சர்வதேச மன்னிப்பு சபையின் கருத்துகளை மற்றொரு தீவிரமான தலையீடென அரசு விசனம்.

07.09.2008.

வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் அவல நிலைமை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்திருக்கும் கருத்துகளை நிராகரித்திருக்கும் இலங்கை அரசாங்கம் இது “மற்றொரு தீவிரமான தலையீடு’ என்று விசனம் தெரிவித்திருக்கிறது.

அதேசமயம், மோதலில் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அரசாங்கம் நேற்று சனிக்கிழமை அழைப்பு விடுத்திருக்கிறது.

பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு அனுமதிக்க விடுதலைப் புலிகள் விருப்பமின்றி இருப்பதை சர்வதேச மன்னிப்புச் சபை அடையாளம் கண்டிருப்பதைப் பாராட்டுவதாக தெரிவித்துள்ள இடர்முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சு, அதேசமயம் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பான சிக்கலை புரிந்து கொள்ளாத தன்மை இருப்பதாகக் கூறியுள்ளதுடன் இது மற்றொரு தீவிரமான தலையீடு என்று கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொருட்களை அனுப்புவதிலுள்ள நெருக்கடிகளின் மத்தியில் பொருட்கள் முழுமையாக பொதுமக்களைச் சென்றடையாமல் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி ஆகஸ்ட் காலப் பகுதிக்கு 10 ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் தேச நிர்மாண அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.