ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை: சித்தார்த்தன்

sithatharthan-200ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி யாரை ஆதரிப்பது என்று இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ள அவர்,

“எந்தவொரு ஜனாதிபதியும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்க்கும் வகையில் தீர்வினை முன் வைக்கப் போவதில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்,

“இன்று தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் எமது பிரச்சினையில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெற்றதாக இல்லை.

தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை சரியான நிலைப்பாட்டை எடுத்து பலமான சக்தியாக மாறினால் தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நிலைப்பாடு பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்படுகின்றது.

இந்நிலையில் தான் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ளோம். எமக்கிடையில் சில உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ்ச் சமூகம் பலவீனப்பட்டுள்ளதை சகலரும் அறிவர். இதனைக் கருத்தில் கொண்டு எமது சமூகம் பயனடைய தமிழ்ப் பேசும் கட்சிகள் இணைந்து உரிய தீர்வினை முன் வைக்க வேண்டும்” என்றார்.