சர்வகட்சிக் குழுவின் தீர்வு யோசனைக்கும்;13 ஆவது திருத்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை:திஸ்ஸவிதாரண

 

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனைக்கும் எந்த தொடர்பும் இல்லையென அக் குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த 13 ஆம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கலாநிதி என்.எம்.பெரேரா ஞாபகார்த்த மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “”யுத்தத்தின் பின்னர் அடுத்தது என்ன?’ எனும் தொனிப் பொருளிலான செயலமர்வில் தலைமை தாங்கி உரையாற்றிய பேராசிரியர் திஸ்ஸ விதாரண, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது சிறந்த சமிக்ஞையாக இருக்குமென ஒரு கட்டத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இது தொடர்பாக அவரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வினவிய போது;

“”13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தமிழ், முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதே செய்தியாக இருந்தது. எனினும் (சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின்) தீர்வுத் திட்டத்திற்கும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டும் வெவ்வேறானவை’ என்று கூறினார்.

அத்துடன், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித்தீர்வு யோசனையை தயாரிக்கும் பணிகள் கலந்தாலோசனைகளுடன் தற்போது நடைபெற்று வருவதாகவும் , இதனிடையே ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்கென இறுதி தீர்வு யோசனை பற்றிய சாராம்ச அறிக்கையொன்றையும் தயாரித்து வருவதாகவும் பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.

இதேநேரம், ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்கான சாராம்ச அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு மாத காலம் எடுக்குமாவென கேட்டபோது அவ்வளவு காலம் எடுக்காதென்றும் அவர் மேலும் கூறினார்.