சீனாவில் ஆற்றில் கொட்டிய டீஸல் வேகமாகப் பரவி வருகிறது!

சீனாவில் எண்ணெய்க் குழாய்ப் பாதை உடைந்து ஆற்றில் சிந்திய டீசலினால் பரவிவரும் மாசு, சீனாவின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான மஞ்சள் நதியை எட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெய் என்கிற ஒரு கிளையாற்றில் சிந்தியிருந்த டீஸல் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றாலும், தற்போது மஞ்சள் நதியில் அமைந்துள்ள ஒரு அணைக்கட்டில் சோதிக்கப்பட்ட நீரில் எண்ணெய்ப் பிசிர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்பிராந்தியத்தில் உள்ள மூன்று மாகாணங்களை சேர்ந்த மக்களும் அங்குள்ள தொழிற்சாலைகளும் மஞ்சள் ஆற்றின் நீரை குடிக்கவோ புழங்கவோ வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்ற ஒரு பிராந்தியம் இது.