சரத் பொன்சேகா விசாரணை : அரசியல் பின்னணி?

Sarath & mahinthaஇலங்கை மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவ உயர் தளபதியை விசாரணை செய்ய திட்டமிடுகிறது என்று இலங்கை தெரிவித்தமை குறித்து அமெரிக்கா எதுவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யும் திட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க உள்ளக பாதுகாப்பு திணைக்களத்திடம் கேட்கும்படி அரசாங்கம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரை அழைத்து கோரிக்கை விடுத்துள்ளது.அத்தகைய விசாரணை ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்று அமெரிக்க உள்ளக திணைக்களத்தினால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாதிருக்கிறது என்று திணைக்கள பேச்சாளர் மெற் சன்டிலர் தெரிவித்தார்.ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் அயன் கெலி, இந்த விடயம் தமக்கு சம்பந்தம் இல்லாதது என்று கூறினார்.

அமெரிக்காவில் நிரந்தர வதிவிட அனுமதியும் கிறீன் கார்ட்டும் பெற்றுள்ள இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் பொன்சேகா மத்திய மாநிலமான ஒக்ளஹோமாவில் வாழ்ந்துவரும் அவரது மகள்மாரை பார்ப்பதற்காக தற்போது அங்கு சென்றுள்ளார். அமெரிக்க குடிவரவு விவகாரங்களை கையாளும் உள்ளக பாதுகாப்பு திணைக்களம் பொன்சேகாவை இன்று புதன்கிழமை விசாரணை செய்ய இருப்பதாக கடந்த வாரம் அவருக்கு அறிவித்திருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை பெற்றுக் கொள்ளவே அமெரிக்க அதிகாரிகள் ஜெனரல் பொன்சேகாவை விசாரிக்க முயல்கிறார்கள் என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார். இதேவேளை அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் சமூக அமைப்பு ஒன்று ஜெனரல் பொன்சேகா விசாரிக்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரஜைகள் என்ற வகையில் இலங்கையில் நீதியை நிலை நாட்ட தங்கள் அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள இந்த முதலாவது நடவடிக்கை தங்களுக்கு உற்சாகத்தை தருவதாகவும் இலங்கையில் மக்கள் சமத்துவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான வாஷிங்டன் அமைப்பின் பிரதிநிதி அஞ்சலி மணிவண்ணன் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமரிக்காவின் இந்தநடவடிக்கையானது  வெறுமனே இலங்கை மீதான அரசியல் சார் அழுத்தங்களை  உருவாக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக  அமரிக்கா கருதுகிறதா என அரசியல் விமர்சகர்கள்  கருத்து  வெளியிட்டுள்ளனர்.