சென்னை ஓவியக்கல்லூரியில் ஒரு தற்கொலை?

150 ஆண்டுகால பழமை வாய்ந்ததும் நவீன ஓவியர்கள் பலரையும் உருவாக்கியதுமான சென்னை ஓவியக் கல்லூரியின் வளாகத்திற்குள் ஒரு மாணவர் உயரமான மரமொன்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக நண்பர் தொலைபேசி செய்து சொன்னார். தொங்கிக் கொண்டிருப்பதாக சொன்ன அந்த மாணவருக்காகவோ அல்லது அவருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவருக்காகவோ சில மனித உரிமை ஆர்வலர்கள் அரங்கக் கூட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்த நிலையில் அந்த மாணவன் தூக்கிட்டுக் கொண்டார். நானும் பாரதிதம்பியும் உடனே அலுவகத்திலிருந்து கிளம்பி எழும்பூரில் இருக்கிற ஓவியக் கல்லூரிக்குச் சென்ற போது அதன் பெரிய இரும்புக் கதவுகள் சாத்தப்பட்டிருந்தது.

பெரும்பலான ஓவியக் கல்லூரி மாணவர்கள் தங்கள் மீது தோஷம் பட்டும் விடும் என்று பயந்தோ என்னவோ நடந்தது எதுவுமே தெரியாது என்பது போல ஒதுங்கி நின்றார்கள். நான் நினைக்கிறேன் வருங்கால ஓவியர்கள் என்றால் மிகவும் மென்மையான குணம் படைத்தவர்கள் என்பதால் காக்கிச் சட்டை போலீஸ், தூக்கு, பிணம் என்று அஜௌவுகரியப்பட்டு ஒதுங்கி விட்டார்கள் என் நினைத்துக் கொண்டேன்……

கல்லூரிக்குள் செல்ல போலீஸ் அனுமதிக்க வில்லை இருபது நிமிடங்களுக்குள் ஒரு மினி ஆம்புலன்ஸ் கல்லூரிக்குள் இருந்து வந்தது. பூட்டப்பட்ட இரும்புக்கதவுக்கு வெளியே சில மாணவர்கள் கதறி அழுதார்கள். கதவு திறக்கப்பட்டதும் கும்பலாக ஓடிப்போய் பிணத்தைப் பார்த்தார்கள். பூட்டிய கதவுக்குப் பின்னால் நின்றிருந்தவர்கள் எல்லாம் இப்போது ஆம்புலன்சுக்குப் பின்னால்……… கதவு முழுமையாக திறந்தது மிக அழகாக, நேர்த்தியாக ஆம்புலன்ஸ் கதவுக்கு வெளியே சென்று மறைந்தே விட்டது………….. சில நிமிட அழுகையை சட்டை செய்யாத காக்கிகள் இவ்வளவு எளிதாக ஒரு தற்கொலையை அதுவும் ஒரு கல்லூரிக்குள் கையாண்டதை நான் சமீப காலமாக எங்கும் பார்க்கவில்லை.

தனது சக மாணவன் ஒருவன் இறந்து விட்டான். அதுவும் தூக்கில் தொங்கி…….. அதுவும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே…………..ஆனால் எந்த எதிர்ப்பும் இவர்களிடம் இல்லை.

தூக்கில் தொங்கிய மரத்தின் கீழே கும்பலாக நின்றிருந்த மாணவர்களை வெளியே போங்கள் என்று போலீஸ் சொன்னதாம் இவர்களும் வெளியில் வந்து விட்டார்களாம்…….

தூக்கில் தொங்கிய மாணவரின் பெயர் சசிகுமார்.. செம்மொழி மாநாட்டில் திருவள்ளுவர் சிலையோ திருக்குரளோ செய்ய நினைத்து நிர்வாகத்திடம் அதற்குரிய பொருட்களை வாங்கிக் கேட்க நிர்வாகம் மறுக்க தானே வசூலித்து திருக்குரள்களைச் செய்ததாகவும் சொன்னார்கள் பின்னர் மனோகரன் தொடர்பான கசப்பான எண்ணங்களோடு இருந்த சசிகுமார் மனோகரின் காரை உடைத்து விட மனோகரன் சசுகுமார் மீதும் அவரைத் தூண்டியதாக சிலர் மீதும் புகார் கொடுக்க யஷ்வந்த் என்னும் மாணவரையும் அவரது தம்பியியையும் பிடித்துச் சென்ற முருகேசன் எஸ்.ஐ சாதியைச் சொல்லியே திட்டியிருக்கிறார்.

இதில் கைது செய்யப்பட்ட யஷ்வந்த் தலித் மாணவர் சசிகுமார் தலித் மாணவர் அல்ல என்கிறார்கள். இந்த கலாட்டக்களுக்குப் பிறகு இப்போது மனோகரன் அந்தப் பொறுப்பில் இல்லை ஓவியக்கல்லூரி விவாகரங்களை விசாரிக்க ஒரு நபர் கமிஷனை அரசு நியமிக்க அந்தக் குழுவும் விசாரணை நடத்தியிருக்கிறது. சசி தூக்கு மாட்டிக் கொண்ட அன்றும் இந்த விசாரணை கமிஷனில் பங்கேற்றிருக்கிறார்.

ஆனால் மனோகரன் மட்டும் சசுகுமார் மீது சரமாறியாக குற்றச்சாட்டுகளை வீச சசிகுமார் அமைதியாகவே இருந்திருக்கிறார். கடைசியில் இருபதடி உயரத்தில் தூக்கிட்டுக் கொண்டார். நடந்து முடிந்திருக்கும் இந்த அவலம் குறித்த சரியான , முழுமையான தகவல்களைத் திரட்ட முடியவில்லை. இதிலும் தகவல் பிழை இருக்கலாம். ஆனால் ஓவியக் கல்லூரியில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வெளியே நின்றிருந்த மாணவர்களிடம் பேசிய போது ” எங்களுக்கு எதுவுமே தெரியாது சார்” என்றனர்.

“இல்லை இப்படி எல்லாம் சொல்கிறார்களே” என்று கேட்டால்,

” ஏதோ பசங்களுக்கிடையில் கோஷ்டி மோதலாம்” என்று மென்று முழுங்கினார்கள். தெரிந்த பையன் ஒருவன் மூலமாக விசாரித்த போது பல செய்திகளைச் சொன்னதோடு இன்னொன்றையும் சொன்னான். ஓவியக்கல்லூரி மாணவர்களிட்டையிலேயே ஜாதி ரீதியான அணிச்சேர்க்கை கல்லூரிக்குள் இருந்ததாக சில மாணவர்கள் சொல்கிறார்கள். அங்கே படிக்கிற தலித் மாணவர்களிடம் தாங்கள் சாதி ரீதியாக ஒடுக்கப்படுவதான குற்றச்சாட்டு இருக்கிறது.

தேவர் சாதியைச் சார்ந்த மனோகரன் தங்களை ஒடுக்குவதாக மாணவர்கள் சொல்கிறார்கள் வேறு சில மாணவர்களிடம் கேட்டால் அப்படி எல்லாம் இல்லை மனோகரன் சார் நல்லவர்தான் என்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட மாணவர் தலித் என்றார்கள். கடைசியில் தலித் இல்லை என்றார்கள். மனோகரனுடன் இணைந்து செயலாற்றும் ஒருவரிடம் கேட்ட போதும் தற்கொலை செய்து கொண்ட சசிகுமார் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் இல்லை என்று சொன்னார். சரி தற்காலிக பிரின்சிலாபைப் பார்ப்போம் என்று போனால் அந்த பிரின்சிபால் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசினார்.

எது கேட்டாலும் எனக்குத் தெரியாது என்றார். கடைசியில் ஒரு மாணவர் சொன்னால் “சார் எங்கள் கல்லூயில் எப்போதுமே பிரின்சிபாலாக வருபவர்களுக்கிடையில் கோஷ்டி மோதல் இருக்கும். ஆளுக்கொரு கோஷ்டியை உருவாக்குகிறார்கள். முன்னாள் பிரின்சிபால் ஓவியர் சந்துருவுக்கும் இப்போதைய பிரின்சிபால் மனோகரனுக்கும் இருக்கும் பிரச்சனையில் மாணவர்களையும் அவர்கள் அணி சேர்க்கிறார்கள். ஏழ்மை, வசதியில்லாத கல்லூரி என்று வருகிற மாணவர்கள் இதற்குப் பலியாகிறார்கள்” என்றார் அந்த மாணவர் அதில் கொஞ்சம் உண்மை இருப்பது போலத் தோன்றியது.

சென்னை ஓவியக்கல்லூரியின் பிரின்சிபாலாக இருந்த சந்துரு ஓய்வு பெற்றுச் செல்லும் போது அந்த இடத்திற்கு வருவதற்கான தகுதியோடு ஐந்து பேர் சீனியாரிட்டி அடிப்படையில் இருந்தும் அரசின் உயர்பீடங்களில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கல்லூரி முதல்வர் பதவிக்கு மனோகரன் வந்ததாகச் சொல்கிறார்கள்.

இதற்கிடையில் சென்னை நகரம் முழுக்க தமிழர் பண்பாட்டு சிலைகளை நிறுவ தமிழக முதல்வர் கருணாநிதி அரசு முடிவெடுத்து அந்த வேலையை சந்துருவிடம் கொடுக்க அவர் பதவியை விட்டுச் சென்றதும். மனோகரன் “அவர் ரிடையர்ட் ஆகி விட்டார். ஆகவே அது எனக்கு வேண்டும் என்று கேள்வி எழுப்பியதாகவும்” சொல்கிறார்கள். எது எபப்டி என்றாலும் முன்னாள் முதல்வர் சந்துருவுக்கும் பின்னர் முதல்வராக வந்த மனோகரனுக்குமிடையில் பிரச்சனை இருந்தது 100 சதவீதம் உண்மையாக தெளிவாகிறது.

ஆனால் மனோகரின் பக்கம் நின்றவர்கள் முழுக்க தேவரின மாணவர்கள் என்றும் சொல்லி விட முடியாது. சந்துருவுடன் இருந்த மாணவர்களும் முழுக்க தலித் மாணவர்கள் என்றும் சொல்லி விட முடியாது. ஆனால் ஆதிக்க சாதி மனப்போக்கு மனோகரனிடம் உண்டு என்பதை அவர் தலித் மாணவர்களை நடத்திய விதத்திலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். அவரது கார் சசிகுமாரால் உடைக்கப்பட்ட போது தேவர் காரை உடைச்சிட்டு நீங்க நிம்மதியா இருப்பீங்களாடா? என்று கேட்டுதான் போலீஸ் தலித் மாணவர்களைத் தாக்கியிருக்கிறார்கள்.

தவிறவு மனோகரன் இக்கல்லூரியில் சேர வேண்டுமென்றால் அதற்கான நுழைவுத்தேர்வு பயிர்ச்சி ஒன்றை நடத்தி மாணவர்களிடம் பாரபட்சம் காட்டியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் எந்தக் கோஷ்டியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தக் கல்லூயிரில் ஓவியம் மற்றும் கற்றுக் கொள்ளும் வாய்ப்போ அதற்குண்டான சூழலோ அங்கு இல்லை. வழங்கப்படும் நிதிகள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது அதில் ஆதாயம் அடைந்தவர்கள் யார் என்ற விசாரணையை நேர்மையாக விசாரிக்கிற பட்சத்தில் பல உண்மைகள் வெளிப்படக் கூடும்.

ஆனால் ஆதிக்கசாதி அதிகாரமே திராவிட அதிகாரமாக தற்காலத்தில் உருமாற்றம் அடைந்து விட்ட சூழலில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்காசாதி அதிகாரத்தை மீறி உண்மை வெளிப்படும் என்று நான் நம்பவில்லை.

உண்மை அறியும் குழு

பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மையறியும் குழு ஒன்று கல்லூரி சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சம்பர்ப்பித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில் முழு விபரங்களும் உள்ளன. ஓவியக் கல்லூரிச் சூழலை எளிமையாகப் புரிந்து கொள்ள இந்த அறிக்கை மிக அடிப்படையான ஆவணமாக இருப்பதால் இத்துடன் அதையும் (பி.டி,.எப்ஃ) இணைத்துள்ளேன். என்னால் அதை கடைசி வரை இணைக்கவே முடியவில்லை.

மனோகருக்குத் தொலைபேசி செய்து கேட்டால் என்ன என்று தோன்ற அவருக்கு தொலைபேசினேன் “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா? என்ற பாடல் கேட்டது . அவர் போனை எடுத்தார்…………. ஒரு மனித உயிர் என்ற அளவிலேனும் அந்த ஆளிடம் ஒரு சிறு வறுத்தம் கூட இல்லை… அசலாட்டான மனநிலையில் ” எல்லாம் கஞ்சாப் பசங்க சார். தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சசிகுமார் நல்ல பையந்தான் அவனை கெடுத்துட்டாங்க என்றூ பழியை மற்ற மாணவர்கள் மீது போட்டார். அத்தோடு நடந்து விட்ட சம்பவம் தொடர்பான எவ்வித பதட்டங்களோ படபடப்போ அவரிடம் இல்லை………… அடச் சீ என்ன மனிதர் இவர்………… என்ற எண்ணம் மனதிற்குள் ஓடியது ……ஒட்டு மொத்தமாக அபத்தமான கல்லூரிச் சூழலும் ஒரு மாணவரின் கோபத்தை சாதி, அதிகாரம், போலீஸ் கொண்டு அடக்கி சரி செய்யலாம் என்கிற ஆதிக்க போக்குமே சசிகுமாரின் தற்கொலைக்கு காரணம் என நாம் முடிவுக்கு வரும் நியாயங்கள் உள்ளன.

சசிகுமார் ஒரு கடிதம் எழுதியதாகச் சொன்னார்கள். நான்கு அல்லது ஐந்து பக்கங்களில் எழுதப்பட்ட அக்கடிதத்தில் மழை பெய்யவில்லை….காடு விளையவில்லை…….ஆகவே மரம் நடுங்கள்………நல்லவர்களாக வாழுங்கள்..என் உடலை தானம் செய்யுங்கள்……. முள்ளிவாய்க்காலை நாம் மற்ந்து விடக்கூடாது என்று இருந்தது………..ஆனால் ஐந்து பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தை மீண்டும் மீண்டும் வாசித்த போதும் அந்த மாணவன் எங்குமே தான் எதற்காக தற்கொலை செய்து கொண்டோம்……என்றோ தனது கனவை ஆசையை அல்லது ஏதோ ஒன்றை எப்படி கல்லூரி நிர்வாகம் காயடித்தது எப்படி என்றோ எதையுமே எழுதவில்லை…….. மனோகரன் பற்றி ஒரு வரி கூட இல்லை……..படித்து முடித்ததும் ……”அடப்பாவி ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்ததுக்காடா நீ தூக்கு மாட்டிக்கிட்ட……….” என்றுதான் தோன்றியது. இந்த விஷயத்தில் தனது பிரச்சனை குறித்து எழுதுகிற அரசியல் உணர்வோ, அடிப்படை அறிவு கூட அந்த மாணவனுக்கு இல்லை என்று சொல்வதை விட பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் இந்த மாணவர்களை எப்படி நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள் என்பதற்கு அந்தக் கடிதமே சாட்சி…… தவிறவும் அங்கே கூடி நின்ற அனைத்து மாணவர்களுமே அந்தக் கடிதத்தைப் போலவே இருந்தார்கள்….சாதியால் அவர்கள் பிளவுண்டிருக்கும் அதே நேரத்தில் மறுக்கப்பட்டிருக்கும் பப்ளிக் டாய்லெட்டாக இருக்கும் தனது கல்லூரியை சீரமைத்து தனது கல்வி உரிமைக்காகக் கூட போராடுகிற எண்ணம் அற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள்……….இனியும் இவர்கள் இக்கல்லூரியில் படித்தால் எல்லோரும் தொங்க அங்கே ஆளுக்கொரு மரம் மட்டுமே இருக்கிறது.

தேவர் , தலித் என்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லா ஏழை மாணவர்களுமே தொங்க சாத்தியமான உயரமான மரங்கள்…………

செம்மொழி மாநாட்டிற்குச் செலவு செய்வதில் கால் பங்கிற்கும் குறைவாக இந்தக் கல்லூரிக்குச் செலவு செய்து கச்சாப்பொருட்கள் வாங்கி, கழிப்பிட, தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட பின் புலத்தில் இருந்து வரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஓவிய உண்ர்வை ஊட்டி வளர்க்காமல் தொடர்ந்து இகல்லூரியை திறந்த வெளி கழிப்பிடம் போலவே வைத்திருக்கிறது அரசு. பிரின்சிபாலிடம் பேசி விட்டு வெளியில் வந்தோம்.

கல்லூரிக்கு எதிரே நீண்ட மதிற்சுவரில் திருவள்ளுவர், கண்ணகி, ராஜராஜசோழன்., ராஜேந்திரசோழன், மனுநீதிச் சோழன் போன்ற தமிழ் மன்னர்களின் படங்கள் பல வண்ணங்களின் வரையப்பட்டிருந்தது. வெளியில் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் அச்சம் படர்ந்திருந்த அந்த ராஜராஜ சோழன்களைக் காணவில்லை………

டி.அருள் எழிலன்

3 thoughts on “சென்னை ஓவியக்கல்லூரியில் ஒரு தற்கொலை?”

  1. மனோகரன் என்பவன் நல்ல ஓவியனே கிடையாது .சாதி வெறியன் !!!இவன் எப்படி பிரின்சிபாலாக இருக்க முடியும் ?
    பேராசிரியர் அ.மார்க்ஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான்.

Comments are closed.