சரத் பொன்சேகா குற்றவாளி : இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவர் இராணுவ சட்டங்களின்படி அபகீர்த்தி கொண்ட குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமானால் இராணுவம் சார்பில் அவர் வசமுள்ள ஜெனரல் உட்பட்ட சகல தரங்களும் பதக்கங்களும் அகற்றப்படும்.

இந்தநிலையில் இராணுவ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இறுதி பரிந்துரைக்காக அனுப்பி வைக்கபபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் இறுதி முடிவிற்கு அமையவே இந்த தீர்ப்பு செயல்படும் என ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இராணுவ சேவையில் இருந்த போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சரத் பொன்சேகாவுக்கான முதலாவது நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதன் போது அரசாங்க தரப்பில் நான்கு பேர் சாட்சியமளித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் செனவரத்ன ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, விமான சேவை அதிகாரியும் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் நடவடிக்கையாளருமான காமினி அபேரத்ன மற்றும் மேஜர் பிரிசாந்த சில்வா ஆகியோரே சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியமளித்தனர்.

இதேவேளை இந்த தீர்ப்புக்கு எதிராக தாம் மேன்முறையீடு செய்யப்போவதாக சரத் பொன்சேகாவின் சார்பான சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.