சரத்தின் ஆட்கொணர்வு மனு : விசாரணையிலிருந்து விலகினார் நீதிபதி ஒருவர்!

ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையிலிருந்து ஒருநீதிபதி  இன்று விலகிக் கொண்டதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தல் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்  நீதிபதி சத்யா ஹெட்டிகே,  நீதிபதிகளான ரஞ்சித் சில்வா, என்.லேகம்வசம் ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அத்தருணத்தில் தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணயிலிருந்து தாம் ஒதுங்குவதாக  நீதிபதி  என்.லேகம்வசம் தெரிவித்தார்.

இதன்படி இம்மனு தொடர்பான விசாரணை இம்மாம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பலருக்கு எதிராக இம்மனுவை ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா தாக்கல் செய்திருந்தார்.

தனது கணவர் பெப்ரவரி 8 ஆம் திகதி இராணுவத்தினரால் பலவந்தாகக் கடத்தப்பட்டு, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படாமல் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனுவில் அவர் குற்றஞ் சாட்டியிருந்தார்.