சர்ச்சைக்குரியவர்கள் ஐ.நாவில்!

வட ஆபிரிக்க நாடான லிபியத்தலைவர் கேணல் கடாபி 40 ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக ஐ.நா.விற்கு பிரசன்னமாகவுள்ளார். இவரின் வருகையானது பரந்தளவிலான ஆர்வத்தையும் அதேசமயம் சர்ச்சையையும் தோற்றுவித்திருக்கிறது.

1988 இல் இடம்பெற்ற விமானக் குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் (259 பேர் விமானத்திலும் 11 பேர் தரையிலும் பலியான சம்பவம்) குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரேயொரு நபரும் லிபிய நாட்டவருமான அப்தெல் பாசெற் அல்மெற்ராகியை ஸ்கொட்லாந்து அண்மையில் விடுவித்த சர்ச்சையில் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்போவதாக எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, ஈரானிய ஜனாதிபதி அஹமதி நிஜாத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரானின் அண்மைய தேர்தல் சர்ச்சை மற்றும் அவரின் இஸ்ரேலிற்கு எதிரான கருத்துகள் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐ.நா.பொதுச் சபையின் வருடாந்த அமர்வில் 120 க்கும் மேற்பட்ட ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் வெளிவிவகார அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களில் ஐ.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் 5 பேரும் உள்ளடங்கியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெத்வேதேவ், சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொலஸ் சார்கோஸி, பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் ஆகிய அணு வல்லரசுகளின் தலைவர்களே இவர்களாகும்.

நாளை புதன்கிழமை ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த அமைச்சர்கள் மட்ட மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில், ஒருநாள் முன்னராக நியூயோர்க்கிற்கு வருகைதருமாறு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் டிசம்பரில் கோபனேஹறனில் உலகம் வெப்பமடைதலைத் தடுப்பது தொடர்பாக புதிய உடன்படிக்கையொன்று மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டிருக்கின்ற நிலையில், அதற்கு முன்பாக அரசியல் ரீதியான முக்கியமான பேச்சுகளை நடத்தும் நோக்கத்துடன் பான் கீ மூன் இந்த அழைப்பை விடுத்திருப்பதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன.

இன்று செவ்வாய்க்கிழமை காலநிலை தொடர்பான உச்சிமாநாடு இடம்பெறவுள்ளது. சுமார் 100 தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அவசர நிலைமைக்கு உலகின் பங்குடமையை வெளிப்படுத்துவதற்காக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பதாக பான் கீ மூன் கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

அடுத்ததாக உலக அரங்கில் ஒபாமா உரையாற்றவிருப்பது தொடர்பாகவும் முன்னுரிமை கொடுத்து பேசப்படுகிறது. சர்வதேச ரீதியாக அமெரிக்காவின் நிலைப்பாடுகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் முஸ்லிம் உலகை ஒபாமா எவ்வாறு பற்றிக்கொள்ளவுள்ளார் என்பது அவரின் உரையில் வெளிப்படுத்தப்படுமெனவும் எதிர்பார்ப்புகள் மேலோங்கிக் காணப்படுகின்றன.

பயங்கரவாதம், இனப்படுகொலை, அட்டூழியங்கள், சைபர் தாக்குதல்கள், அணு ஆயுத நடவடிக்கைகள், தொற்று நோய்கள், குற்றச் செல் கட்டமைப்புகள் என்பன போன உலகு எதிர்நோக்கும் சவால்களை நாடுகள் எதிர்கொள்வதற்குத் தேவையான தலைமைத்துவங்களின் ஒத்துழைப்பைக் கோரும் செய்தியை ஒபாமா விடுப்பார் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியிருக்கிறார்.

இதேவேளை, வியாழக்கிழமை ஐ.நா.பாதுகாப்புச் சபையின் உயர்மட்டக் கூட்டத்திற்கு ஒபாமா தலைமை தாங்கவுள்ளார்.

ஆயுதப் பரிகரணம், அணு ஆயுதப் பரம்பை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தொடர்பாக இந்த உயர்மட்டச் சந்திப்பில் ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, ஐ.நா. நான்கு வாரங்களில் ஒபாமாவும் அஹமதி நிஜாத்தும் சந்தித்து கைகுலுக்கிக்கொள்வார்களா என்று பற்றிய ஊகங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஐ.நா.செயலாளர் நாயகம் புதன்கிழமை அளிக்கும் மதிய போசன விருந்தில் கலந்துகொள்ள இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குழுவாக நின்று புகைப்படம் எடுக்கும் விதத்திலும் இருவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஒபாமா புதன்கிழமை உரையாற்றியதைத் தொடர்ந்து உடனடியாகவே லிபியத் தலைவர் கடாபி உரையாற்ற விடுப்பதால் இருவரும் சந்திப்பார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட விடயமாகும்.

இதேவேளை, எதிராளிகளான பலஸ்தீனியத் தலைவர் அப்பாஸையும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் ஹதன்யாகுவையும் ஒபாமா ஒன்று சேர்க்கும் முயற்சிக்குத் திட்டமிட்டுள்ளார்.