சிறார்களைப் பொறுத்தவரை மிக அபாயகரமான சூழ்நிலை எது?

உலகைச் சுற்றி படகில் வலம் வரவேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ள நெதர்லாந்தைச் சேர்ந்த லோரா டெக்கர் என்ற 13 வயது சிறுமி சட்டச் சிகக்ல்களை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த சிறுமியின் உளவியல் தகுதி மதிப்பிடப்படப் படவேண்டும் என தெரிவித்துள்ள அந்நாட்டு நீதிமன்றமொன்று அவர் அரசாங்க அதிகாரிகளின் கண்காணிப்பிற்குள் வைத்திருக்கப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் பெற்றோர் அவரது முயற்சிக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ள போதிலும் அந்நாட்டின் சிறார் பாதுகாப்பு முகவர் நிலையமோ, இந்த முயற்சி அபாயகரமானது என்ற அடிப்படையில் அதில் தலையிடுமாறு நீதிமன்றத்தைக் கோரியது.

மிகச் சிறிய வயதில் உலகத்தை தனியாக படகில் சுற்றி வலம் வந்தவர் என சாதனை படைப்பதே இந்தச் சிறுமியின் ஒரே லட்சியம்.

ஆனால் சிறுமியின் நலன்களில் கொண்டுள்ள அக்கறை குறித்து வாதிடும் டச்சு அதிகாரிகளோ, இந்த முயற்சிக்கு அனுமதி வழங்குவதன் மூலம் சிறுமிக்கு ஏற்படுகின்ற தனிமை காரணமாக அவரது எதிர்கால வளர்ச்சியில் முக்கியமான காலகட்டம் பாதிப்புக்கு உள்ளாகும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறார்களைப் பொறுத்தவரை மிக அபாயகரமான சூழ்நிலை எது என்பதை எவ்வாறு கணிப்பது என்ற விடயத்தில் அவசரமான பல கேள்விகளை எழுப்பியுள்ள இந்த விடயம் இன்று உலகெங்கிலும் உள்ள பெற்றோர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.