சம்பந்தனைப் புறந்தள்ளிய சிறிதரன், கிளிநொச்சியில் பங்காளிக் கட்சிகளைப் புறந்தள்ளி வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளார்!

ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்குமான ஆசனப் பங்கீடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் வைத்து ஒவ்வொரு கட்சிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழரசுக் கட்சிக்கு 60வீதமும், ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்களுக்கு இருபது இருபது வீதமாகவும் ஆசனங்கள் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இதற்கு சிறிதரன் இணங்காத நிலையில், நேற்று முன்தினம் பங்காளிக் கட்சிகள் இன்றி தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை மாத்திரம் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலை சிறிதரன் சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து, பங்காளிக்கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள்  மீண்டும் மாவை சேனாதிராஜாவின் கவனத்திற்குக் கொண்டுசென்றதனையடுத்து, மாவை சேனாதிராஜா சிறிதரனை தொடர்புகொண்டு பங்காளிக் கட்சிகளுக்குரிய ஒதுக்கீட்டை வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அத்துடன் பங்காளிக் கட்சிகளுக்கு அவர்களின் ஒதுக்கீட்டை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், சிறிதரன் பங்காளிக் கட்சிகளை நிராகரித்து தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலைச் சமர்ப்பித்துள்ளார்.

Leave a Reply