ஜனநாயக முகமூடி அணிந்த இத் தேர்தல்களால் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்பட முடியாது – மக்கள் பங்கு கொள்வதிலும் பயனில்லை:புதிய ஜனநாயக கட்சி.

புதிய ஜனநாயக கட்சி                       04-08-2009
ஊடகங்களுக்கான அறிக்கை     
     
 எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெற இருக்கும் யாழ்- மாநகரசபை, வவுனியா நகரசபை, ஊவா மாகாணசபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் மக்கள் எவருக்கு வாக்களித்தாலும் எவ்வித நன்மைகளும் மாற்றங்களும் இடம்பெறப் போவதில்லை. எல்லாத் தரப்புக் கட்சிகளும் கூட்டணிகளும் பழைய பானைகளும் பழைய கள்ளுகளும் போன்றனவே. எவரிடமும் மக்களுக்கான புதிய கொள்கைகளோ மாற்றங்களுக்கான புதிய திட்டங்களோ இல்லை. தத்தமது அதிகாரப் பிடிகளை வலுப்படுத்தவும் அரசியல் ஆதிக்கத்தைத் தொடரவுமே தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதற்கப்பால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கல்ல என்பதே காணப்படும் உண்மை நிலையாகும். ஆதலால் இத் தேர்தல்களை அர்த்தமுள்ளவையாகக் கொள்ள முடியவில்லை. மக்கள் பங்கு கொள்வதிலும் பயனில்லை என்றே புதிய ஜனநாயகக் கட்சி கருதுகின்றது.
 

இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் எதிர்வரும் மூன்று தேர்தல்கள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவ் அறிக்கையில், வடக்கில் இயல்பு வாழ்வும் ஜனநாயக சுதந்திரங்களும் அற்ற நிலையில் நடாத்தப்படும் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டு நிர்ப்பந்தப்படுத்தும் ஒன்றாகவே காணப்படுகிறது. இவற்றில் மும்முரமாகப் பங்கு கொள்ளும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மற்றும் தமிழர் தரப்புக் கட்சிகளும் எந்த முகத்தோடு மக்களிடம் சென்று வாக்குக் கேட்கிறார்கள் என்பது தான் விசனத்திற்குரியதாகும். இவர்கள்அனைவரும் பின்பற்றிய அல்லது நடைமுறைப்படுத்திய கொள்கைகளால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களும் இழப்புக்களும் இன்றுவரை அவற்றிலிருந்து மீள முடியாது அவலங்களுக்குள் சிக்கித் தவிப்பதையும் எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தாங்கள் வகித்த  அரசியல் தலைமைத்துவப் பாத்திரத்தையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி எவ்வித மறுபரிசீலனைகளையோ அன்றி சுயவிமர்சனத்தையோ எவரும் முன் வைக்கவில்லை. அவ்வாறு இருந்திருப்பின் முதலில் மக்களிடம் தமது தவறுகளுக்கும் மக்கள் அழிவுகளுக்கும் அரசியல் மன்னிப்புக் கேட்டு புதிய கொள்கைகளையும் புதிய அரசியல் திட்டங்களையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது தத்தமது பழைய நிலைப்பாடுகளின் ஊடாக அதிகாரப் பதவிகளையும் அரசியல் ஆதிக்கப் பிடிகளையும் வலுப்படுத்தி தமிழ் மக்கள் மீது தொடர்ந்து ஆதிக்கம் செய்வதை நோக்காகக் கொண்டே இத் தேர்தலில் பங்கு கொள்கின்றனர். இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் இத்தேர்தலில் அக்கறை கொள்வதும் கலந்து கொள்வதும் தவறான கொள்கைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்து விடும் என்றே எமது கட்சி கருதுகின்றது.
 மேலும் மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு உருப்படியாக எதனையும் செய்யாத ஆளும் கட்சியோ அன்றி எதிர்கட்சியோ அவற்றுடன் இணைந்து நிற்கும் மலையகக் கட்சிகளோ பழைய வழிகளிலான ஏமாற்றுக்களை முன்வைத்தே ஊவா மாகாணசபைத் தேர்தலிலும் பங்கு கொள்கின்றன. அங்கும் பழைய பானைகளும் பழைய கள்ளுகளுமாகவே காணப்படுகின்றன. சிலர் தம்மைப் புதிய பானைகளாகக் காட்ட முற்படும் போதும் உள்ளே இருப்பது பழைய கள்ளாகவே காணப்படுகிறது. எனவே அங்கும் அதிகாரப் பதவிகளும் அரசியல் தொழிற்சங்க ஆதிக்கங்களும் நீடிக்கப்படுவதற்காகவே இத் தேர்தலில் நிற்கின்றனர்.

 எனவே ஜனநாயக முகமூடி அணிந்த இத் தேர்தல்களால் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்பட முடியாது என்பதை மக்கள் உணர்ந்து புதிய மாற்றுக் கொள்கைகளுக்கும் புதிய அரசியல் வேலைத் திட்டங்களுக்கும் தம்மைத் தயார்படுத்துவதே விடிவிற்குரிய பாதை என்பதையே எமது புதிய ஜனநாயகக் கட்சி இவ்வேளை சுட்டிக் காட்டுகிறது.
சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்