சீனாவின் மனித உரிமைகள் குறித்த புஷ்ஷின் கருத்துக்களை சீனா நிராகரித்துள்ளது!

07.08.2008

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொள்வதற்காக பீஜிங் செல்லும் அமெரிக்க அதிபர் புஷ் , வழியில் தாய்லாந்தில் ஆற்றிய உரை ஒன்றில் சீனாவில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

ஆசியாவுக்கான, அமெரிக்கக் கொள்கை பற்றி ஆற்றிய உரை ஒன்றில் இவ்வாறு விமர்சித்துள்ள அதிபர் புஷ் , ஆயினும், சீன அரசாங்கத் தலைமையை பகைத்துக்கொள்ளும் நோக்கம் தமக்குக் கிடையாது என்றும் அந்த நாட்டு மக்கள் தமது முழுத்திறனுக்கான பலாபலனை அடைய உதவுவதே தமது எதிர்பார்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை சீன அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீதான துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் இன்னமும் தொடருவதாகவும், ஒலிம்பிக் நடக்கும் இடத்துக்கு மிக அருகிலேயே அவை நடப்பதாகவும், அங்கு தடை செய்யப்பட்ட ஃபாலுண் கொங் என்னும் ஆன்மீக இயக்கத்தைச் சேர்ந்த ஜெனிபர் ஜெங் கூறியுள்ளார்.

ஆனால், சீனாவின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்த புஷ்ஷின் கருத்துக்களை சீனா நிராகரித்துள்ளது.

எவரும் பிறிதொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று கூறி சீன வெளியுறவு அமைச்சு, புஷ்ஷின் விமர்சனத்தை கண்டித்துள்ளது.

சீன மனித உரிமை நிலவரங்களை விமர்சித்திருக்கின்ற போதிலும், புஷ் சீனாவின் சந்தை மறுசீரமைப்பையும், பொருளாதார பலத்தையும் பாராட்டியிருக்கிறார்.

தாய்லாந்து உரையில் புஷ் சீனாவின் மனித உரிமைகள் பற்றி மாத்திரம் பேசவில்லை. வடகொரியா மற்றும் பர்மாவைப் பற்றியும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

பர்மிய மக்களுக்கு மேலும் சுதந்திரம் தேவை என்று பேசிய அவர், ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூச்சி அவர்களையும் ஏனைய தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளையும் பர்மாவின் இராணுவ அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.