ஜனாதிபதி ராஜபக்ஷவின் விருந்தினர்களாக எம்.பி.க்கள் அங்கு சென்றிருக்கக் கூடாது:ராமதாஸ்

tamilrajyஇலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசு சார்பில் அனுப்பப்படவி்ல்லை என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அரசின் சார்பில் குழு அனுப்புவதாக இருந்தால்தான் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும், சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சென்றுள்ள குழுவில் உள்ள உறுப்பினர்களின் விமானக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளைக் கூட அந்தந்தக் கட்சிகள்தான் ஏற்றுள்ளன என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும முகமாக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணத்துக்கு அனுமதியளித்து யார் என்றும், குழுவை தேர்வு செய்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையிலிருந்து திரும்பியதும் கருணாநிதியிடம் அறிக்கை அளிக்குமா அல்லது நாடாளுமன்றத்திடம் அறிக்கை அளிக்குமா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.

அண்மையில், தமிழர்களின் நிலை குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, அந்த முகாம்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுப்பியுளளார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் குழுவை மட்டும் இலங்கைக்கு அனுப்புவதன் நோக்கம் குறித்து சந்தேகம் வெளியிட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி ராஜபக்ஷவின் விருந்தினர்களாக எம்.பி.க்கள் அங்கு சென்றிருக்கக் கூடாது என்றார்.