சர்வதேச புலன்விசாரணை நடத்தப்பட வேண்டும்:ஐ.நாவின் அல்ஸ்டன்

 

ஆயுதந்தரிக்காத தமிழர்களை இலங்கை சிப்பாய்கள் சுட்டுக்கொன்றார்களா என்பது குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ. நா அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

அதிலும், இந்த விவகாரம் குறித்த சர்வதேச புலன்விசாரணை விரும்பத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்துக்கான செய்தியாளர்கள் என்னும் அமைப்பே இந்த வீடியோவை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. போர் நடந்த வேளையில் இந்த வீடியோ காட்சி கடந்த ஜனவரியில் படமாக்கப்பட்டதாக அது கூறியிருந்தது.

அந்த வீடியோ காட்சியில் படைச் சிப்பாய் போன்று ஆடையணிந்தவர்கள், நிர்வாணமான ஒருவரை தலையில் சுட்டடுக்கொல்வதாகவும் வேறு சிலர் அருகில் இறந்து கிடப்பதாகவும் காண்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வீடியோ காட்சி போலியானது என்று கூறுகின்ற இலங்கை அரசாங்கம், தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் அது வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஐ.நாவின் அல்ஸ்டன், இது குறித்து முழுமையான ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

அத்தகைய விசாரணை சுதந்திரமானதாக நடப்பதற்காக அது சர்வதேச விசாரணையாக அமைவது விரும்பத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இணையதளம் ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை எதிர்காலத்தை உற்று நோக்கவேண்டிய நிலையில் இருப்பதாகவும் பழைய விடயங்களில் அது தங்கியிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

BBC