ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு தமிழ்க்காங்கிரஸ் நேற்றுத் தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு.அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி, கூட்ட மைப்பு இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது முடிவை நேற்று எடுத்தது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் விசேட பொதுக் குழுக்கூட்டம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அ.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. சுமார் எழுபத்தியைந்து பேர் வரை அங்கு பிரசன்னமாகி யிருந்தனர். இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விளக்கங்கள், வியாக்கியானங்களை விவரிக்கும் அறிக்கை ஒன்றைக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு வாசித்தார்.

அந்த அறிக்கை பிரேரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று தேர்தலைப்பகிஷ்கரிக்கும் முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டதாக அறியவந்தது. எனினும், தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவுக்குத் தனிப்பட்ட முறையில் கட்சித் தலைவர் அ.விநாயகமூர்த்தி உடன்படவில்லை என்றும் தெரியவருகின்றது. எவ்வாறெனினும் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விருப்பத்துக்கு அமைய பகிஷ்கரிப்பு முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.

3 thoughts on “ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு தமிழ்க்காங்கிரஸ் நேற்றுத் தீர்மானம்!”

 1. ஒரு கட்சி முடிவெடுத்தால் அது உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும்.
  இம் முடிவு கூடி எடுக்கப்பட்ட முடிவு. தன்னிச்சையானதல்ல.

  தமிழ்க் காங்கிரஸின் தோற்றுவாய் படுபிற்போக்கானது தான்.
  ஆனால் 1976 முதல் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட யோக்கியமாகவே தனது அரசியலை நடத்தியுள்ளது.
  அதன் நிலைப்பாட்டை நான் பலமுறையும் நிராகரித்த போதும், அது தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ நடத்தைகளுடன் ஒப்பிட்டால் ஊசலாட்டமற்றது எனவும் அதன் தலைவர்கள் சம்பந்தன், ஆனந்தசங்கரி வகையறாக்களை விட உறுதியான நிலைப்பாட்டுடனே நடந்து வந்துள்ளனர் எனவும் ஏற்கிறேன்.

  வினாயகமூர்த்தி தனது நிலைப்பாடு வேறு என்று அறிக்கை விடாத பட்சத்தில், இக் கருத்து வேறுபாடு ஏன் “அறியவந்த தகவலாகக்” கசியவிடப்பட வேண்டும்?
  இதற்குப் பின்னால் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் ஒரு ஊடக நிறுவனமும் உள்ளது என்பது கவனத்துக்குரியது.

  நாம் அறிய வேண்டியது தமிழ்க் காங்கிரஸ் கூறுகிற காரணமே ஒழிய ஊடக அரட்டைகளல்ல.
  அந்தக் காரணங்களை முன்வைத்து விவாதிப்பது பயனுள்ளது.

 2. உப்பு சப்பபில்லா காங்கிரச் ஒரு அரிக்கை வெலியிட்டால் அதை குப்பயில் பொடுங்கல். எங்கல் மக்கல் உருமைதான் வாக்கு அதை இழப்பது தகாது.விடிவெள்லி மலரும்.

  1. பிற கூட்டணிக்காரரின் உப்பு சப்பில்லா அறிக்கைகளும் மட்டும் திறமா?

   முதலில் பார்த்தல்லவா குப்பையில் போட வேண்டியது எது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

   ஏன் சொல்கிறார்கள் என்று அறிய முடியாமலே மறைக்கிறார்களே தமிழ் ஊடக எசமானர்கள்.
   அவ்வளவு அரச விசுவாசமா அல்லது யூ என்பி விசுவாசமா?

Comments are closed.