சுஜித் ஜீ இன் மாசிலன் எமக்குச் சொந்தமானது என்பது பெருமை

masilanபுலம்பெயர் தமிழர்களின் அடையாளம் தனித்துவமானது. தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து அறுத்தெறியப்பட்ட இரண்டாவது சந்ததியின் வாழ்வியல் அவலங்களுள் விவாகரத்து குறித்துக்காட்டத்தக்க சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. பனியுறையும் தேசத்தின் சோகத்துள் அழிந்து போகும் வாழ்வின் துயரத்தை ஒளிப்படம் ஊடாக சுஜித் ஜீ சொல்லியிருக்கிறார். தென்னிந்திய வர்த்தகச் சினிமாக்களைப் பிரதியெடுத்து எமது சூழலுடன் ஒட்டாமல் கற்பனை உலகை அறிமுகப்படுத்தும் சினிமாக்களுக்கு மத்தியில் சுஜித் ஜீ இன் முயற்சி புதியது.

கதை சொல்லும் முறையாகட்டும், படத்தோடு குழைந்து செல்லும் இசையாகட்டும், நவீன தொழி நுட்பத்தின் பிரயோகமாகட்டும் தமிழகத்தின் பாதிப்பின்றி புதிய சினிமாவை முன்வைக்கிறது மாசிலன் என்ற குறும்படம்.

மாசிலன் எமக்குச் சொந்தமானது என ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் உரிமையுடனும் பெருமையுடனும் சொல்லலாம். குறுகிய நேர இடைவெளிக்குள் பார்வையாளர்களைத் தனக்குள் ஈர்த்துவிடும் ‘மாசிலன்’ நமது சொந்தப் படைப்புகளுக்கு திறவுகோலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.