சர்வதேச உதவிகள் ஹெய்டியை ஆக்கிரமிப்பதாக இருக்கக் கூடாது:பிரான்ஸ் அமைச்சர்

ஹெய்டியில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்பிலான ஐ.நா.வின் விசாரணையொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரான்ஸ் அமைச்சரொருவர் சர்வதேச உதவிகள் ஒரு நாட்டுக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர அந்நாட்டை ஆக்கிரமிப்பதாக இருக்கக்கூடாதெனத் தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தால் சிதைவடைந்த ஹெய்டியின் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அமெரிக்கப் படைவீரர்கள் ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்தே இக் கருத்து வெளியாகியுள்ளது. பிரான்ஸின் ஒத்துழைப்புக்கான அமைச்சர் அலைன் ஜொயன்டெட்டே இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தலைநகர் போர்ட் ஒ பிரின்ஸின் விமான நிலையத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக நடமாடும் மருத்துவமனைக்குத் தேவையான பொருட்களைக் காவி வந்த பிரான்ஸ் விமானத்தை அமெரிக்கப் படைகள் திருப்பியனுப்பியதைத் தொடர்ந்தே அலைன் ஜெயன்டெட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந் நடவடிக்கைகள் ஹெய்டிக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர அதனை ஆக்கிரமிப்பதாக இருக்கக்கூடாதென அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஹெய்டி தொடர்பில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள விரிசலை மறைக்கும் முகமாக இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.