செனிகல் சிலை குறித்த சர்ச்சை!

   செனிகல் நாட்டு அரசாங்கம், அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில், சர்ச்சைக்குரிய பிரமாண்டமான சிலை ஒன்றை திறந்து வைக்கிறது.
அமெரிக்காவில் இருக்கின்ற சுதந்திர தேவி சிலையை விட பெரியதான இந்த சிலையில் ஒரு ஆணும், பெண்ணும், குழந்தையும் இருப்பார்கள். வெண்கலத்தினால் ஆன இந்த சிலையை வடிக்க 28 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

வடகொரியாவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சிலை, செனிகல் நாட்டு அதிபர் அப்துலாய் வாட் அவர்களின் மனதில் உதித்த ஒரு யோசனையாகும்.

செனிகல் தனது 50 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்தச் சிலை திறப்பு வைபவத்தில் 20 க்கும் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சிலை திறக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் தடையையும் மீறி தாம் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்று கூறியுள்ளது.

 வடகொரிய தொழிலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சிலைக்கான செலவு ஒரு வீண்விரையம் என்றும், அந்தச் சிலை இஸ்லாத்துக்கு முரணானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது ஒரு அவமானச் சின்னம் என்று கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பேசிய ஒரு இமாம் கண்டித்துள்ளார்.

அந்தச் சிலையில் உள்ள ஆண் அதில் உள்ள பெண்ணின் இடையைப் பிடித்து அணைத்தவாறு இருப்பதால், அது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

  செனிகலின் முன்னணி கட்டிடக் கலைஞரும், அதிபரின் ஆலோசகருமான பியர் குஜாபி அடேபாட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் இந்த விமர்சனங்களை நிராகரிக்கிறார்.

ஆனால் செனிகலின் இன்னுமொரு சிற்பியான உஸ்மான் சோ இந்த சிலை திறப்பை நிராகரிப்பதுடன், அந்தச் சிலை அருவருப்பானது என்றும் கூறுகிறார்.

அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு வேலையில்லாத இளைஞனிடம் இது குறித்துக் கேட்ட போது ”அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது நினைவுச் சின்னம் அல்ல எங்களுக்கு வேலைதான் கேட்கிறோம்” என்று கூறினார்.

BBC.

One thought on “செனிகல் சிலை குறித்த சர்ச்சை!”

  1. “அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது நினைவுச் சின்னம் அல்ல எங்களுக்கு வேலைதான் கேட்கிறோம்” என்ற விமர்சனம் செல்லுபடியானது.

    அந்தச் சிலை அருவருப்பானது என்றால் அமெரிக்காவின் சுதந்திரச் சிலை உட்பட்ட எத்தனையோ சிலகள் –நிச்சயமாக புராதன வீனஸ் சிலை முதலாக இந்தியச் சிற்பஙளிற் பலவும்– அருவருப்பானவையாகி விடாவா?
    அவமானச் சின்னம் என்று கண்டித்துள்ள இமாம் அதில் என்ன அவமானம் என்றொ சொன்னார்?
    பெண்ணின் இடையைப் பிடித்து அணைத்தவாறு இருப்பது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் என்றால் ஆணும் பெண்ணும் கைகோத்து நடப்பது கூடப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும். அதற்கும் தடை விதிக்கவேண்டி வரும்!

    சொல்லப்படாத காரணங்களுள் சிலை செய்யப்பட்ட இடமும் உள்ளடஙலாம்?

Comments are closed.