செங்கல்பட்டு முகாமில் இருந்து விடுதலை:எதிர்காலம் நிச்சயமற்றதொன்றாகவே இருக்கின்றது.

 

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரையும் மற்றும் பலரையும் செங்கல்பட்டிலுள்ள முகாமில் இருந்து இந்தியா விடுதலை செய்யவுள்ளது. அடிப்படை வசதிகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒருவார காலத்திற்கும் அதிகமாக இந்த முகாமில் உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக “டைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

2 வருடங்கள் 7 மாதங்களின் பின் செங்கல்பட்டு விசேட முகாமில் இரும்புக் கதவுகள் சுகுமாருக்கும் ஏனைய 16 பேருக்கும் திறந்துவிடப்படவுள்ளன.

இலங்கையிலிருந்து வரும் அகதிகள் கியூ பிரிவு பொலிஸாரால் சோதனையிடப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் செங்கல்பட்டு முகாமிற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். ஏனைய முகாம்களிலுள்ள அகதிகள் முகாம்களை விட்டு வெளியே சென்று பகல் வேளையில் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த விசேட அகதிகள் முகாமுக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 117 முகாம்களில் 72 ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் உள்ளனர்.

திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் அந்த செங்கல்பட்டு முகாமிற்கு வந்த தாசில்தார் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 17 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். பின்னர் நள்ளிரவில் பிரதிப் பொலிஸ் அத்தியட்சர் பாலசுப்பிரமணியம் முகாமிற்கு வந்து விடுதலைப் பத்திரத்தின் மூலப் பிரதியைக் காட்டியுள்ளார். அதனையடுத்து உண்ணாவிரதம் இருந்தோர் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

2006 இல் இலங்கையில் இருந்து பொருட்களை கடத்தி வந்ததாக இராமேஸ்வரம் பொலிஸாரால் சுகுமார் கைதுசெய்யப்பட்டிருந்தார். தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்தவர் சுகுமார். அவர் 2006 டிசம்பர் கடல்கோளினால் தனது மனைவி யுவராணி மற்றும் 3 பிள்ளைகளை இழந்துவிட்டார். ஆயினும், முல்லைத்தீவில் இருந்து அவர் வெளியேற தீர்மானித்திருந்தார்.

கடலுக்கு எமது படகுகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து வந்த படகில் நான் வந்துவிட்டேன். இது சட்டவிரோதமானது என எனக்குத் தெரியாது என்று சுகுமார் கூறியுள்ளார். சுகுமார் தனது 4 சகோதரர்களையும் இலங்கையில் இழந்துவிட்டார். அவர் முல்லைத்தீவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. முகாமிலிருந்து விடுவிக்கப்படவுள்ள ஏனைய 16 பேரின் நிலைமையும் இதே போன்றதொன்றுதான்.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலி உறுப்பினர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக எனது புகைப்படத்துடன் இலங்கைப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. நான் அகதியாகவே வந்தேன். எனது சகோதரி யுத்தத்தின் போது கொல்லப்பட்டுள்ளார். எனது வயதுபோன தாயார் வவுனியானில் இருக்கிறார். நான் சென்னையில் இருக்கப்போகிறேன் என்று வைகுந்தவாசன் என்பவர் கூறியுள்ளார். அதேசமயம், மோகனதாஸ், உளநிலை பாதிக்கப்பட்ட கிருபாகரன் மற்றும் ஏனையவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச்செல்ல விரும்பவில்லை. முகாமிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்படுகின்ற போதிலும் அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதொன்றாகவே இருக்கின்றது.