செங்கல்பட்டு அகதிகள் முகாம்:மற்றொரு குவான்டனாமோவா சிறை!

 உடனடி விடுதலையை வலியுறுத்தி 60 இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்.
 
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 60 இலங்கைத் தமிழர்கள் புதன்கிழமை தம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.

இவர்களில் அநேகமானோர் 20, 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் ஆகும். 3 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கியூ பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டவர்களாகும். இவர்கள் கடந்த புதன்கிழமையுடன் 20 ஆவது தடவையாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த முறை காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நாங்கள் அரசியல் பிரதிநிதிகளுடன் மட்டுமே பேசுவோம். அரசாங்க அதிகாரிகளுடன் அல்ல. அரச அதிகாரிகளுடன் கடந்த காலத்தில் பேச்சு நடத்தியிருந்தோம். ஆனால், எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. எமது நிலைமை மோசமாகி உள்ளது. நாங்கள் முதலமைச்சர், அமைச்சர்கள், அல்லது முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி கனிமொழி உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் தான் பேசுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், எமது போராட்டம் முடிவின்றி தொடர்கிறது. இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் இலங்கைத் தமிழர்களுக்கு சில நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அகதிகளுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. உதாரணமாக செங்கல்பட்டு முகாமில் எந்த நம்பிக்கையும் காணப்படவில்லை என்று சதீஸ் என்பவர் கூறியுள்ளார். அநேகமான வழக்குகளில் பொலிஸார் எந்தவொரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. அத்துடன், வழக்குகளை கொண்டு செல்வதற்கும் அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று சதீஸ் கூறியுள்ளார்.

இப்போது நாங்கள் முகாமில் முடக்கப்பட்டுள்ளோம். வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பொலிஸாருக்கு எந்த அழுத்தமும் இல்லை. சிறிய குற்றங்களுக்காக எங்களில் பலர் இந்த முகாமில் 5 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறோம் என்று அங்குள்ளவர்கள் குற்றஞ்சாட்டினர்.

சிலரின் வழக்குகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், திறந்த முகாமில் இருக்கும் அவர்களின் உறவினர்களிடம் இணைந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு போகக்கூட அனுமதிக்கப்படவில்லை என்று 21 வயதான விஸ்வா கூறியுள்ளார். திறந்த முகாமிற்கு எங்களை அனுப்ப வேண்டும். நாம் எமது குடும்பத்தினருடன் இருக்க விரும்புகிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று, செங்கல்பட்டு முகாமிலும் இடம்பெறுகிறது என்று அவர் தெரிவித்தார். திறந்த முகாமில் எமது குடும்பங்களும், பிள்ளைகளும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அதிகாரிகள் எந்த அனுதாபமும் காட்டவில்லை. நாங்கள் தொடர்ந்தும் இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்தால். நாம் அழிந்து போய்விடுவோம் என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். முகாம்களில் இருப்பவர்களில் அநேகமானோர் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அவர்களுக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் வழங்குவதில்லை என்று தமது பெயரை குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.

1993 இல் அமைக்கப்பட்ட இந்த செங்கல்பட்டு முகாமில் 2008 செப்டெம்பரில் 85 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 117 அகதி முகாம்களில் 19 ஆயிரத்து 296 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 889 அகதிகள் உள்ளனர். இந்த செங்கல்பட்டு முகாமானது மற்றொரு குவான்டனாமோ குடா முகாம் போன்று உள்ளது. சிலர் உளரீதியாக பாதிக்கப்பட்டனர். சிலர் ஒரு கையை, ஒரு காலை இழந்து அங்கவீனர்களாக காட்சியளிக்கின்றனர். சுமார் 86 பேர் முகாம் வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் அங்கு இல்லை. நாங்கள் 25 அறைகளில் உள்ளோம். ஏனைய 7 அறைகள் வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சமையல் மற்றும் உணவுத் தேவைகளுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. இவர்களின் மத்தியில் சிவகரன் என்பவர் இருந்தார். அவர் தனது குடும்ப புகைப்படத்தை காட்டி தனது கவலைகளை பகிர்ந்துகொண்டார். அவர் 2007 ஜனவரியில் இலங்கையில் இருந்து வந்தவர். அவரது குடும்பம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தது. குடும்பத்தினருக்கு தான் ஒன்றும் செய்யவில்லை எனவும் இந்தியாவில் வேலை தேடி வந்ததாகவும் அவர் கூறுகிறார். அவருடைய துன்பம் இந்தியாவிலும் தீரவில்லை. பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து இந்த முகாமிற்கு கொண்டுவந்துவிட்டனர். இவருடைய உழைப்பிலேயே தங்கியிருந்த அவருடைய குடும்பம் யுத்தத்தின் போது முல்லைத்தீவுக்கு இடம்பெயர்ந்தது.மார்ச் 26 இன் பின்னர் அவருக்கு குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. பின்னர் துன்பமான செய்தி வந்தது. அவருடைய மனைவி சியாமலா (32 வயது) பிள்ளைகள் சுவர்ணன் (12 வயது), துளசி (10 வயது), புவிதர்சினி (5 வயது) அவர்கள் யாவரும் விமானத் தாக்குதலில் மடிந்துவிட்டனர். அவர்களுடைய மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது துன்பத்தை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.

வாழ்க்கை நரகமாக உள்ளது. காச நோயினால் நான் துன்பப்படுகிறேன். நான் கைதுசெய்யப்பட்டு 2 1/2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. சிறையிலேயே எனது வாழ்க்கையை முடிக்கப்போகிறேன் என்று சிவகரன் கூறியுள்ளார்.

சிவகரன் மாத்திரம் அல்லாமல் பலர் தமது உறவினர்களை, குடும்பத்தவர்களை இழந்த துன்பத்தில் உள்ளனர். வெளியுலகத்துடனான தொடர்புகள் இல்லாதவர்களாக தமக்குத் தாமே ஆறுதல் கூற வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர். புழல், மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளில் இருக்கும் முகாம்களில் இருந்து இவர்கள் இந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டவர்கள். இப்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஏன் நீண்டகாலமாக நாங்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்று விஸ்வா என்பவர் கூறினார். தனது தாய், சகோதரர்களை பார்ப்பது தொடர்பான நம்பிக்கையை அவர் இழந்தவராயிருக்கிறார். அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மற்றொரு திறந்தவெளி முகாமில் உள்ளனர். இராமேஸ்வரத்தில் கோயிலுக்குச் சென்ற போது என்னைப் பிடித்தார்கள். குடும்பத்தில் நான் தான் மூத்தவன். குடும்பம் என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியாது என்று 3 வருடங்களாக சிறையில் வாடும் அவர் கூறினார்.