சீனாவுக்கு பாரிய சக்தி தேவை வழங்குவதென வெனிசூலா உறுதி!

26.09.2008.

சக்தி ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைகளில் சீனாவும் வெனிசூலாவும் கைச்சாத்திட்டுள்ளன.

சீனாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பரல்கள் என்ற அடிப்படையில் 2012க்குள் மும்மடங்காக அதிகரிக்குமென வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் தெரிவித்துள்ளார்.

உலகின் பாரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான வெனிசூலா அமெரிக்காவுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் நோக்குடன் புதிய சந்தை வாய்ப்புக்களைத் தேடி வருகின்றது.

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட சாவேஷ் அந்நாட்டு ஜனாதிபதி ஹு ஜிந்தாவோவுடன் பேச்சுக்களை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :

அதிகளவான சனத்தொகையைக் கொண்டுள்ள சீனாவுக்கு பாரிய சக்தி தேவையை எதிர்நோக்கியுள்ளது. அதற்கான உதவிகளை வழங்குவதென வெனிசூலா உறுதியளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி தவிர வெனிசூலாவின் பாரியளவு மசகு எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் மூன்று எண்ணெய் ஆலைகளை இரு நாடுகளும் இணைந்து சீனாவில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்ட நாடுகளில் தனது எண்ணெய் சேகரிப்பு நிலையங்களை அமைக்க விரும்பும் சாவேஷ் சீனாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா பயணமாகினார்.

மூன்று மாதங்களுக்குள் சாவேஷ் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.