சரத் பொன்சேகா இராணுவ நீதி மன்றில் விசாரணை : மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை!

இராணுவப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற விபரங்கள் உடனடியாக வெளிவராத போதிலும், அவரை இராணுவ சட்டதிட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு றோயல் கல்லூரி மாவத்தை, இலக்கம் 1/3 விலாசத்தில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்த வேளையில் இராணுவப் பொலிஸாரால் அவ்வலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு கடமையிலிருந்த ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மெய்ப்பாதுகாவலர், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வசமிருந்த ஆயுதங்களையே அவர்கள் முதலில் கைப்பற்றினர்.

இதனையடுத்து, அலுவலகத்திற்குள் உட்புகுந்த இராணுவப் பொலிஸõர் அவரைக் கைதுசெய்து விசேட வாகனத்தில் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டதுடன், இராணுவப் பொலிஸார் அவரது அலுவலகத்தை சுற்றிவளைத்தமையினால் அப் பகுதியிலுள்ள வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.

அவர்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஆயுதங்கள் அபகரித்துச் செல்லப்பட்டமையினால் அவர்கள் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலக அறையிலேயே பலமணி நேரமாகக் காத்திருந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்படும் வேளையில் அவருடன் இருந்தவர்கள் இரவு 10.40 மணிக்குப் பின்னரே அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை ஆஜர் படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இராணுவ குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தன்னை கைதுசெய்யவோ படுகொலை செய்யவோ திட்டமிட்டுள்ளதாக பொன்சேகா ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்த வேளையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் குற்றவியல் நீதி மன்றத்தில் மரண தண்டனை முறைமை நீக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இராணுவ நீதி மன்றத்திடம் இவர் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவிற்கு மரணதண்டனை  அல்லது  ஆயுள் தண்டனை வழங்கப்பட வாய்ப்புண்டு எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்தியா சீனா ஈரான் ரஷ்யா போன்ற நாடுகளுடனான இலங்கையின் கூட்டும்  அதற்கெதிரான அமரிக்க  ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர்ப் பிரதினிதியுமான சரத் பொன்சேகாவின் கைது   வல்லரசுப் போட்டியின் ஆடுகளமாக இலங்கை மாறியுள்ளதை மறுபடி நிரூபிக்கிறது.

One thought on “சரத் பொன்சேகா இராணுவ நீதி மன்றில் விசாரணை : மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை!”

 1. அரசு ஆணைக்கு இணங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும், உறுப்பினர்களையும் சேர்த்து 20,000 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களையும் கொன்றோழிப்பதர்க்கு அனுசரையாலனாகவும், நிறைவேற்று பொறுப்பாளனாகவும் இருந்த முன்னாள் இராணுவத் தளபதியும், கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமையதிகாரியும், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா, தனக்கு எதிரான அரசியல் யுத்தத்தை சந்திக்க தயாராக உள்ளதாக சவால் விடுத்தவேளை, அவரை கவுரவித்த ஜனாதிபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு போட்டியாக இருந்து தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும் ரஷ்யாவில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வேளையில் இராணுவப் பொலிஸாரினால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்தே நேற்று திங்கட்கிழமை இரவு 9.50 மணியளவில் அவரை இராணுவப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதியைக் கொலைச்செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  தனது கைதிற்கு முன், “என் மீதான அரசியல் யுத்தம்,​​ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ​போன்றதாகும்.​ புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி அவ்வளவு எளிதாக ​கிடைத்திடவில்லை.​ ​ அதைபோலவே எனக்கு எதிரான அரசியல் யுத்தமும் ​அவ்வளவு எளிதாக முடிந்து விடாது என கருதுகிறேன்.​ இத்தகைய யுத்தத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்” என்று தெரவித்திருந்தார்.

  ​ “ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததாலேயே என் மீது நெருக்குதல்கள் தொடர்கின்றன.​ எனது சகாக்களும்,​​ ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ இருந்தாலும் இந்த அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சபோவதில்லை.​ ​ இலங்கையில் ஜனநாயகமும்,​​ நீதியும் கிடைக்க தொடர்ந்து போராடுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  சர்வதேச மன்னிப்பு சபை

  இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

  கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற சரத் பொன்சேகா நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்துள்ள லண்டனை மையமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்பு சபை, தேர்தலுக்கு பின்னர் அரசியல் எதிர்க்கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் செயலையே இது பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

  சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் கருத்துரைக்கையில், சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை எனக் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் வெற்றியின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும் எனவும் பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

  ஐநா செயலாளர் பான் கீ மூன்

  இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளைக் கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரிடம் வினவியபோது, இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியைக் கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் இணக்கப்பாட்டுக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

  அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  அமெரிக்கா

  முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்த மீட்சிக்குப் பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.

  சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள, அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் கிரௌலி,

  “அமெரிக்கா இலங்கை நிலைமையை அவதானித்து வருகிறது. அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானிக்கிறது.

  இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

  இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். பொதுத் தேர்தல் நடைபெறப் போகும் இச்சந்தர்ப்பத்தில், இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல்” என்றார்.

  சரத் பொன்சேகா, அமெரிக்க ‘கிரீன் கார்ட்’ வதிவிட அனுமதியைக் கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களைக் கொண்டுவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

  Cold war முடிந்திருந்த நிலையிலும் இக்கைது எம்மண்ணில் நடக்கும் அந்நிய சக்திகளின் ஓர் பிரதிபலிப்பேயாகும், முல்லிவாய்க்காலில் தமிழீழ தேசியத் தலைவர் என்று வர்ணிக்கப்பட்டவரை காப்பாற்ற முடியாதவர்கள், என் தேர்தலிற்கு முன் எழுதிய கருத்துக்களில் கூறிய மாதிரி அமெரிக்க சென்று ஆசீர்வாதத்துடன் திரும்பி வந்து அரசியலில் இறங்கி, தற்போது சர்வதேச நீதி மன்றில் தான் ஓர் சுற்றவாளி போன்று சாட்சியமளிக்க தயார் என்று அடுத்த சவால் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  இது ஒரு ஆரம்பமே…….இன்னும் வரும் பொறுத்திருந்து பார்ப்போம்……..இலங்கையின் அமைதியை, வளர்ச்சியை, இந்திய சீன, ரஷ்ய நட்புறவை விரும்பாதவர்கள்……இன்னும் விளையாடுவார்கள். இனியும் இதற்கு எம் தமிழ் தலைமைகள் துணை போகாமல் எம் நாட்டை கட்டி எழுப்ப ஒன்று சேர்வோமாக!

  அதற்க்கு மகிந்தவும் அனைத்து மக்களையும் நேசித்து, ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, அனைத்து மக்களும் உணமையான சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்தி இந்நாட்டு அனைத்து மக்களின் நற்பெயரையும் எடுக்க முயற்சிப்பார் என நாமும் எதிர்பார்க்கிறோம்!

  எல்லாவற்றிற்கும் மனித நேயம்; மனிதாபிமானம் வேண்டும்!

  மேலும் தொடர்பான செய்திகட்கு:
  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=20495
  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=World&artid=194338&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=
  http://www.dailymirror.lk/index.php/news/1522-concerns-over-fonsekas-arrest.html
  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=20492
  http://news.bbc.co.uk/2/hi/south_asia/8504882.stm

Comments are closed.