உணர்த்தின. 
  வல்லுனர்களின் கருத்துரையில்> தீர்ப்பு காலையில் வழங்கப்பட்டிருக்கும்> தீர்ப்புக் குறித்து வாதம் இருதரப்பினராலும் முன்வைக்கப்படும் நிலையே தற்போது இருக்கும். மற்றது பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீதிபதி ஆலோசனைகளைப் பெறு முயலலாம். மேலும் நீதிமன்றம் முடியும் வரை தண்டனை என்ற அடிப்படையில் சகலரும் வெளியேறாது தடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.  
  தீர்ப்பு வழங்கப்பட முன்னர் அதிகார அரசியல் வாதிகளுடன் ஆராய்வுகள் இருந்திருக்கலாம் என்பது மற்றொரு கருத்து. 
  தற்போதைக்கு இக்கருத்துக்கள் சரியானவை என்றே தெரிகிறது. 
  இத்தகைய குற்றம் ஒன்றிற்கு ஒரு வருடம் முதல் ஏழு வருடம் வரையிலான தண்டனை வழங்கப்படலாம். தண்டனைக்காலத்தை நிதிபதிதான் தீர்மானிக்க வேண்டும். அரசியல் பிரமுகர் என்ற வகையில் உயர் அரசியல் வாதிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு தீர்ப்ப வழங்கப்படலாம் என்ற கருத்தும் கூறப்பட்டது. 
  வழங்கப்படக்கூடிய தண்டனைகள் மூன்று வகைப்படலாம்.
  1. இருண்டு வருடத் தண்டனை. இது அடிப்படையில் குற்றத்திற்கான தண்டனை வழங்கும் நீதியின் நோக்கிலானது.
  உடனடியாகப் பிணையில் வெளிவரக்கூடியதும் அரசியல் பாதிப்புக்கள் அற்றதுமான தீர்ப்பு
  2. மூன்று வருடத்திற்கு உட்பட்ட தண்டனை. குற்றத்திற்கான தண்டனை வழங்கும் நீதியின் நோக்கிலும் அரசியல் ரீதியாக தண்டனை வழங்கும் நோக்கிலுமானது.
  இது உடனடியாகப் பிணையில் வெளிவரக்கூடியதும் அரசியல் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பு.
  3. மூன்று வருடத்திற்கு மேற்பட்ட தண்டனை. இது அரசியல் ரீதியிலான தண்டனை வழங்கும் நோக்கிலானது. – இது உடனடியாகப் பிணையில் வெளிவர முடியாததும் நீண்ட கால அரசியல் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பு.

  தசார விடுமுறைகாலம் என்பதை நீதிபதி அறிந்து தீர்ப்பிற்குரிய நாளை தெரிந்தெடுத்திருக்காலம் என்பது ஜெயலலிதாவை சில நாட்களாக சிறையில் தள்ள வேண்டும் என்ற நோக்கிலாக இருக்காலம். 

  இது குறித்து அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அ.தி.மு.க கட்சியினர் கூறவுள்ள கருத்துக்களை வைத்துத்தான் அவற்றை அறியலாம். 
  ஒருவகையில் அரசியல் நோக்கிலான தண்டனைதான் இது எனின் அந்த அரசியல் நோக்கு நல்லதா? தீயதா? ஒரு பக்கச் சார்பானதா? என்பதை ஆராய வேண்டும். 
  நட்படன்>
  விஜய்

Comments are closed.