சிறுவர் உரிமையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எந்த அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை.

 

கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சிறுமிகள் தொடர்பில் மலையக அமைப்புகள் மாத்திரம் குரல் கொடுத்து வருவதாகவும் இது தொடர்பில் இலங்கையிலுள்ள சிறுவர் சார்ந்த தேசிய சர்வதேச அமைப்புகள் எவ்வித அறிக்கைகளையும் விடவில்லையெனத் தெரிவித்துள்ள “பிரிடோ’ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் மரணமான சிறுமிகளை “யுவதிகள்’ என அழைப்பது சிறுவர் உரிமையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் தொடர்பான பிரசாரங்கள் மற்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள் என்ற தலைப்பில் பொகவந்தலாவை பிரிடோ காரியாலயத்தில் பிரிடோ பணியாளர்களுக்காக நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

கொழும்பு பௌத்தாலோக மாவத்தை சம்பவத்தில் மரணமான ஜீவராணி, சுமதி ஆகியோர் தொடர்பாக அறிக்கைகள் விடுபவர்கள் மட்டுமின்றி பத்திரிகைகளும் இவர்களை “யுவதிகள்’ என்றே அழைக்கின்றன. இருவரும் பதினைந்து வயதுக்குக் குறைவானவர்கள் என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது.

எனவே, இவர்கள் இலங்கை அரசாங்கம் ஏற்று கையெழுத்திட்டுள்ள சிறுவர் உரிமை சமவாயத்தின் வரைவிலக்கணத்தின் படி “சிறுவர்கள்’ ஆவர். 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாவர். அத்துடன் அவர்களுக்கென நிச்சயப்படுத்தப்பட்ட உரிமைகள் உள்ளன. இவர்களை யுவதிகள் என அழைக்கும் போது இவர்கள் இளம் பெண்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரப்படுவதால் இவர்களின் சிறுவருக்கான உரிமைகளின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது.

இவர்களை வேலைக்கு அமர்த்தியது இலங்கை சட்டப்படி ஒரு குற்றமாகும். இதுதவிர சிறுவர் உரிமை சமவாயத்தின் 32 ஆவது சரத்து சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. சிறுவர் சமவாயத்தையே சிறுவர் தொடர்பான சட்டமாக்க இலங்கையில் பல சிறுவர் உரிமை அமைப்புகள் பரப்புரை செய்து வருவதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். சிலநாடுகள் சிறுவர் உரிமை சமவாயம் சட்டமாக்கப்பட்டிருப்பதால் சிறுவர் உரிமை சமவாயத்தின் சரத்துகளை மீறுவது வெறுமனே சிறுவர் உரிமை மீறலாக மட்டுமின்றி தண்டனைக்குரிய குற்றமாகவும் கணிக்கப்படுகிறது.

மரணமான சிறுமிகளின் மரணங்கள் குறித்தும் இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டது குறித்தும் இதுவரை பொதுவாக மலையகம் சார்ந்த அமைப்புகளே குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், இலங்கையில் உள்ள சிறுவர் சார்ந்த தேசிய சர்வதேச அமைப்புகள் இருப்பினும் அவை இதுவரை இந்தவிடயம் குறித்து எதுவித அறிக்கைகளையும் விடவில்லை.

சிறுமிகளின் மரணம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகளும் மரண விசாரணையின் போது இந்த சிறுமிகளின் வயது பற்றி சரியான விபரம் தெரியவரவில்லை என்ற தோரணையில் கருத்து வெளியிட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இது இவர்கள் சிறுவர்கள் என்ற விடயத்தை அடக்கி வாசிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி என்பது தெளிவாகிறது மட்டுமன்றி சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு எதிராக உடனடியாகவே நடவடிக்கை எடுக்கத் தவறிய அவர்களின் கையாலாகாத்தனத்தையும் தவறை மூடிமறைப்பதற்கு எடுக்கப்பட்ட அப்பட்டமான முயற்சியாகும் என்பதைக் காட்டுகின்றது.

இறந்தவர்கள் சிறுமிகள் என்ற விடயம் அழுத்தம், திருத்தமாகச் சொல்லப்பட்டால் மட்டமே நாம் அரசாங்கத்தின் கவனத்தையும் சிறுவர் அதிகார சபையின் கவனத்தையும் ஈர்த்து அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். “யுவதிகள்’ என்ற பதத்திற்குள் வரும் போது அவர்களின் மரணத்திற்கு அந்த விடயத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பொறுப்பாவர். ஆனால், சிறுவர்களின் உயிரையும் உரிமைகளையும் பாதுகாப்பது சகல வளர்ந்தவர்களினதும் சமூகத்தினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும் என்பதை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் முன் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

“இருயுவதிகளின்’ மரணத்தை விட “இரு சிறுமிகளின் மரணம்’ பாரதூரம் வாய்ந்தது என்பதையும் அதற்கு மேற்கூறப்பட்ட சகலரும் பொறுப்பு சொல்லியாக வேண்டும். இந்த நாட்டில் சிறுவர் உரிமையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சர்வதேச தேசிய சிறுவர் அமைப்புகளும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்துவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும்.

இது சிறுவர் அதிகார சபை உடனடியாகவும் நேரடியாகவும் தலையிட்டுச் செயல்பட வேண்டிய விடயம் என்பதை மலையக அரசியல்வாதிகள் உணரவேண்டும். இந்த பின்னணியில் இவர்கள் தொடர்பான சகல ஆவணங்கள் செய்திகள் ஆகியவற்றில் “யுவதிகள்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவிர்க்கப்பட்டு “சிறுமிகள்’ என்ற வார்த்தைப் பிரயோகமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.