சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் : இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவம்

கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் புத்த மத ஆலயங்கள் அமைக்கப்பட்டுப் பின்னர் அதற்கான பணிகளுக்காகவும் வழிபாட்டாளர்களையும் இலங்கை அரசு உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் குடியேற்றங்களுக்கு ஏற்ற இடமாக மாற்றியமைக்கிறது. திருகோணமலையிலும் கரையோரங்களிலும் நேரடிக் குடியேற்றங்களை உருவாகிவருகிறது. கிழக்கிலும் வடக்கிலும் இது தவிர்ந்த இராணுவக் குடியேற்றங்களும் துரிதப்படுத்தப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் உட்பட 3ஆயிரம் ஏக்கர் சுற்றி வளைக்கப்பட்டு சிஙகளவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போர் முடிவடைந்த பின்னரும், அங்கு தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக சிங்கள அரசு பெயரளவுக்கு கூறி வந்தாலும் அவ்வாறு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது.

இதற்கு மாறாக தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடர்ந்து குடியேற்றப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு சிங்களவர்களை குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஏராளமான விவசாய நிலமும் அடங்கும். இவற்றை எதிர்க்க சக்தி இல்லாமல் தமிழ் மக்கள் தவித்து நிற்கின்றனர்.

இப்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத்தவிர மேலும் ஏராளமான தமிழர் பகுதி நிலங்களை சுற்றி வளைக்க சிங்கள அரசு ஆயத்தமாகி வருகிறது. இதனால் தமிழ் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.