சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம்:மங்கள சமரவீர .

29.09.2008.

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம் என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

டெய்லி மிறர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சகுந்தலா பெரேராவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மங்கள சமரவீர இவ்வாறு கூறியிருந்தார்.
“சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உருவாக்கப்பட்டபோது அதில் நானும் ஒரு பங்குதாரராக இருந்ததால் அது ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நான் கூறுகின்றேன். சர்வதேசத்தை பிழையாக வழிநடத்துவதற்கே இது உருவாக்கப்பட்டது. சர்வதேச சமூகத்திடம் அனைத்தையும் முடிமறைக்கும் ஒரு புகைமண்டலமே இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு. இதற்கு சிறந்த உதாரணம், 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது நடைபெற்ற சம்பவத்தைக் கூறலாம். கலாநிதி. ரோஹான் பெரேரா இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்து அவர்கள் கவரப்பட்டிருந்தனர். ஆனால், நாங்கள் நாடு திரும்பியதும் மேலதிகமான அதிகாரங்கள் தேவையென பெரேரா முழங்கியிருந்தார். சார்க் மாநாடு நடத்தப்படும்போது அல்லது அரசாங்கக் குழுவினர் அமெரிக்கா செல்லும்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தெரியும் பொருளாக இருக்கும். இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வொவை மாத்திரமே இந்த அரசாங்கம் விரும்புகிறது” என மங்கள சமரவீர தெரிவித்தார்.
அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பே சிறந்த ஆயுதம்
விடுதலைப் புலிகளுடனான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த காலங்களில் பலதடவைகள் கிளிநொச்சி அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர, இராணுவத்தினரின் சிறந்த செயற்பாட்டாலேயே இவற்றை முன்னெடுக்க முடிந்ததாகக் கூறினார். எனினும், அவ்வாறு மீட்கப்பட்ட பகுதிகள் மீண்டும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்ததாகவும், இவ்வாறு மாறி மாறி மோதல்கள் தொடரும் எனவும் அவர் கூறினார்.
எனவே, இவ்வாறு தொடர்ச்சியாக நீண்டுவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்றே சிறந்த வழி எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர, “சிறுபான்மையினருக்கு நேர்மையாக அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்கும் அரசியலமைப்பொன்றை முன்வைப்பதே விடுதலைப் புலிகளைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த வழி. அன்றையதினமே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த தினமாக அமையும்” என்றார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளை இணைத்து அரசாங்கத்துக்கு எதிரான பாரிய சக்திமிக்க கட்சியொன்றை உருவாக்கவேண்டியதே தற்பொழுது தோன்றியிருக்கும் அவசியமான தேவையனெ மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.