சுனிலா அபேயசேகரவுக்கு 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பாதுகாவலர் விருது!

20.09.2008.

2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பாதுகாவலர் விருதுகள் இலங்கையைச் சேர்ந்த முன்னணி மனித உரிமைப் பணியாளரான சுனிலா அபேயசேகர உட்பட 5 பணியாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) விருதுகளை பர்மாவின் அரசியல் கைதிகளுக்கான உதவி வழங்கும் சங்கத்தின் இணைஸ்தாபகரான போ. கியும் கொங்கோவைச் சேர்ந்த மதில்டி முகிள்டோவும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அப்ட்அல் ரஹ்மான் அல்லாகிமும் இலங்கையைச் சேர்ந்த சுனிலா அபேயசேகரவும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த உமிடா நியாசோவாவும் பெற்றுள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

‘தினந்தோறும் எதிர்கொண்ட ஆபத்துகள், நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த 5 பணியாளர்களும் தொடர்ச்சியாக உரிமைகள் துஷ்பிரயோகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளதுடன் தமது சொந்த நாடுகளில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக் கொள்ள பாடுபட்டனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென்னத்ரோத் கூறியுள்ளார்.

துணிவுடனும் உறுதிப்பாட்டுடனும் பாடுபட்டதற்காக இந்த கௌரவம் அளிக்கப்படுகிறது. இந்த விருதானது மேலும் விளைத்திறனுடன் பாதுகாப்பாக அவர்கள் செயற்பட துணை நிற்குமென நாம் கருதுகிறோம் என்று கென்னத் கூறியுள்ளார்.

இவர்களில் இலங்கையைச் சேர்ந்த சுனிலா அபேயசேகர நாட்டிலுள்ள நன்கு பிரசித்திபெற்ற மனித உரிமை ஆர்வலராவார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் தொடர்பான பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்களுக்கு எதிராகத் தளராது போராடிவரும் உறுதிப்பாடும் நேர்மையான கொள்கைப் பற்றுதியுமுடைய பெண்மணி சுனிலாவாகும்.

‘இரு தசாப்தங்களுக்கு முன்பு மனித உரிமைகள் தொடர்பான பணியை நான் ஆரம்பித்த போது அது இலகுவாக இருக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்துபவரெனவும் சில வேளைகளில் துரோகியெனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் பங்களிப்பு, ஜனநாயக கூட்டமைப்புகளை சிதைக்கும் வேறுபட்ட அரசியல் தரப்பினர், இராணுவமயமாக்கல் சூழலை உருவாக்குதல் என்பன தொடர்பாக கேள்வி எழுப்பியபோது பல தரப்புகளிலிருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்கிறார் சுனிலா.

அரச சார்பற்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான இன்போமின் (INFORM) நிறைவேற்றுப் பணிப்பாளரான சுனிலா, பாரதூரமான துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்துவது தொடர்பாகவும் நிறுவன ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்தும் போராடி வருகிறார்.

thanks:www.Global Tamil News.com