சமத்துவம் என்பது மனிதனின் மிகப் பெரிய உரிமையாகும். இன்று இந்தப் பிரச்சினை பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது:எம்.முத்துக்குமார்

இந்த நாட்டில் மொழிவாதம் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இணக்கம் காண முடியாத இரு கூறுகளாக பிளவுபட்டிருப்பதோடு, அது நாட்டின் வளர்ச்சியையும் மிக மோசமாக பாதித்துள்ளதாக சகவாழ்வு மன்ற மொழித் திட்டமிடல் இணைப்பாளர் எம்.முத்துக்குமார் தெரிவித்தார். புத்தளம் சகவாழ்வு மன்றத்தின் அரச மொழிக்கொள்கை மற்றும் மொழியுரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த வாரம் புத்தளம் சேனாதிலக்க ரெஸ்ரூரண்ட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வனவாளராக கலந்து கொண்ட சகவாழ்வு மன்ற மொழித்திட்டமிடல் இணைப்பாளர் எம்.முத்துக்குமார் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

இலங்கையில் மொழி பற்றிய உணர்வும் மொழி பற்றிய பிரச்சினைகளும் நீண்ட கால வரலாற்றை உடையவை. 1833 ஆம் ஆண்டு கோல்பு?க் அரசியல் திட்டத்தில் இருந்து ஆங்கிலமே இலங்கையில் அரச கரும மொழியாக இருந்தது. இது ஏறத்தாழ இலங்கை சுதந்திரம் அடையும் வரை நடைமுறையில் இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் ஆங்கிலத்தின் இடத்தை சிங்களம் பெற்றுக் கொண்டது. 1956 ஆம் 33 ஆவது இலக்க அரச கரும மொழிச் சட்டத்தின் ஊடாக சிங்களம் தனி முதன்மை மொழியானது. இந்தச் சட்டமே இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களை நிரந்தரமாக பிரிப்பதற்கான தடுப்புச் சுவராக அமைந்தது. ஒரு மொழி இரு நாடு என்று குறிப்பிடத்தக்க அளவுக்கு தொடர்ந்து நாட்டுமக்களை வன்முறையை நோக்கி இழுத்துச் சென்றது. இந்தநிலையில், எமது சகவாழ்வு மன்றம் இரு மொழிகளுக்கு இடையிலும் சமத்துவத்தையும் அந்தஸ்தையும் பேண முயன்று வருகின்றது.

புத்தளம் மாவட்டத்தில் கணிசமான அளவு தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த போதிலும், சிங்களத்திலேயே அரச கருமங்கள் இடம் பெறுகின்றன. இதனை மாற்றி, இரு மொழிகளும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே மக்களிடத்தில் கையெழுத்து திரட்டும் பணியை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

தற்போது, இலங்கையில் தமிழ் ஒரு அரச கரும மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நடைமுறையில் இல்லை என்பதே யதார்த்தம். எனவே சகல மட்டங்களிலும் தமிழையும் ஒரு அரச கரும மொழியாக பயன்படுத்துவது அவசியமான ஒரு கடவிடிக்களே. இதனை நடைமுறைப்படுத்தவே 1997 ஆம் ஆண்டு அரச கரும மொழிகள் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. சகல அரச திணைக்களங்களிலும் தமிழை செயல்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் ஆராயப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழில் கருமங்களை செய்வதற்கான இயந்திரங்கள், ஆளணி வசதிகள் பற்றி ஆராயப்பட்டபோதும் அது முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை என்பதை இன்று நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது.

மொழி உரிமைகள் மீறப்படுகின்ற போது, உயர் நீதிமன்றத்திற்கு நியாயம் கோருவதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமை உண்டு. அரசியல் அமைப்பு அதனை உறுதிப்படுத்துகின்றது. ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் தமது கருமங்களை அவர்களது சொந்த மொழியில் மேற்கொள்வதற்கான உரிமைகள் இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த பிரஜைகள் அடிமைகளே. குறித்த மொழி அமுல்படுத்தப்பட வில்லையெனில் அது இரண்டாம் தர மொழியாகவே கருதப்படும். அந்த மொழிக்குரியவர்களும் இரண்டாம் தரப்பினர்களே. இந்த மக்கள் தமக்கான மொழிச்சமத்துவத்திற்காக போராடவும் தயங்க மாட்டார்கள். சமத்துவம் என்பது மனிதனின் மிகப் பெரிய உரிமையாகும். இன்று இந்தப் பிரச்சினை பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது.

ஆகவே, இரு மொழிகளதும் அந்தஸ்து சமமாக மதிப்பிட வேண்டும் என்பதே நியாயமான கோரிக்கையாக இருக்க முடியும், என்றார்.