சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!: வளவன்

solvethella‘சொல்வதெல்லாம் உண்மை’ – இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

அடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க” என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

சொல்வதெல்லாம் உண்மையில் ‘ கலந்து கொண்ட ஒரு பெண் ! ஜீ டி.வி.யின் விற்பனைப் பொருள்.
சொல்வதெல்லாம் உண்மையில் ‘ கலந்து கொண்ட ஒரு பெண் ! ஜீ டி.வி.யின் விற்பனைப் பொருள்.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார் !
மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார் !

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர். கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.

’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

விஜய் டி.வி. ஷோக்கள் !
விஜய் டி.வி. ஷோக்கள் !

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு. ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!
மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

solvethellam-1இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும் தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

நன்றி : வினவு

4 thoughts on “சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!: வளவன்”

  1. நீங்கள் சொல்லிறது 100 வீதம் சாp எண்டு சொல்ல முடியாது. Solavathellam unmai thanai kudumpankala serthu vachirukku endu nenkal pakalaiya. Kuttam oruvar meethu sumathuvathu very easy.ok. Yen avankada kudumpa pirachanaiya nenkal ivalavu katjaikirenkalee, nenkal therthu vaikka vendiyathu thane. Oru nallathu nadakkanum endal oru sila kasap punarvukal nadakkath than seijum? T.v show ellam entatainment. 

  2. முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காவல் துறையால் முடியாத பல விஷயங்களை இந்த நிகழ்ச்சி கொண்டு வருகிறது. இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் தான் வருகிறது.இது ஒரு ஆரோக்கிய சூழலே.

  3. There are a number of inaccuracies and misinformation in this article. It states only people in the lower class of the society participate in this and are exploited by the TV. I have seen a number of episodes where middle class people also have participated. It also claims it is done for the benefit of the TV alone. The participant too benefits. It exposes the criminals to the general public and often times they are forced to admit and correct themselves or live with shame among the people for their cruelty to others. Since it is a high profile program the law enforcement too is pushed to take action in such cases. Can you give an alternative means where this can be done discretely and force the wrongdoers to correct what they have done to the victims. Valavan go and do something better than the TV instead of nit picking here.

  4. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நிறுத்தி பல மாதங்கள் ஆகின்றன.பழைய நிகழ்ச்சிகள்தான் ஒளிபரப்பாகின்றன.எனக்கும் என் மனைவி செய்த கொடுமைகளை சொல்லி தீர்வு கேட்க சொல்வதெல்லாம் நிகழ்ச்சி producer,reporter,zee தமிழ் டிவி என்று பிப்ரவரி2014 ல் இருந்து போன் மூலம் தொடர்பு கொள்கிறேன். ஆபீஸ் மாற்றுகிறோம்,கூப்பிடுகிறோம் என்று சொல்கின்றனர். கோர்ட்டில் நியாயம் கிடைக்க அலைவதை விட நிம்மதியாக நியாயம் பெறலாம் என்று முயற்சித்து அயர்ச்சி அடைந்து விட்டேன்.

Comments are closed.