சரத் பொன்சேகா : சரவதேச மட்டத்தின் சதி?

sarathfசரணடைய வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் கொலை செய்யவில்லை என சரத் பொன்சேகாவே மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறானதொரு விடயம் தொடர்பில் நாங்கள் விசாரணைகளை செய்யவேண்டிய அவசியமில்லை. எதிரணி வேட்பாளர், பரஸ்பரம் முரண்பட்ட கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார் என்றும் அரசாங்க அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ராஜித்த சேனாரட்ண, ஜோன் செனவிரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரட்ன,

சரணடைய வந்த புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு இராணுவத்துக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு வழங்கியதாக தான் கூறவில்லை என்று எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அப்படியானால் குறித்த ஊடகத்துக்கு எதிராக ஏன் வழக்கு தாக்கல் செய்யவில்லை? ஏற்கனவே சில ஊடகங்களுக்கு எதிராக அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது தவறுதலாக கூறிய விடயமாக தெரியவில்லை.

ஜெனரல் சரத் பொன்சேகா ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார். அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறியுள்ள அவர் அதேவேளை சில அதிகாரங்களை தான் வைத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அவர் வைத்துக்கொள்ளப்போகும் அதிகாரங்கள் என்ன? நிறைவேற்று முறைமையை நீக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். மேலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும். இவை தொடர்பான தெளிவுடன் அவர் இருக்கின்றாரா?

சில அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்குமானால் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் கிடைக்காமல் போய்விடும். எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றனர். இரண்டு கட்சிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே இங்கு முயற்சிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வுபெற்றார். அவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில ஓய்வு பெறுவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பொது வேட்பாளர் விடயமாக ஐ.தே.க.வும் மக்கள் விடுதலை முன்னணியும் கருத்து வெளியிட்டு வந்தது. அப்படியாயின் ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்தவாறு இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டாரா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அவ்வாறு கலந்துகொண்டிருந்தால் அது பாரிய தவறாகும்.

இராணுவத்தினரின் சகல நடவடிக்கைகளுக்கும் தான் பொறுப்பேற்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுவொரு அடிப்படையற்ற கருத்தாகும். காரணம் இராணுவத்தினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முப்படை தளபதியே பொறுப்பேற்பார் என்றார்..

சுசில் பிரேம்ஜயந்த இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறியதாவது

30 வருடகால பயங்கரவாதத்திற்கு பின்னர் நாட்டில் அமைதிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒற்றுமைப்படுத்தப்பட்ட நாட்டிலேயே இம்முறை தேர்தல் நடைபெறுகின்றது. ஒருகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி என்ற ஒரு பிரதேசம் இருந்ததை நாம் மறந்துவிடவில்லை. அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலும் மிகவும் அமைதியாக நடைபெற்றது. நான் அண்மையில் யாழ்ப்பாணம் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்தேன். அப்பகுதிகளில் எதிர்க்கட்சியினர் ஆர்வமாக இருப்பதை காணமுடியவில்லை. ஆனால் எமது ஆரதவாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இராணுவம் தொடர்பான கருத்தை தான் கூறவில்லை என்று ஜெனரல் சரத் பொன்சேகா திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளார். ஆனால் மறுநாள் சரத் பொன்சேகா செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அதன்போது அனுரகுமார திசாநாயக்கவுக்கும் மங்கள் சமரவீரவுக்கும் இடையில் அவர் இருப்பதை கண்டோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஏன் அவர் மறுப்பை வெளியிடவில்லை? இந்த விடயம் தொடர்பில் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்க்கவேண்டும்.

இணையதளங்களில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த விடயத்தை 15 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதாக தெரிகின்றது. இதனால் நாட்டுக்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது சரவதேச மட்டத்தில் எவ்விதமான அழுத்தங்கள் வந்தன என்று அனைவருக்கும் தெரியும். சரத் பொன்சேகாவின் கூற்று காரணமாக புலி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் பல சக்திகள் ஈடுபட்டன. இவை எல்லாவற்றுக்கும் மக்கள் ஜனவரி 26 ஆம் திகதி பதிலளிப்பார்கள்.

அதாவது ஜெனரல் சரத் பொன்சேகா ஸ்திரமான நிலையில் இல்லை என்பது தெளிவாகின்றது. இது முதற்தடவையல்ல. நாட்டு மக்களின் பாதுகாப்பை ஏற்கவுள்ள ஒருவர் இவ்வாறு நிலைப்பாடுகளை மாற்றலாமா? ஊடகவியலாளர் கூறியதாகவே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு மூன்றாம் நபர் கூறிய விடயத்தைக்கொண்டு கருத்து வெளியிடலாமா? ஏற்கனவே யுத்தக்குற்ற விவகாரங்களில் பாதுகாப்பு செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக சர்வதேச மட்டத்தில் சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றுக்கு இவர் சாட்சிகளை வழங்குகின்றாரா? நாட்டைப் பிரிக்க முயற்சித்த சக்திகளால் மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.