சிறந்த இலக்கியங்கள் எவை? : கே.முத்தையா

சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியங்கள் வரை சகல இலக்கியங்களிலும் காணப்படும் கருத்தோட்டங்கள் வர்க்க நிலைகளி லிருந்து எழும் கருத்தோட்டங்கள் என்பதுதாம் உண்மை. ஒரு சமுதாய அமைப்பின் நிலைமையைத்தான் கவிஞன், கலைஞன், எழுத்தாளன் பிரதிபலிக்கிறான். சங்க காலத்தில் நிலவுடைமை மன்னர்கள் நிலக்கிழார் களின் நிலையை பிரதிபலித்ததோடு அன்றைய அடிமை வர்க்கங்களின் நிலைமையையும் கவிஞர்கள் வெளிப்படுத்தினார்கள்.

திருக்குறளும் ஐம்பெருங்காப் பியங்களும் தோன்றிய காலம் நில வுடைமை எதேச்சதிகார மன்னனின் நிலையையும் அதை எதிர்த்த புதி தாக தோன்றிய வணிகர் குலத்தின் நிலையையும் கவிஞர்கள், கலைஞர் கள் பிரதிபலிக்கிறார்கள். இந்த எதிர்ப் பின் ஒரு இயக்கமாக விளங்கிய புத்த, சமண மத சமத்துவக் கருத்துக்களை யும் அன்று கவிஞர்கள் பிரதிபலித் தார்கள். இந்த எதிர்ப்பை முறியடித்து மன்னர்களின் ஆதிக்கம் நிலைநாட் டப்பட்ட பிற்காலத்தில் அதாவது சாம்ராச்சிய மன்னர்கள் தோன்றி விட்ட காலத்தில் சைவமும் வைணவ மும் அதை நியாயப்படுத்த முன்வந் தன. இக்காலத்தில் உருவான இலக் கியங்களே தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் போன்ற பாடல்களும், இராமாயணம், பாரதம் போன்ற இதி காசங்களின் பதிய விரிவாக்கங் களும், மன்னர்களைத் தெய்வமாக் கிய இலக்கியங்களுமாகும். மன்னரா திக்கம் நிலை பெற்றுவிட்ட அழிக்க முடியாத ஒன்று என்ற நிலைவந்த பின் மக்களின் குரலாக சித்தர்கள் இலக்கியங்கள் தோன்றின. அவர்க ளைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ண பாரதி, இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் நிலப்பிரபுத்துவ சாதிய எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டனர்.

இறுதியாக நிலவுடைமை சமுதாய அமைப்பையே வேட்டு வைக்கும் புதிய உற்பத்தி உறவு முறைகள் தோன்றி முதலாளி வர்க்கமும் தொழி லாளி வர்க்கமும் உருவாகிவிட்ட சமீப காலத்தில் மேலே ஆதிக்கம் செலுத்திய ஏகாதிபத்தியத்திற்கெதி ராக ஜனநாயக இயக்கம் தோன்றிய தின் குரலாக பாரதி இலக்கியம் தோன்றியது.

இந்த வழியில் இனித்தோன்றும் இலக்கியங்கள் புதிதாகத் தோன்றி யுள்ள இந்த வர்க்கங்களின் நிலைமை யையும் இயக்கங்களையும் தன்னு ணர்வோடு பிரதிபலிக்கும் இலக்கி யங்களாக இருந்தால்தான், பெருமை மிகுந்த இலக்கிய பாரம்பரியத்தைப் பெற்றுள்ள வழியில் மேலும் முன் னேற முடியும். வர்க்க நிலைகளைப் பிரதிபலிக்காத இலக்கியம் என்பதே தமிழிலக்கியத்தில் இல்லை. உலகில் எந்த இலக்கியத்திலும் இல்லை. தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல, ஆண்டான், அடிமை என்பது இல் லாத, உடமையாளன் அவனது சுரண் டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டோன் என்ற வர்க்கப் பிரிவுகள் இல்லாத பொற்காலம் என்ற ஒரு காலம் சங்க இலக்கியத்தில் இல்லை. வர்க்கங்கள் என்பவை தோன்றியபின் உருவான இலக்கி யங்களே இது வரை கிடைத்துள்ள பெரும்பாலான இலக்கியங்கள். இது தான் வரலாறு. எவ்வளவு முயன் றாலும் இந்த வரலாற்று உண்மையை மறைக்க முடியாது. சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற பொற்காலத்தை இனிமேல்தான் நாம் படைக்க வேண் டும். இந்த உண்மையை உணர்ந்தால் தான், ஒவ்வொரு எழுத்தாளனும் கவி ஞனும் தான் எந்த வர்க்க நிலையி லிருந்து, எந்த வர்க்கத்துக்காகச் செயல்படுகிறான் என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டால்தான் அவன் தமிழக வரலாற்றில் தோன்றிய புகழ் மிக்க இலக்கியப்படைப்பாளர்கள் வழியில் முன்னேற முடியும்.

குறிக்கோளில்லாத இலக்கிய மென்பதே கிடையாது. இதுவே தமிழ் இலக்கிய வரலாறு.

எதற்காக நீங்கள் இலக்கியம் படைக்கிறீர்கள்? யாருக்காக? யாரைப்புகழ? யாரை இகழ? எந்தக் கருத்துக்களுக்கு ஊக்கமளிக்க? எந்த கருத்துக்களை நிலைகுலையச் செய்ய? யாருடைய வெற்றிக்காக? யாருடைய வீழ்ச்சிக்காக?

நாடு முன்னேற இன்று தடையாக உள்ளவை எவை? எந்த சக்திகள் குறுக்கே நிற்கின்றன? இவைகளை அகற்றப் போராடுபவர்கள் யார்?

இலக்கியப் படைப்பாளன் இந்தப் போராட்டத்தில் எப்பக்கம்? இத் தகைய சமுதாய வாழ்விலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் இலக்கி யப்படைப்பாளன் ஒதுங்கிவிட முடியுமா? ஒதுங்கிவிட்டால் அவன் இலக்கியம் என்ற ஒன்றைப் படைக்க முடியுமா? இதுதான் கேள்வி.

சங்க இலக்கியப் புலவர்களோ, காப்பியகாலப் புலவர்களோ, அவர் களுக்குப் பின் தோன்றியவர்களோ சமுதாய வாழ்விலிருந்து ஒதுங்கிய வர்களல்லர்.

தமிழ் நிலத்தில் சமுதாய வாழ்வு என்பது தோன்றிய காலத்தில், நிலத்தில் உடைமை என்பதுதோன் றிய காலத்தில் அந்த சமு தாயம் அதற்கு முன்பிருந்த சமுதாய வாழ்விலிருந்து முன்னேற்றமான தொரு அமைப்பாகவே அன்றி ருந்தது. அன்றைய நில உடைமை சமுதாயம் வளர்ந்து வந்த ஒரு அமைப்பு. அதனால்தான் அக்காலத் தில் தோன்றிய அதாவது சங்ககாலம் என்று கருதப்பட்ட அக்காலத்தில் தோன்றிய – இலக்கியங்கள் இன்றும் சிறந்த இலக்கியங்களாகத் திகழ்கின் றன. ஆண்டான் அடிமை. உடைய வன் இல்லாத வறியவன் என்ற பாகுபாட்டை உருவாக்கிய போதி லும். அதற்கு முன்பிருந்த நாடோடி சமுதாய வாழ்விலிருந்து நில உடை மை சமுதாய வாழ்வு ஒரு முன்னேற் றமே. இந்த மாறுதலை, முன்னேற் றத்தை குறிப்பதாலேயே சங்கப் பாடல்கள் சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன. நாடோடி வாழ்வை விட, ஒரு மன்னனின்கீழ் ஆட்சி அமைந்தது அக்காலத்திய மாபெ ரும் சமுதாய மாறுதலாகும்.

ஆனால் அந்த மன்னன் எதேச் சதிகாரியாக மாறும்பொழுது, அதை எதிர்க்க ஒரு வர்க்கமே, வணிக குலமே முன் வந்தபோது, மன்னர் களை இகழ்ந்து, அவர்கள் மீது கண்டனம் முழங்கிய இலக்கியங் களே சிறந்தவைகளாகத்திகழ்ந்தன.

எதேச்சதிகார மன்னவன் மீது கண்டனம் முழங்கி, இளங்கோவடி கள் உருவாக்கிய இலக்கியம் சிறந்து விளங்கியதற்கு காரணம் இது. அதே போல் திருக்குறள் இன்றும் போற்றப் படுவதற்கான காரணமும் இதுவே.

அதேபோல் நில உடைமை ஆதிக்க சமுதாயத்தின் சாதிமதப் பிரிவினைகளை எதிர்த்து சித்தர்கள் உருவாக்கிய இலக்கியங்களும் சிறப் புப் பெற்றமைக்குக் காரணம் இதுவே. ஒடுக்கப்பட்ட வர்க்கங்க ளைப் பிரதிபலித்த இலக்கியங்கள் இவை.

அதேபோன்று, பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தையும், நில உடைமை சாதியப் பிரிவுகளையும் ஒழிக்கும் திட்டவட்டமான குறிக்கோளுடன் பாரதி இலக்கியம் இயற்ற முன்வந்த காரணத்தினாலே இலக்கிய வர லாற்றிலேயே ஒரு புரட்சிகரமான மாறுதலை அவர் காண முடிந்தது.

இதுவே சிறந்த தமிழ் இலக்கியங் கள் உருவானதின் வரலாறு. திட்டவட் டமான சமுதாயக் குறிக்கோளுடன் இயற்றப்பெற்றவை அவை. சமுதாய மாறுதலுக்காகப் போராடிய வர்க்கங் களுக்காக படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களே சிறந்த இலக்கியங் களாக உள்ளன.

இலக்கிய வரலாறு கூறும் இந்த பாரம்பரியத்தை இன்றைய எழுத்தா ளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் பின்பற்றப்போகிறார்களா இல்லையா என்பதுதான் கேள்வி. பின்பற்றினால், தமிழகத்தின் புகழ்பெற்ற இலக்கிய மேதைகளின் வழியில் வரலாற்றுச் சிறப்பினைப் பெறுவார்கள். நிலைத்து நிற்பார்கள். உண்மையில் மக்களின் நன்மதிப்பினைப் பெறுவார்கள்.

தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்

ஜூன் 10

தோழர் கே.முத்தையா நினைவு நாள்