சாட்சிகளற்ற ஒரு யுத்தமாகவே நடாத்தப்பட்டது. எனவே இது போலியானது எனில் விசாரணை நடாத்தி அதனை நிரூபிக்க வேண்டும்:சுனிலா அபேசேகர

  
 சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் பொய்யானது என்று வெறுமனே நிராகரிப்பதை விடுத்து, அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அது போலியானதா, இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர் சுனிலா அபேசேகர தெரிவித்துள்ளார்.

 லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ஜி.ரி.பி.சி. வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

 

இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
 இந்த வீடியோ காட்சிகள் உண்மையா பொய்யா என்பதை விட இதன் பின்னணியில் பல உண்மைகள் புதைந்துள்ளன. போர் முன்னெடுக்கப்பட்ட   காலத்தில் வடக்குப் பிரதேசத்திற்கு சுதந்திரமான ஊடகவியலாளர்களோ கண்காணிப்பாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. அப்பிரதேசத்திலிருந்து தற்போது இவ்வாறான ஒரு வீடியோ காட்சி வெளிவந்துள்ளது. இரண்டாவது இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு.

இதனை வெறுமனே நிராகரிப்பதை விட்டு விட்டு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு, இது போலியானதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டும். இது போலியானது என்று சொல்லி விடுவது மட்டும் போதுமான பதிலாக இருக்காது. வன்னியில் கடந்த நவம்பரில் இறுதியில் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அப்பிரதேசங்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்களோ ஊடகவியலாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. ஒரு வகையில் இது சாட்சிகளற்ற ஒரு யுத்தமாகவே நடாத்தப்பட்டது. எனவே இது போலியானது எனில் விசாரணை நடாத்தி அதனை நிரூபிக்க வேண்டும்.

இவ்விடயங்கள் குறித்து இந்த அரசாங்கத்தில் பொறுப்புக் கூறக் கூடிய எவரும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழு செயலிழந்துள்ளது. மனித உரிமைகள் அமைச்சு மௌனம் காக்கிறது. மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க சில சமயங்களில் இவ்வாறான விடயங்களுக்கு காலஅவகாசம் கேட்பார். இந்த நிலைமையில் துரதிர்ஸ்டவசமாக ஐநாவும் கூட மிக அமைதியாக இருக்கிறது. அரசாங்கம் சொல்லும் காரணங்களை அது ஏற்றுக் கொள்கிறது. மனித உரிமை ஆணையகமும் அவ்வாறு அரசாங்கம் சொல்வதை ஏற்றுக் கொள்கிறது.

அரசாங்கம் எது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்கிறது. சர்வதேச சமூகம் பெரிதாக எதுவும் செய்துவிட முடியும் என்று நாம் நம்ப முடியாது. அது தொடர்பில் நாம் வெகுவாக நம்பிக்கை இழந்திருக்கிறோம்.|| என்று தெரிவித்தார்.