சபாநாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி : தமிழரசன்

book1

லண்டனைச் சேர்ந்த சபாநாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி என்ற நூல் 104 பக்கங்களில் தேசம்இணையத்தளம் சார்பில் வெளிவிடப்பட்டுள்ளது.

புலிப்பாசிசமானது இராணுவரீதியில் இனி எழுதமுடியாதபடி நிர்மூலமாகிக்கொண்டிருக்கும் அரசியல் பொழுதில் இந்த நூல் வெளிவந்துள்ளது. இதற்கான முன்னுரையை தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மாக்ஸ் எழுதியிருக்கிறார். புகலிடத்தமிழ் பரப்பில் தமிழ்தேசியவாதத்துக்கு அரசியல் ரீதியில் சமமான மாக்சியமல்லாத பல்வேறு உதிரிப் போக்குகளையும் தன்னைத்தானே தேடியவையும் பலவித தனிமனிதவாதக் கருத்தோட்டங்களையும் உருவாக்கி உலாவவிட்டதில்அ.மாக்ஸ் பங்கு முக்கியமானது.தமிழ்த்தேசியவாத அரசியலின் ஆயுதப் பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்காட்டிய பலர் இப்போக்குகளில் இளைப்பாறச் சென்றார்கள்.இவை அ.மாக்ஸ் நீண்டகாலமாக ஸ்டாலினிசத் தத்துவத்துக் குறைபாட்டால் துன்புற்று வருபவர் என்றவகையில் மட்டும் நிகழவில்லை. மாறாக 1990 களில் உலக மயமாக்கலில் இந்தியாவானது நுழைந்து கொண்டிருந்தபோது அதற்கு இசைவான இந்திய நடுத்தரவர்க்க உணர்வுகளின் வெளிப்பாடாகவே அ.மாக்ஸ் விளங்கினார்.முதலாளித்துவ ஜனநாயகப் பிரச்சாரம் வர்க்கம்களையும் தத்துவத்தையும் தாண்டிக் கடந்த அரூவமான மனிதாபிமானம் மற்றும் புதிய நுகர்வுக் கலாச்சாரப் பண்புகளையும் இவரைப்போன்றவர்கள் கொண்டு வந்தனர்.இவர்கள் சோசலிசம் இனி திரும்பி வரப்போவதில்லை எனவும் நேற்றுப் போல் இன்றும் நாளையும் வரலாறும் பொருளாதார வாழ்வும் மாற்றமின்றி தொடரப்போவதாக நம்பியவர்கள். உலக மயமாதல் இந்தியா உட்பட ஆசிய, லத்தீன்அமெரிக்கா,ஆபிரிக்க நாடுகளில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரப்போகின்றது என்ற எதிர்வு கூறலும் மதிப்பீடுகட்கும் இவர்கள் சக்தியற்றுக் கிடந்ததுடன், சுயம்கள்,அடையாளங்கள்,தனித்துவம்களைத் தேடும் முதலாளித்துவ தனிமனிதவாதப் போக்குகளை நோக்கி நகர்ந்தனர்.இத்தகைய போக்குகளின் பிரச்சாரகரும் தத்துவவாதியுமான அ.மாக்ஸ் இங்கு நாவலனின் நூலுக்கு மிகவும் பின்தங்கிய சோம்பலான ஒரு முன்னுரையை எழுதியிருக்கின்றார்.

நாவலனை ஒரு செவ்வியல் மாக்சியப் பார்வையுடையவராகவும் கோட்பாட்டு நூல்கட்கே உரித்தான மேற்கோள்கள் திணிப்புக்கள் இல்லாமல் எழுதுபவராகவும் அ.மாக்ஸ் காண்கிறார்.அ.மாக்ஸ் ஸ்டாலினிச மாவோயிச அரசியலில் வளர்ந்து ஆளானவர். மாக்சின் மூலநூல்களில் கற்பதற்குப் பதிலாக ஸ்டாலினிச தத்துவார்த்த எழுதல் முறைக்கும் அதன் மாக்சிய இயங்கவியலுக்குப் புறம்பான மாறாநிலை வாதப் போக்குகட்கும் மாவோவின் மேற்கோள்கள் அடங்கிய சிறுகையடக்க நூல்களிற்கும் இத்தகயவர்கள் கடன்பட்டவர்களாகவே இருந்தனர்.இந்திய இடதுசாரிஇயக்கங்கள் இந்தியாவின் எந்தவரலாற்றுச் சூழலில் பொருளாதார வளர்ச்சித் தருணத்தில் பிறந்தன செயற்பட்டன என்ற ஆய்வுகட்குப் பதில் அவர்கள் தத்துவரீதியில் சிதைந்தமைக்கான காரணங்களை அவரால் தேடி நிறுவமுடியாமையால் மாக்சில் இளம் மாக்ஸ், முதிய மாக்ஸ்.மாக்சியத்தில்மரபு, செவ்வியல், நவ, என்றுபலவித போக்குகள் இருப்பதாக மேற்குலக சீர்திருத்தவாத இடதுசாரிக் கருத்துக்களின் துணையுடன் நம்பத் தொடங்கினர். ஒரு புரட்சி எத்தகைய வரலாற்றுக்கட்டத்தில் உள் – வெளிநிபந்தனைகளில் வாழ முயன்றது என்ற பகுப்பாய்வுகட்கு அவர் முயலாமலே தவறுகளை மாக்சிய சித்தாந்தத்தில் தேடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டார். ஸ்டாலினிசம் என்றகருத்து நிலையை கடைசிவரை அ.மாக்ஸ் உள்வாங்கவில்லை சோவியத் புரட்சியில் லெனினுக்கு அடுத்த பாத்திரம் வகித்த ரொட்ஸ்கியை கற்கவில்லை. ஆனால் எஸ்.வி.இராசதுரை இவரை விட முன்னே நின்றார். அதற்கு இலங்கையைச் சேர்ந்த ரொட்ஸ்கியின் கருத்துக்களில் பழக்கமுடைய ரெஜி சிறிவர்த்தனா காரணமாக இருந்தார் எனலாம்.இங்கு நாவலனின் எழுத்தை செவவியல்மாக்சிய வகைப்படுத்தலுக்குள் அ.மாக்ஸ்கொண்டு வந்தமை என்பது அது ஒரு பழைய பார்வை என்பதைக் குறிப்பால் உணர்த்தவே என்பதை நாம் கவனிக்கலாம்.

அ.மாக்ஸ் எழுதுவதுபோல் ஒரு தத்துவார்த்தக்கட்டுரை மாக்சிய மேற்கோள்கள் இன்றி எழுதமுடியுமா? பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைப் பற்றி எழுதும்போது டார்வினையும் சார்பியல் கொள்கை பற்றி எழுதும்போது அயன்ஸ்டைனையும் உளவியலைப் பற்றிப் பேசும்போது சீங்மென்ட் புறைட்டையும் விட்டுப் பேச இயலுமா? வானவியலின் ஆரம்பத்தை கோப்பர் நிக்கலசை விட்டு விட்டுத் தொடங்கமுடியுமா?மாக்சியத்தை விட்டு எவராவது மூலதனச் செயற்பாட்டை வர்க்க சமூக இயக்கத்தை விளங்க இயலுமா? பௌதீகத்திலோ பொருளாதாரத்திலோ மேற்கோள்கள், பரிசோதனை முடிவுகள் இல்லாமல் விளக்கமுடியுமா? ஸ்டாலினிசம் மாக்சியத்தை இயக்கமற்ற சுலோகமாக்கியது என்பதால் மாக்சிய மேற்கோள்கள் கருத்துக்கள் தத்துவத்தை எழுதும்போது அந்நியமாகி விடுமா?

அ.மாக்ஸ் எழுத்துக்களில் பொருளாதாரம் மேலான கரிசனைஇராது. புள்ளிவிபரங்கள்,மேற்கோள்களால்ஆதாரம்காட்டி நிருவும்பகுப்பாய்வுகட்கு அவர்பழகியவருமல்ல அ.மாக்ஸ் தன்னைச் சுற்றி மனம் போன போக்கில் சிந்திப்பவர்களையும் வர்க்கமறியாத அரசியலுக்குரியவர்களையும் படைக்கக் காரணமானார். இதனால் தான் இன்றைய காலகட்ட அரசியலுக்கு பொருத்தமற்றவர்களாக சமூக இயங்கியல் போக்கின் வெட்ப தட்பமறியாதவர்களாகவும் ஆகிப்போயினர்.

நாவலனின் எழுத்தானது அ.மாக்ஸ் சித்தரிப்புப் போல் செவ்வியல் மாக்சியவாதியாக அல்ல. செவ்வியல் தமிழ்தேசியவாதியாகவே தென்படுகின்றார். இடதுசாரிச் சிந்தனையில் தொடங்கி நாவலன் கருத்துக்கள் தமிழ்த்தேசியவாதத்தில் தான் முடிவுறுகின்றன. பாலசிங்கம் போன்றவர்கள் இப்படித்தான் இடதுசாரிச் சொற்களை வைத்துக் கொண்டு புலிப்பாசிசத்துக்கு தத்துவ நியாயம் தேட முயன்றனர். லண்டனைச் சேர்ந்த தொழிலாளர் பாதை’ அமைப்பைச் சேர்ந்த கெலி பண்டா போன்றவர்களின் தேசிய இனம்களின் சுயநிர்ணயம் என்ற கருத்தை பாலசிங்கம் தன் சொந்தக் கருத்தாக சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற நூலில் எழுதினார். நாவலனுக்கு முன்பே புகலிடத் தமிழ்ப் பரப்பில் தமிழ்த் தேசிய உருவாக்கம் ஏகாதிபத்தியத்தின் அரசியலுக்கு புலிப்பாசிசம் கருவியாவது பற்றிய மாக்சிய பார்வையிலான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொண்டே நாவலனை நாம் வாசிக்கவேண்டும். கோட்பாடுகள் மேற்கோள்கள் இல்லாமல் எழுதுவதென்பதை ஆதரிக்கும் அ.மாக்ஸ் இப்போக்குகள் முதலாளிய அரசியல் சொற்களிலான சீர்திருத்தவாத அரசியல் விளக்கங்களாகவே முடியும் என்பதை எண்ணவில்லை. மாக்சிய கருத்துக்களோடு எந்தவொரு அற்பமான தொடர்பு கூட இல்லாதவர்கள் தம்மை இடதுசாரிக் கருத்துக்கள் நிறைந்தவர்கள் என்று உரிமை கோரும் காலமிது.தமிழ்நாட்டிலிருந்து பெரியார் அம்பேத்கார் பற்றி எழுதுவோர் அ.மாக்ஸ் உட்படசகலருமே அவர்களின் மேற்கோள்கள், உதாரணங்கள், பக்கத்துக்குப் பக்கம் பந்திகளால் நிரம்பிய கட்டுரைகளை எழுதுகின்றார்கள். மாக்சிய தத்துவ கலைச் சொற்களை அறியாமல் பேசுபொருளை உரியமுறையில் விளங்கத்தக்க வார்த்தைகளைத் தேர்ந்தெடாமல் எப்படி கட்டுரை எழுத முடியும்?

ஆரியர், திராவிடர் சண்டை சச்சரவுகளிலும் அதன் துணைத்தத்துவமாக எழுந்த அரசியல் அடித்தளமற்ற தனிப் பிராமணிய எதிர்ப்பிலும் நீண்டகாலம் சீவியம் நடத்திவந்த மாக்ஸ்இந்த நூல் முன்னுரையில் முதல்முறையாக ஆரியர், திராவிடர் இரண்டும்  வேறுவேறான இனப்பிரிவினர் அல்ல மாறாக, மொழிப் பிரிவினரே என்று ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இவர் இதுவரை பேசியும் எழுதியும் வந்த விடயங்கள் அடிப்படையிழந்து போகின்றன. எனினும் அ.மாக்ஸ்கடைசி முயற்சியாக ஆரியத் திராவிடர் கருத்தாக்கங்கள் பிரிட்டிஸ் வருகைக்கு முன்பே இருந்தது. ஆதி சங்கரர் 8ம் நூற்றாண்டில் (கி.பி) திருஞானசம்பந்தரை  திராவிடச்சிசு’ என்று கூறியதாய் பலவீனமான சான்று ஒன்றைக் காண்பிக்கின்றார். திருஞானசம்பந்தர் 7ம் நூற்றாண்டில்(கி.பி) அதாவது இவர்கள் கூறும் ஆரியர் – திராவிடப் போராட்டங்கள் நடந்ததாகக் கூறும் கி.மு. 1500 அல்லது 2000 ஆண்டுகட்கு மிக மிகப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் என்பதுடன் திருஞானசம்பந்தர் ஒரு பிராமணர். அவர் ஆரியர், திராவிடர் பிரச்னையை அறியாதவர், எதிர்கொள்ளாதவர், தேவார திருவாசகங்கள், ஆழ்வார் பாடல்கள் பழந்தமிழ்இலக்கியங்களிலோ மூத்த நூலான தொல்காப்பியத்திலோ இந்தச் செய்திகள் கிடையாது. மேலும் ஆதிசங்கரர் பௌத்தத்தின் மேலானஇறுதித் தாக்குதலை தொடுத்தவரே தவிர அவருக்கு ஆரியர்,திராவிடர் பிரச்னை தெரியாது. அவர் மானுடவியல் அறிஞரோ மொழியியல் அறிஞரோ அல்ல.எனவே இங்கு திராவிடச் சிசு என்ற சொற்பிரயோகம் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்பிக்கவேண்டும் என்று அ.மாக்ஸ் முயலவில்லை. கி.பி.8ம் நூற்றாண்டில் கொள்ளப்பட்ட பொருள் இன்றும் அதேபோல் கருத்தைக் கொண்டுள்ளதா? தன்னாலேயே விளக்கமுடியாத ஒன்றை ஊகத்தை மட்டும் நம்பி தன் கடந்தகாலக் கருத்தாக்கங்களைப் பாதுகாக்கப் போரிடுகின்றார். தமிழ்நாட்டில் ஆரிய,திராவிட பிளவுகள்,பாகுபாடுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு அறியப்படாத ஒன்று.வீரமாமுனிவரின் திராவிட மொழியாய்வு நூலுக்கு பின்னரே இது மேற்கத்திய கல்வி அறிவுபடைத்தவர்களிடம் திராவிடமொழி,இனம்பற்றி கருதுகோள்கள் உருவாகின.கென்றிமோர்கனின் திராவிடஉறவுமுறைகள் பற்றிய நூலும் மானுடவியயல் மொழியியல் துறைகளின்தொடக்ககாலத்துக்குரியவை.இந்த தெளிவற்றபோக்கேன் திராவிடஇனம் என்ற கருத்தாக்கத்தை ஆரியஇனத்துக்கு எதிராக நிறுத்தியது,இவை இனவாதக் கற்பனைகளே.தமிழ் இலக்கியங்களில் ஆரியர் என்ற சொல் ஒரு போதும் இனம் அல்லது மக்கள் பிரிவு என்ற பொருளி;ல் பயன்படுத்தப்படவில்லை. ஆரியர் என்றால் குரு அறிவுடையோன்,மருத்துவன்,மேலாளன், ஆசிரியன், தலைவன், சிவன், புத்தன்,அரசன் ஆகியோரைக் குறிக்கவே பயன்பட்டது.சகல மதங்களின் மதகுருக்களும் இந்திரனை வழிபட்ட மதகுருக்களும் ஆரியர் என்று அழைக்கப்பட்டனர். எனவே திராவிடர் என்ற பதம் தமிழ் இலக்கியத்தில் பிரயோகிக்கப்பட்டு இருந்தாலும் அது ஆரியர் திராவிடர் முரண்பாட்டின் எதிர்வினையான இனம், இனக்குழு, மக்கள் பிரிவு என்ற பொருளில் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது என்பதுடன் தமிழ் இலக்கியத்தில் திராவிடர் என்ற சொல் பாவனையில் இருந்ததாய் ஒரு தடயமும் இல்லை. அதே போல் வேதம்களிலும் திராவிட என்ற சொல் பயன்பட்டதாக ஆதாரமில்லை. ரிக்வேதம் ஆரிய திராவிட மோதல் என்ற கதைக்கு இன்று எந்த வரலாற்று ஆதாரமுமற்ற கட்டியமைக்கப்பட்ட பொய் என்பது நிருபணமாகிவிட்டது.

ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 1ம் அல்லது 2ம் நூற்றாண்டு ஆகும். வேதங்களில் உள்ள 1,52,972 சொற்களில் ஷஷஆர்ய’ என்ற சொல் வெறும் 3 தடவை மட்டுமே வருவதாக ஒரு ஆய்வு குறிக்கின்றது. வேத நூல்கள் ஆரியக் குடியேற்றத்துடன் எழுந்த ஆரியர்களின் இலக்கியம் என்பது வலுஇழந்து விட்ட பழைய காலங்கடந்த கருத்தாகிவிட்டது.ஷஷஆர்யா’ என்ற சொல்லுக்கு வேதம்களில் நல்குடிப் பிறப்பு வேற்றாள் என்ற பொருள்கள் மட்டுமே கொள்ளப்பட்டன. பிராமணியத்தை பெரியாரும் பூலேயும் எதிர்த்தனர் என்று அ.மாக்ஸ் எழுதுகின்றார்.இந்த இருவரும் ஆரியர் – திராவிடர்களின் போhராட்டம் நிரம்பிய ஒன்றாக இந்திய வரலாற்றைப் பார்த்தவர்கள் பெரியாரின் பிராமணிய எதிர்ப்பு என்பது ஆரிய எதிர்ப்பு வடிவம்களில் ஒன்றே. பிராமனியத்தை அவர் ஆரியச் சதி என்றே பிரச்சாரம் செய்தவர். எனவே ஆரிய திராவிட சித்தாந்தம்கள் இன்று நவீன மானுடவியல், மொழியியல்,புதைபொருள் ஆய்வுகள் முன்பு பெறுமதி இழக்கும்போது பெரியார், பூலே, அம்பேத்கார் வரிசைகளும் சேர்ந்தே பெறுமதி இழக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிராமணர்கட்கு உரியதாய் கருதப்பட்ட பசுவணக்கம், காளை வழிபாடு, உருவவழிபாடு, மலர், பழம் இலை, நீர் இவைகளைக் கொண்டு செய்யப்படும் பூசைகள் சடங்குமுறைகள் ஆரிய மொழி பேசியவர்கட்கும் முந்திய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுக்குரியது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆரியம், திராவிடம், பிராமணியம் போன்ற கருத்துக்கள் இன்று முழுமையான மறு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவைகளாகும். பாரதியைக் கூடத் தேடிப்பிடித்து அவரின் பிராமணியக் கூறுகளை ஆய்வு கூடத்தில் வைத்துக் கட்டுடைத்தவர்கள் ஏன் அங்கு பெரியார், பூலே,அம்பேத்கர் போன்றவர்களை கொண்டு சென்று அவர்களது பிரிட்டிஸ் தொடர்புகளை ஏகாதிபத்தி;ய பிரிவினைக் கருத்துக்களை ஆராய்வதில்லை.  பிராமணனையும் பாம்பையும் கண்டால் முதலில் பிராமணனை அடி என்ற பெரியார் வெள்ளையனையும் பாம்பையும் கண்டால் முதலில் வெள்ளையனை அடி என்று கூறக்கூடியவரல்ல.அம்பேத்கரின் பிரிட்டிஸ் சார்பு பற்றி பல தொகுதிகள் எழுதலாம். பூலே பரிசுத்தமான பிரிட்டிஸ் ஆதரவு நபர், பிராமணிய ஆதிக்கக் கருத்தை எதிர்க்கும் ஜனநாயக உரிமையானது சொந்த தேசத்தின் ஒரு பிரிவு மக்களை எதிரியாய்க் காண்பதும் பிரிட்டிஸ் ஆட்சியை ஆதரிப்பதுமான அரசியல் எல்லைகளைக் கொண்டிருக்கமுடியாது.ஆரியர், திராவிடர், பிராமணியம்,தலித்துக்கள்,தமிழன், மராட்டியன், தெலுங்கன் என்ற பிரிவினைப் போக்குகளுக்கு எதிராக இவர்களை மனிதர்களாக ஒன்றிணைக்கும் சிந்தனை வேண்டாமா? பிறப்புச் சார்ந்து மனிதர்களை வகுப்பதும் பிரிப்பதும் பாசிசம் தான். பெரியாரை விமர்சித்தால் மாக்சைப் பற்ற எழுதுவோம் என்று பயமுறுத்தல்கள் புகலிடத்தில் உண்டு. இதுவும் தாய்த்தமிழகத்திலிருந்து பிரதியெடுத்த குணம் தான்.பெரியார் ஆரியரை பிராமணியத்தை மனிதவிரோதமட்டம் வரை எதிர்த்தவர்.  ஆனால் பிரிட்டிஸ்காரர்களை அப்படி எதிர்த்ததில்லை மேற்கத்தை பகுத்தறிவைப் போற்றி இந்தியப் பிற்போக்கு தனம்களை இழிவை அவர் ஏளனம் செய்தபோது அதை ஆரியர்களின் குற்றமாய்க் காண்பித்தார். இந்தியாவின் சாதியம் மனித இழிவுகளுக்கு இந்திய சமூக அமைப்புக் காரணமில்லையா? அதை புதிய இந்திய தழுவிய சமுதாய மாற்றத்தாலும் உற்பத்தி வடிவங்களாலும் தான் மாற்றமுடியுமே தவிர ஆரியரைத் திட்டி பழித்து அல்ல, பெரியார் வெள்ளை நாகரீகத்தின் பிரச்சார்கர், அவர் வட இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்ப்பவரே தவிர பிரிட்டிஷ் வெள்ளை மனிதர்களும் ஆரியர்கள் தானே என்று ஒரு போதும் எண்ண முயலாதவர். திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தவர்கள் அவர்கட்கு முன்புவந்த திராவிடர்கள் இந்திய ஆதிக்குடிகளை ஆக்கிரமித்திருக்கமுடியாதா? ஆரியர்களை எதிர்க்க வேண்டும் என்பது ஜெர்மனிய நாசிகளின் எல்லா யூதர்களையும் செமிட்டிக் இனம்களையும் எதிர்க்கவேண்டும் அழிக்கவேண்டும் என்ற போதனைக்கு நெருக்கமானது தான். பிராமணர்கள் தலித்து மக்களை ஒடுக்குவதென்பது தனியே பிராமணர்களின் குணமல்ல பிரமாணர்களை படைத்து நிர்வகித்து வரும் இந்தியாவின் பழைய சமூக அமைப்பின் பிரச்னையாகும்.சமூக அமைப்பை மாற்றாமல் பிராமணர்கள் மாறமாட்டார். தமது விசேட உரிமைகளை விடச் சம்மதிக்கமாட்டார்கள். இதை தனியே மனித வெறுப்பாலும் மக்களில் ஒரு பிரிவை எதிர்ப்பதாலும் சாதிக்கமுடியாது.உலக மயமாதல் என்பது காந்தியையும் அம்பேத்காரையும் பெரியாரையும் தேவையற்றதாக்கும் முதலாளிய ஜனநாயகக் கருத்து வளர்ச்சியானது இவர்களை விட வலிமையானது.இவர்களின் போதனைகளை விட நிர்ப்பந்தங்களைத் தரும் சாதிகள்,இனம்கள், மதம்கள், பிரதேசங்கள், மொழிகள் கலப்பது தொடங்கும் இவர்கள் இந்தியர்களாக ஆசியர்களாக உலகமனிதர்களாக மாறுவார்கள்.

அ.மாக்ஸ் போன்றவர்கள் இந்து மதம், பிராமணியம் இவைகளை பாசிசமாய்க் கண்டறிந்தார்களே தவிர இவை பிரிட்டிஸ் அரசியலின் படைப்பு என்பதை நெருங்குவதில்லை. 1920 களில் ஆர்எஸ்எஸ் முதல் சர்வாக்கர் வரை பிரிட்டிஷ் அரசியல்மற்றும் நிதிகளால் வளர்க்கப்பட்டவர்களே.இவை நாடு தழுவிய பிரிவினை அரசியலின் கூறாக இருந்தன. ஆரிய அநீதிக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்த திராவிடமும் பிரிட்டிஸ் படையலே. ஆரியம் போலவே திராவிடக் கருத்தியலும் பாசிச மனித விரோதப் பண்புகளை உள்ளடக்கியதே அ.மாக்ஸ் இந்தியா ஒரு தேசம் என்று கருதுவதைப் பாதகமாகக் கருதுபவர். புpரிவினையை மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை பன்மைத்ன்மை தனித்துவ அடையாளங்கள் என்று மொழி பெயர்த்து வருபவர் இந்து மதவாத அமைப்புக்கள் மட்டுமல்ல தலித்திய அமைப்புக்களும் ஏகாதிபத்தியங்களின் சம்பளப்பட்டியலில் உள்ளவையே. இந்தியா ஒரு தேசமாக உருவாகி வருவதை ஒப்பாத அ.மாக்ஸ் கொம்யூனிஸ்டுகளான சிங்காரவேலனார். ஜீவாவை எம்.என்.ரோயை எங்காதாவது ஆய்வு செய்ய முயன்றதில்லை. புத்தாக்கம் செய்ததில்லை.

இன்று ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய தன்னார்வக் குழுக்கள் இந்திய சமூகவிடுதலை இயக்கங்கள், கொரில்லா இயக்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள் இவைகளின் இடத்தை ஆக்கிரமித்துள்ளதுடன் அரசியலை முக்கியமற்றதாக ஆக்குகின்றன. புதிய புதிய மத,இன. சாதிய அமைப்புக்கள் சிறு கட்சிகள் உருவாக்கப்படுகின்றன.இவைகளை எந்த தமிழ்நாட்டு பல தள பார்வையாளர்களும் ஏன் ஆய்வதில்லை? அ.மாக்ஸ் போன்றவர்கட்கு ஏகாதிபத்தியங்கள் விடப் பிராமணியமே பெரும் எதிரி.அவ்வாறே நாவலனுக்கும் ஏகாதிபத்தியங்களை விட சிங்களப் பேரினவாதம் பிரமாண்டமாய் தெரிகின்றது.

தேசிய இன உருவாக்கத்தில் சாதிகளைப் பற்றிப் பேசவில்லை என்பது அ.மாக்சின் பிரதான அவதானிப்புக்களில் ஒன்று. மேலும் புலம்பெயர்ந்த சூழலில் தலித்தியம் குறித்த விவாதங்கள் முழு மூச்சுடன் மேலெழுவதாகவும் அவர் தொடர்கிறார். முதலில் அ.மாக்சுக்கு இலங்கையின் சாதியப் போராட்டங்கள் இந்தியத் தலித்திய இயக்கத்தின் பிரிவாகவே தெரிகின்றது.வடக்கில் மாவோயிஸ்டுகள் நடத்திய சாதிய ஒழிப்பு இயக்கம் பற்றிய தூரத்துச் செய்திகளே அவரது சிந்தனைச் சேமிப்பில் இருந்ததே தவிர எல்எஸ்எஸ்பி யின் தர்மகுலசிங்கம் முதல் எம்.சி.சுப்பிரமணியம் வரை தனக்கேயுரிய வரலாற்றையுடையது. இவை இந்திய தலித்தியம் போல் சாதிக்கொரு சங்கமாக தம்மிடையே மோதிக் கொள்ளும் அமைப்புக்களாக இராமல் அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிமக்களதும் அரசியல் மற்றும் சமுதாய இயக்கமாக இருந்தது. 1960,1970 களிலே வடக்கின் பெரிய பணக்காரக் கோயிலான நல்லூர் முதல் மாவட்டபுரம் வரை கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினார்கள். யாழில் சுபாஸ் கபே போன்ற பிரபல உணவு விடுதிகள் முதல் சகல இடங்களிலும் நுழைந்தார்கள். இலங்கையில் ஜேவிபி க்கும் தமிழ் இயக்கங்கட்கும் முன்னரே ஆயுதமெடுத்தார்கள். அடிக்கு அடி கொடுத்தார்கள். திருப்பித் தாக்கினார்கள். இலங்கையின் சாதிய இயக்கம் இடதுசாரிகளால் அணி வகுக்கப்பட்டவை.இந்திய தலித்திய இயக்கம் போல் பாராளுமன்றவாதத்துக்கும் இந்துமத வெறி அமைப்புக்களுடனும் கூட்டுக்குப் போகவில்லை. அரசியல் கட்சிகளிடம் சூட்கேஸ் வாங்கவில்லை. அவர்கள் நேர்மையான கொம்யூனிஸ்டுகளால் வழி நடத்தப்பட்டார்கள்.; மேற்குலக நிதியில் இயங்கிய கிறீஸ்தவ அமைப்புக்களை கண்டு கடந்து போராடினார்கள். தம் சொந்த மக்களின் சக்தியிலும் நிதியிலும் இலங்கை தழுவிய இடதுசாரிகள், தமிழ், சிங்கள,முஸ்லிம் மக்களின் ஜனநாயகப் பிரிவின் துணையுடன் இயக்கங்களை நடத்தினார்கள். இலங்கை சாதி ஒழிப்பு இயக்கமானது தீவிரமான தமிழ்த்தேசிய எதிர்ப்புப் பண்புடையதாகவும் சிங்கள மக்களின் ஆதரவுக்கும் இலங்கை தழுவிய அரசியலுடன் இணைந்து இருந்தது.

ஆனால் தமிழ்நாட்டு தலித்தியவாதி திருமாவளவன் தமிழின வெறி கக்குகின்றார். புலிப்பாசிஸ்டுகளின் பிரச்சாரக் கருவியாக நோர்வேயினதும் புலிகளதும் நிதியில் கூலிப்படை அரசியல் நடக்கின்றது. ஜனவரி 2009 இல் திருமாவளவன் நடத்திய தனது கட்சியின் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மாநாட்டில் இலங்கையில் அரசு 1,50,000 தமிழர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன பொய்யை விட்டாலும் தமிழினம் 50,000 வருடம் பழமைவாய்ந்த இனம் சிங்களவர் 1200 வருடம்கள்மட்டுமே என்ற வரலாற்று மானுடவியல் அறிவுகளோடு சம்பந்தமற்ற தமிழ்பாசிச பேச்சுக்களை நிகழ்த்துகின்றார். இவர்கள் தலித்துகட்கு போராடுவதை விட்டு இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து புலிக்கொடுமையுடன் கிடந்து அழுந்தச் செய்யும் சதியாகும்.தலி;த்தியம் கூலி அரசியல் இயக்கமாக ஆகிவிட்டது. ஆனால் இலங்கையின் சாதி ஒழிப்பு இயக்கம் தான் தமிழ்த்தேசிய வாதத்தின் முதன்மை எதிரிகளாக சைவசமயக் கட்டுமானங்களை தகர்ப்பவர்களாக இருந்தனர். பிரிவினைகட்கு எதிர்ப்புக் காட்டினர். சோலிச உணர்வு கொண்டவர்களாக வாழ்ந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டு சாதிய அமைப்புக்களின் ஆரிய எதிர்ப்பு இந்துமத எதிர்ப்பு சகலதும் முடிந்து தமிழின வெறி அமைப்புக்களாக அந்நிய நாட்டில் தலையிடும் ஆக்கிரமிப்புக் குணமாக வளர்ந்துள்ளது. ரவிக்குமார், திருமாவளவன், ராமதாஸ் கும்பல்கள் பற்றி தனது சகபாடிகள் பற்றி அ.மாக்சுக்கு எந்த எண்ணக் கருவும் இல்லை. ஆனால் புகலிட நாடுகளிலும் இலங்கையிலும் இந்திய தலித்தியத்தை திணித்துவிட முடியாது. இலங்கையின் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தியாவை விட முன்னேறிய சமூக, அரசியல் பலத்தையுடையவர்களாகவும் அமைப்பு வடிவம் உடையவர்களாகவும் தம் சொந்தப் போராட்ட இலக்கியங்களைப் படைத்துக் கொண்டவர்களாகவுமிருந்தனர்.

இத்தகைய இம்மக்கள் தலித்தியத்தை ஏற்பதென்பது பின்னோக்கிச் செல்வதாகவும் அம்பேத்கர், பெரியார் போன்ற இந்திய பிராமணியச் சூழலின் கருத்துக்களை இலங்கையின் சைவசமயப் போக்கு பிரயோகிப்பதுமாகும்.புலிப் பாசிசத்திடம் சிக்கி படாதபாடுபட்டு தப்பிப் பிழைத்துள்ள மக்கள் தலித்தியம் போன்ற தனிச்சாதியக் கோட்பாடுகளை சமூக, பொருளாதார உணர்வற்ற போக்குகளை ஏற்கமாட்டார்கள். உலகமயமாதல் என்பது அவர்களை எதிர்காலத்தில் சாதி,தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று கடந்து செல்லும் மனித இருப்புக்கான அரசியலையே வேண்டி நிற்கும். வடபகுதி சாதிய ஒழிப்பு இயக்கம் வர்க்க உணர்வு படைத்ததாக இருந்தது. இன்றைய சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது பாட்டன், பாட்டியினதும் தாய் தந்தைகளினதும் போராட்டத்தின் பெறுபேறுகளை இன்றும் அனுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தர்மகுலசிங்கம், பொன்.கந்தையா போன்ற போராட்டத் தலைவர்களின் பெயர்களை தமது பிள்ளைகட்குச் சூட்டியது மட்டுமல்ல அவர்களை முன்னுதாரணமாய்க் கொண்டு பேராhடிய மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டைப் போல் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் மத்தியில் மேல்- இடை-நடு என்ற பிளவுகளும் பிரித்து ஆக்கப்பட்ட அமைப்புக்களும் கி;டையாது. புpராமணியம் என்பது அவர்கள் அறியாத ஒன்று.புலம் பெயர் தமிழர்கள் யாழ்.குடாநாட்டின் சைவ வேளாளச் சமூகக் கட்டமைப்பிலிருந்து வந்தவர்கள் பிராமணியம் சார்ந்த சமூக உயர்நிலையும் ஆதிக்கமும்இலங்கையில் கிடையாது.

பிராமணர்கள் மிகமிகச்சிறுபிரிவாகதனித்து இருந்தனர். கள்ளப் பிராமணி’ என்ற நையாண்டியுடன் அவர்கள் அழைக்கப்பட்டனர். சைவவேளாள கருத்துகட்கும் சமூக நிகழ்வுக்கும் அவர்கள் அடங்கி நடந்தனர். பகவத்கீதையையோ உபநிடதம்களையோ அறிந்த அல்லது கௌரவிக்கும் ஒருவர் கிடையாது. மாறாக தேவார, திருவாசகம்கள் தான் இலங்கைத் தமிழ்ச் சமூகப் பண்பாக இருந்தது.நாட்டுப் புறத் தெய்வம்கள் சிறு தெய்வம்கள் சந்திக்குச் சந்தி மரத்தடிக்கு மரத்தடி இருந்தது.ஆனால் அ.மாக்சின் பேச்சைக் கேட்டுக்கொண்டு புகலிட நாடுகளில் தலித்தியம் கட்ட வெளிக்கிடுபவர்கள் இலங்கை – இந்திய விவசாயக் கட்டமைப்பில் வாழவில்லை. சாதித் தொழில் புரிய நிர்ப்பந்திக்கப்படும் சூழலில் இல்லை. சாதிநிலவத்தக்க சமூக அடிப்படைகளைக் கொண்டதாக மேற்குலகம் இருக்கவுமில்லை. மாறாக இலங்கையிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்த தமிழ் சைவம் பற்றிய மனப்பதிவுகளே இருந்தன.புகலிட நாடுகளில் உள்ள முதல் தலைமுறையிடம் மட்டுமே இவை காணப்பட்டன. இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறையிடம் யாழ்நடுத்தர வர்க்க தமிழ்த்தேசிய வெறியோ சைவமதம், சாதி என்பன சார்ந்த போக்குகளோ நிலவவில்லை. அவர்கள் தாம் வாழும் நாட்டின் பண்புகளால் பாதிக்கப்பட்டவர்களாக நுகர்வுக்கலாச்சாரமும் பல்லினத்தன்மைக்கு சம்மதம் தெரிவிப்பவர்களுமாக இருந்தனர். புகலிட நாடுகளில் இரண்;டாம் தலைமுறையிடம் சாதி, பிரதேசம், கடந்து காதல் திருமணங்கள் இடம் பெற்றன. திருமணங்கள் பிறந்தநாட் கொண்டாட்டங்கள், சாமத்திய வீட்டுக் கொண்டாட்டங்கள், கோவில்கள் திருவிழாக்களில் தீண்டாமை இல்லை. சம இடம் இருந்தது. கோவில்கள்,இயக்கம்கள், கல்வி நிலையம்கள், வர்த்தக நிலையங்கள் இவைகளில் ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் இடம் பெறுவதைத் தடுக்குமளவுக்கு வேளாளர்கட்கு பலமோ மேற்கு நாட்டு சமூக மற்றும் சட்டரீதியிலான வாய்ப்புக்களும் இல்லை.

சாதி என்பது இரகசியமாக அனுட்டிக்கப்படும் முதலாவது தலைமுறையின் ஒரு பகுதியின் பிரச்னையாக மட்டுமே இருந்தது. ஆபிரிக்கர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள், அரபு நாட்டவர்கள்,ஆரியர், லத்தீன் அமெரிக்கர் என்று பலவகை மக்களுடன் வாழும் சமுதாயச் சூழலில் சாதி பலம் பெறத்தக்க சமுதாயக் காரணிகள் இல்லை மாறாக சாதிய, பிரதேச அடையாளம் இழக்கும் போக்குகளே வளர்ந்தன. ஆரம்பத்தில் இவர்களிடம் காணப்பட்ட யாழ்ப்பாணம் , தீவார் சண்டைகள் வடக்கு, கிழக்கு வித்தியாசங்கள் இன்று அருகத் தொடங்கிவிட்டன. இங்குள்ள முதலாளிய ஜனநாயகம் தனிமனித சுதந்திரம், சமூகப் பாதுகாப்புக்கள் ஒரு இந்திய இலங்கையின் விவசாய சமூக நிலமைகளை விட முன்னேறியவை என்பதுடன் இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து உதித்த பெரியார்,அம்பேத்கார் சிந்தனைகள் ஒரு வளராத சமூகமொன்றின் போக்காகவேஅதற்குர்pயதாகமட்டுமே இருக்கும்.

மேற்குலக நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு தலித்தியத்தைப் பரிந்துரை செய்வதென்பது நவீன உழவு இயந்திரத்துக்குப் பதிலாக மாட்டையும் கலப்பையையும் கையேற்கக் கோருவதாகும். இங்கு தலித்திய பிரயோக முயற்சி என்பது செயற்கையானதாகவும் தனித்திருக்கக் கேட்கும் கருத்தாக்கமாகவும் தான் இருக்கும்.இங்குள்ளசொற்பஎண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட சாதியமக்களுக்கு ஏனைய தமிழர்களை விட ஐரோப்பிய மக்களுடனேயே தொடர்பும் பொருளாதார உறவும் உள்ளது. எனவே சாதி செயற்படுவதற்கான சூழல் இல்லை.மேலும் புகலிடத்தில் தலித்தியம் பேசுபவர்கள் தாம் வாழும் நாட்டின் சோசலிச அமைப்புக்கள் தொழிற்சங்கங்களுடன் கலக்கத்தக்க நிலைக்கு வளராமல் இருப்பதும் தலித்தியம் என்பது குறிப்பிட்ட சில தனிநபர்களின் அரசியல் அடையாளமாக மட்டும் குறுகியுள்ளது.இவர்கள் இலங்கையின் சாதியப்பிரச்னைக்கு தலித்தியத்தை பிரயோகிக்க பல வருடங்களாக முயன்றனர். அது ஒரு சென்றி மீற்றரும் நகர முடியாது போனது.இலங்கையின் யுத்தச் சூழல் மட்டுமல்ல இலங்கையின் ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் வேறு அரசியல் பரிமாணத்துக்குச் செய்வதற்கான சமூகச் சூழலுமாகும். புகலி;டத் தலித்தியவாதிகளின் சிந்தனையானது யாழ்.குடாநாட்டுப் புவியியல் எல்லையுள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என்பது இவர்களது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அவதானித்தவர்களுக்குத் தான் தெரியும். இவர்கள் தலித்துக்களில் இலங்கையின் வேடர்கள், குறவர்கள், பறங்கியர், ஜாவா மக்கள், மலையக மக்களை உள்ளடக்குவது பற்றிக் கனவிலும் எண்ண முடியாதவர்கள். சிங்கள மக்களில் உள்ள 30 க்கு மேற்பட்ட சாதிகளை இதில் இணைப்பார்களா? கொழும்பிலும் கண்டியிலும் உள்ள இந்தியத் தொடர்புள்ள நகர சுத்தித் தொழிலாளர்களைச் சேர்க்கவேண்டும் என எண்ணியிருப்பார்களா? எனவே இவர்களது தலித்தியமும்தமிழ்நாட்டிலிருந்து கடனெடுக்கப்பட்ட யாழ்.குடாநாட்டினை மனதுள் வைத்துக்கட்டப்பட்ட குறுங்குழுவாத தமிழ்தேசியவாத வகைப்பட்ட தலித்தியமே. அ.மாக்ஸ் இவைகளை எண்ணிப் பாராமல் யதார்த்தத்தில் சாத்தியமற்ற அதீதமான விளம்பரத்தன்மை படைத்த ஒன்றைப் பேசுவதை உணரவில்லை. தனது செயற்கையான முயற்சியை அகவிருப்பம்கட்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்பதை அவர் பிடிவாதமாக மறுக்கின்றார். மேற்குலகில் இப்போ ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகள், வங்கிகள் பொறிந்து தொழிற்சாலைகள் உற்பத்திக் குறைப்பும் மூடப்படலும் வேலை இழப்பும் தமிழ்த்தேசியம், தலித்தியம் போன்றவைகளை அரசியல் கால நேரப் பொருத்தமற்றவையாக்கிவிடும்.

.மாக்ஸ், ரோசாலுக்சம்பேர்க், ரொட்ஸ்கி இவர்கள் பிறந்த யூதச் சமூகம் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட சமூகமாகும்.கத்தோலிக்கம், மரபுவழிக் கிறீஸ்தவம், புரட்டஸ்தாந்து என்று மாறி மாறி யூதர்களை அழித்தார்கள். மத்திய காலத்தில் யூதர்கள் ஐரோப்பாவில் கூட்டம் கூட்டமாக பலபத்தாயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். கொள்ளை நோய்கள் வந்து மக்கள் தொற்றுநோயால் மாண்டபோது கூட யூதர்களே காரணம் என்று முதலில் யூதர்களைக் கொன்றார்கள். கத்தோலிக்கம் யூதர்களுடன் ஒன்றாக இருந்து உண்பதைக்கூடத்தடை செய்தது. திருமணம் உட்பட சமூக உறவுத் தடை இருந்தது. வீடு, நிலம் உட்படச் சொத்துக்கள் வாங்கத்தடை இருந்தது. அவர்கள் தனித்த பகுதிகளில் குடியிருத்தப்பட்டனர். யூதர்கள் ஒட்டுண்ணிகளாக இழிந்தவர்களாக கடவுளால் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். மாக்ஸ், ரோசாலுக்சம்பேர்க்கை அவர்களது யூதப்பிறப்புக்காக வாழ்நாள் முழுவதும் முதலாளித்துவவாதிகள் பழித்தபோது அவர்கள் தம்மை யூத அடையாளங்களில் சிறைப்படுத்தி தனிமைப்படுத்தும் சகல முயற்சிகளையும் தோற்கடித்தார்கள். தாம் தனிமைப்படாமல் இருக்கப் போராடினார்கள் . பரந்து விரிந்த தொழிலாளர்களின் இலட்சியத்துடன் கலந்தனர்.ஆரியச் சிந்தனைகள் உலக யூதத்தின் புரட்சியாக போல்சுவிஸ் எழுச்சியைக் கட்டியபோது ரொட்ஸ்கி அதற்குப் பதில் தரவில்லை. அவர் சோவியத் செம்படையைக் கட்டியபோது அது முழு ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்கும் யூதச்சதி என்றார்கள். அப்போதெல்லாம் ரொட்ஸ்கி தன் பிறப்பைத் தேடி வரலாற்றில் பின்னோக்கிச் சென்றதில்லை. தலித்தியம் பேசுபவர்களில் இடதுசாரிச் சாயல் உள்ளவர்கள் இதை எண்ணிப் பார்ப்பார்களா?அ.மாக்ஸ் பேசுவது சாதி அரசியலே முதலாளிய குறுங்குழுவாத அரசியலின் தொடர்ச்சியே. இவர்களின் தீவிரவாதக் கோலம்கள் விரைவாக அம்பலப்பட்டு மதிப்பிழந்து போனமையின் காரணம் இது தான். தேசியமோ, சாதியமோ வர்க்க ரீதியிலான அடையாளம் காணப்படாமல் விட்டால் அவை தமது வலதுசாரி அரசியல் புத்தியைக் காட்டாமல் விடாது.தமிழ்ச் சமூகத்தில் சாதியை மட்டுமல்ல வடக்கு, கிழக்கு,மக்களிடையேயுள்ள பிளவுகள் யாழ்ப்பாணத்தார், வன்னியார், மட்டக்களப்பார், மன்னார் என்று பிரிந்து கிடந்தனர். வேதக்காரர், சைவக்காரர் என்று பேதம் நிலவியது. யாழ்.குடாநாட்டுக்குள் வடமராட்சியார், தென்மராட்சியார்,தீவார் என்ற பிளவுகள் இருந்தன. இவர்களிடையே திருமண உறவுகள் கூட நடைபெறாத நிலைமைகள் இருந்தன. பஞ்சாங்கம் பார்த்து நாளும் கோளும் கணித்து ஊருக்குள், சொந்தத்துள்,மச்சான், மச்சாள்மாரிடையே திருமணங்கள் நடந்தன.அரச சேவையில் உள்ளவர்கள் அரச சேவையில் உள்ளவர்களிடையே பொம்பிளை, மாப்பிளை எடு;த்தார்கள். இவைகளையும் நாவலன் பேசவில்லை. தேசிய இனப்பிரச்னையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலனின் நூலில் சாதிப்பிரச்னை பேசப்படவில்லை என்பது மட்டுமே அ.மாக்சுக்கு தெரிகிறது. இறுதியாக புகலிடத் தலித்தியம் பேசுவோர் மேற்கு நாடுகளில் இயங்கும் ஏகாதிபத்திய தமிழ் தன்னார்வக் குழு ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதையும் நாம் கவனத்திலிருத்தவேண்டும்.

‘இலங்கையில் முறையான சந்தைவளர்ச்சி ஏற்பட்டு இருந்தால் இலங்கை முழுவதும் ஒரே இனமாக சிங்கள மயமாக மாறியிலுக்கும்’ என்ற நாவலன் கருத்தையே அ.மாக்சும் ஏற்று எழுதுகிறார்.எப்படி நாவலனிடம் மறைவான தமிழ்த்தேசியவாதமும் சிங்களப் பேரினவாதம் சிறிலங்கா பாசிச அரசு என்ற கருத்தாக்கங்கள் உள்ளனவோ அப்படியே அ.மாக்சிடமும் இந்தியப் பிரிவினைவாதக் கருத்தியல்களும் வட இந்திய எதிர்ப்பும் உள்ளது. இந்தியா ஒரு நாடல்ல என்ற கருத்துக்களும் உள்ளதால் இருவரும் ஒரே முடிவையே எட்டுகின்றார்கள். இருவரும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் இணைந்து ஒருபுதிய மக்களாக இலங்கையராக ஒரு தேசத்தவர்களாக பல்லினப் பண்பு படைத்தவர்களாக உருவாவர் என்று எண்ணாமல் போயினர்.இந்தியாவில் எல்லா மக்களும் இணைந்து இந்தியராக அடையாளம் பெறுவது போல் சீனா, பர்மா, இந்தோனேசியா,மலேசியராக உருவாக்கம் நடைபெற்றது போல் நடந்திருக்கும் என எண்ண முடியாமை சிங்களப் பேரினவாதம் என்ற மிகை எண்ணமே காரணம்.. தமிழ்த்தேசியவாதம் என்பது எப்போதும் மேற்குலக சார்பானதாகவும் சிங்களத்தேசியவாதம் என்பது சுதேசியம் சார்ந்ததாகவும் தான் நிலவி வந்துள்ளது. சந்தை வளர்ச்சி வந்திருந்தால் எல்லா மக்களும் குறிப்பிடத்தக்க முதலாளிய ஜனநாயக உரிமைகளும் தனிமனித சுதந்திரம், பெண்கள், குழந்தைகட்கான உரிமைகள் என்பன ஒரு மட்டத்திலாவது எட்டப்பட்டு இருக்கும். வேடர், பறங்கியர், ஜாவா போன்ற மக்கள் பிரிவினர் ஏனைய இனம்களில் முழுமையாக அடையாளம் தெரியாத படிக்கு கலந்து இருப்பர். ஆனால் தமிழ்,முஸ்லிம் மக்கள் சிங்களவராகமாட்டார்கள். மாறாக சிங்கள மக்களின் பொதுப் பண்புகளை பெரும்பகுதியாய் உள் வாங்கிய சிங்களவரும் தமிழரும் முஸ்லிமுமல்லாம இலங்கையராக மாறியிருப்பர் என்பதே உண்மை.தேசிய இனவிடுதலைக்கான தனித்த போராட்டங்கள் இருந்திராது.அமெரிக்கர்கள் என்போர் எப்படி பல இன,நிற, மதப்பண்புடையவர்களாகவுள்ளனரோ அப்படி மாறியிருப்பர். அமெரிக்காவில் நிற, இன பிரச்னைகள். 1950 இலோ 1960 இலோ இருந்ததை விட இன்று கடுமையும் தீவிரமும் குறைந்தே உள்ளது என்றால் அமெரிக்க மயமாதல் என்பது முதலாளித்து வழியில் நடைபெறுகிறது என்பதும் சோசலிசம் வரும் வரை இவை முழுமையாக ஒழிக்கப்படல் தொடங்காதுதேச உருவாக்கம் என்பது இனத்தை இனம் ஆக்கிரமித்து சிறு இனம்களை அழித்து உருவாதல்ல. இது சமூக வளர்ச்சிக்கான தேவையாக மாறும்.மனித நாகரீகம் வளர வளர பல மக்கள் பிரிவுகள் மொழிகள் இரண்டறக் கலக்கும் புதிய மனித அடையாளங்களைப் பெறும்.இது வரலாற்றில் மிகவும் சாதாரண நிகழ்வாகும். மேற்கத்திய முதலாளித்துவ தேச உருவாக்கத்தை சரியாக விளங்கி வந்த நாவலன் இலங்கையுள் காலடி எடுத்து வைத்ததும் தமிழினவாதத்துக்கு சலுகை தரும் காரியங்கட்கு முயல்கின்றார். புலிப்பாசிசம என்பதை மறுக்கமுடியாது என்பதால் சுலபமாக இலங்கை அரசையும் பாசிசம் என்கிறார். பாசிசம் என்றால் தென்னிலங்கையில் எப்படி 1500 க்கும் மேற்பட்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள், இயக்கம்கள் , பொது அமைப்புக்கள் இருக்க முடியும்? புலிகளை ஆதரிக்கும் ஊடகங்கள் உட்பட எப்படி பல நூறு ஊடகங்கள் நிலவமுடியும். பாசிசம் என்றால் முதலில் தொழிலாளர்களின் அமைப்புக்கள், இடதுசாரிக்கட்சிகளையல்லவா முதலில் ஒழிக்கும். ஆக புலிகளே பாசிச அமைப்பு ஆகும். இலங்கையானது ஒரு முதலாளிய அரசு என்றே நாம் வரையறை செய்யமுடியும். பாசிசம் என்பது எப்போதும் சட்டம் கடந்தே செயற்படுவது. பாசிசம் என்ற மாக்சியக் கலைச் சொல் எப்படி பொருளறியாமல் உருத்திரிந்த வடிவில் தமிழ்ப் பரப்பில் பாவனையில் உள்ளது என்பதற்கு நாவலன் சிறந்த உதாரணமாகும்.

 சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களில் ஐரோப்பிய, இந்திய ஆசியப் பண்புகள் அதிகம் ஒரு தொகை. போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரிட்டிஸ் மொழிப் பிரயோகங்கள், மதநம்பிக்கைகள், ஆடைகள், உணவுவகைகள்,அரசுவடிவம், கட்டிடக்கலை, நீதி மற்றும் சட்டம் என்பன எல்லோருக்கும் பொதுவாக இருந்தன. இந்தியப் பண்புகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. .தமிழ், சிங்கள, முஸ்லிம் உயர் வர்க்கங்களின் பேச்சு மொழியாகவும் வீட்டு மொழியாகவும் ஆங்கிலம் இருக்கின்றது..யாழ்.குடாநாட்டு மத்திய தர வர்க்கத்தின் தமிழ் மொழி வழக்கத்தில் ஒரு தொகை ஆங்கிலச் சொற்கள் உள்ளன. ஆனால் ஒரு சில சிங்கள மொழிச் சொற்கள் தமிழில் இயல்பாக வந்தாலும் உடனே சிங்கள மொழி தமிழில் ஊடுருவுகின்றது.தமிழ் அழிகிறது என்று தமிழ்த்தேசியம் கதறுகின்றது.தமிழ்த்தேசியமானது பாசாங்குத்தன்மை வாய்ந்தது சுதேசிய உணர்வற்றது. இன்றைய உலக மயமாதல் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை இலங்கையராக மாறும்படியான பொருளாதாரக் கட்டளையை விடுக்கின்றது. சிங்கள, தமிழ் மொழிகளை மீறி இலங்கையுள் ஆங்கில மொழிக்கல்வியும் அறிவும் தீவிரமாக வளர்கிறது. எதிர்காலத்தில் சீன,இந்தி மொழிகள் கூட முக்கியத்துவம் பெறலாம்.உலகார்ந்த ஒரு நவீன மொழியைத் தேடத் தொடங்கும் காலம் இது தமிழ்தேசியவாதிகள் மேற்குலகத்தின் துணையுடன் வரலாற்று வளர்ச்சிக்கு குறுக்கே நிற்க முயல்கிறார்கள். தமிழ்ஈழம் தனிநாடு சமஸ்டி என்ற காலம் நிராகரித்த வடிவங்களில் கிடந்து அழுந்துகிறார்கள் பண்டாரநாயக்கா, பிலிப் குணவர்த்தனா கால அரசும் பின்பு 1970 இல் இடதுசாரி ஐக்கிய முன்னணியும் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தை கட்ட முயன்றார்கள்.இது ஏகாதிபத்தியங்களால் குழப்பப்படாமல் இருந்திருந்தால் ஜேவிபி கிளர்ச்சியும் தமிழ்பிரிவினையும் வராமல் இருந்தால் நாடு இலங்கையர் மயமாவது நிகழ்ந்திருக்கும். தோழிலாளவர்க்கம் இனம், மொழி, பிரதேசம்,சாதி,மதம் கடந்து ஒன்று திரண்டு இருக்கும் அந்த அரசியல் பொழுதை அழிக்கவே தமிழ்ஈழப் பிரிவினை வாதம் மேற்குலகின் துணையுடன் எழுந்தது.

கல்வியைத் தேசியமயமாக்கியதை நிலச்சீர்திருத்தம் கொண்டு வந்ததை ஏழைகட்கு நிலம் வழங்கியதை இலங்கையின் அந்நிய நிறுவனங்களை தேசியமயமாக்கியதை இலங்கையைக் குடியரசாக்கியதை என்று சகலதையும் தமிழ்தேசியவாதிகள் எதிர்த்தவர்கள் பெரும்பான்மை மக்களின் மொழியான சிங்களத்தை இலங்கையின் சமூக பொருளாதாரச் செயற்பாட்டுடன் தொடர்புள்ள மொழியை அரச மயமாக்கல் எப்படி முதலாளிய வளர்ச்சி நடைபெறும்? நாவலன் கூட தரப்படுத்தல் என்ற தமிழினவாதிகளின் சொல்லையே பாவிக்கின்றார். அதை மாவட்டக் கோட்டா முறை அல்லது பின் தங்கிய மாவட்டங்கட்கான கல்விக்கோட்டா முறை என்பதே பொருத்தமானது.மாவட்டக் கல்விக் கோட்டா முறையால் யாழ்.குடாநாடு மட்டுமல்ல அதிக கல்வி நிறுவனங்களை யாழ்.குடாநாட்டைப் போல் கொண்டிருந்த கொழும்பு, கம்பகா பகுதிகள் கூடப் பாதிக்கப்பட்டன. அங்குள்ள சிங்களவர்களும் முதன்மை வாய்ப்பை இழந்தனர். இந்தக் கல்விக்கோட்டா முறை வந்திராவிட்டால் வன்னி, கிழக்கு,மன்னார், மலையகத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழகம் புக வாய்த்திருக்காது. இதன் பின்பே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் முதன் முறையாக மேற்படிப்புக்கும் அரசாங்க உத்தியோகங்கட்குப் போனார்கள். ஏராளமான சிங்கள கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பல்கலைக்கழகத்துள் நுழைந்தனர்.உத்தியோகத்தர்கள் படித்தவர்கள் அல்லாதவர்களின் பிள்ளைகள் விவசாயிகள்,ஏழைகளின் புதல்வர், புதல்வியர் படிக்க வாய்ப்புப் பெற்றார்கள். இந்த உண்மைகளை நாவலன் கைவிட்டு விட்டதுடன் தமிழனவாதப் பொய்யர்களின் தரப்படுத்தல் பற்றிய வழக்கமான கீர்த்தனையை அவரும் இசைக்கின்றார். இத்தகைய மறுத்தான் போடாத கேள்வி எழுப்பப்படாத தமிழினவாத அரசியலின் விளைவாகவே புலிப்பாசிசம் வந்தது பிரபாகரனும் பொட்டம்மானும் தமிழர்களின் தலைவர்களாக ஆயினர்.

.தனிச் சிங்களச் சட்டம், சிங்களக் குடியேற்றம், தரப்படுத்தல், பௌத்த , சிங்கள இனவாதம் என்ற தமிழினவாதிகளிடமிருந்து கொள்முதல் செய்த சொற்கள் இதுவரைகால ஆய்வு தேய்வு இல்லாமல் நாவலனால் மறுவிநியோகம் செய்யப்படுகின்றது. தமிழ்தேசியவாதத்தின் கருத்தாக்கம்களை பரிசோதனை செய்யவேண்டும். நிகழ்காலத்தில் மீண்டும் நிரூபிக்கப்படல் வேண்டும் என்று அவரது வழக்கம் மாறாச் சிந்தனை எண்ணத் தலைப்படவில்லை. முதலாவதாக தமிழரசுக்கட்சியின் கண்டு பிடிப்பான தனிச்சிங்களச் சட்டத்தை அவர் தனது பிரதான நியாயங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளார்.சிங்கள அரச கருமமொழிச் சட்டம் என்பது இலங்கையின் 73 வீத சிங்கள மொழி பேசும் மக்களின் இயற்கையான கோரலாகும். சுதந்திரம் பெற்ற இந்தியா, பர்மா, சீனா, வியட்நாம், கம்பூச்சியா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் எங்கும் பெரும்பான்மை மக்களது மொழியே அரச மொழியாகியது. இது ஏனைய சிறுபான்மை இனம்களை ஒடுக்கவும் அவர்களது மொழிகளை அழிக்கவுமே இவ்வாறு செய்யப்பட்டது என்பது முதலாளியப் பொருளாதார வளர்ச்சிப் பண்புகளை கணக்கெடாமல் விடுவதாகும். பெரும்பான்மை மக்களின் பொருளாதார அரசியல் சமூக செயற்பாடுகட்கு இலகுவான மொழியைத் தேர்ந்தெடுக்காமல் அந்த நாடு இயங்க முடியாது. அது சமுதாயவிதிகளாகும். ஆனால் தமிழினவாதிகள் 1786 முதல் இலங்கையின் முழு மக்களதும் அரச கரும மொழியாக இருந்த அந்நியரின் மொழியான ஆங்கிலத்தை ‘தனி ஆங்கிலச் சட்டம்’ என்று எப்போதாவது எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்து இருக்கின்றார்களா? சிங்களத்தை தார்பூசி அழி;த்தது போல் ஆங்கிலத்தை பூசி அழித்து இருக்கின்றார்களா?ஆங்கிலத்தைப் படியோம் என்று உத்தியோகம்களை விட்டெறிந்து இருக்கின்றார்களா? சிறீ எதிர்ப்பு மாதிரி ஆங்கில எழுத்தை எதிர்த்து கலகம் செய்து இருக்கின்றார்களா? அப்படியெனில் ஏன் இல்லை? ஒரு சில சிங்களச் சொற்கள் தமிழ்மொழி வழக்குக்கு வந்ததை எதிர்த்துப் போராடியவர்கள் தமிழ் மொழியில் வந்து கலந்துள்ள ஒரு தொகை ஆங்கிலச் சொற்களை எதிர்த்ததுண்டா அவற்றைத் தவிர்த்துப் பேசியதுண்டா?

இலங்கையில் பேசப்படும் தமிழ் மொழியில் ஆகக்கூடிய ஆங்கில மொழிச் சொற்கள் கலந்த தமிழ் பேச்சு மொழி யாழ்.குடாநாட்டுள் தான் பேசப்பட்டது. அது பெருமையாகக் கருதப்பட்டது. ஆங்கிலத்தை யாழ்.நடுத்தரவர்க்கம் ஒரு போதும் அந்நிய மொழியாய் கருதியதில்லை. இவர்கள் யாழ்.குடாநாட்டில் உள்ள இலங்கையின் ஆகச் சிறந்த ஆங்கிலப் பள்ளிகளில் படித்தவர்கள். இவர்கள் சிங்கள மொழியை மட்டுமல்ல சொந்த தமிழ் மொழியையும் இளக்காரமாய்க் கருதியவர்கள். ஒரு முறை (தி.மு.க) திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு அமைப்பை வண்ணை ஆனந்தன் உருவாக்கி யாழ்.நகரில் உள்ள கடைகள், பெரும் வர்த்தக அமைப்புக்கள், தியேட்டர்களின் பெயர்களை தனித்தமிழில் மாற்றவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். கடை கடையாய் ஏறி இறங்கிப் பார்த்தார். எவரும் வண்ணை ஆனந்தனையும் அவரின் திமுக வையும் கணக்கெடுக்கவில்லை.. யாழ்.நகரில் உள்ள வெலிங்டன்,வின்சர், றீகல் என்ற பிரிட்டிஸ் தளபதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் எப்படி சினிமாத் தியேட்டருக்கு சூடினார்கள்.? பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிராய்ப் போராடிய ‘கெப்பிட்டிப்பொல’, ‘புரான் அப்பு’ போன்ற சிங்கள வீரர்கள் வேண்டாம் இவர்கள் ஏன் குறைந்தது சங்கிலியன், பண்டாரவன்னியன், கைலை வன்னியன் பெயர்களையாவது சினிமாத் தியேட்டர்கட்கு இடவில்லை. ஒரு புறம் ஆங்கில மொழியும் மேற்கத்தைய கலாச்சாரமும் சமூக வளர்ச்சியின் கட்டளையாகவும் மறுபுறம் யாழ்.நடுத்தரவர்க்கத்pதின் வாழ்வுக்குரியதாகவும் இருந்தது என்பதே யதார்த்தமாகும். இதே போல் சிங்கள அரச கரும மொழி என்பது இலங்கை தழுவிய தேசியத்தின் தொடக்கமாகவும் சுதேசியத்தின் தேவையாகவும் இருந்தது. ஆங்கில மொழியின் இடத்தை சிங்கள மொழிக்கு வழங்காமல் இதைச் செய்யமுடியாது. 1786 முதல் 1956 வரை ஆங்கில மொழியால் இலங்கை ஆளப்பட்டது. அரச சேவையில் இருந்த ‘தமிழ் மாத்தையாமார்’ ஆங்கில மொழியை வைத்து ஏழைச் சிங்கள மக்களை வெருட்டி வாழ்ந்தார்கள். சிங்கள, மக்கள் மத்தியில் வேலை செய்யும் அரச சேவையாளர்கள் ஆங்கில மொழிக்குப் பதிலாக சிங்கள மக்களின் மொழியைத் தெரிந்திருக்கவேண்டும் என்றால் என்ன பிழை? சுதந்திரத்தின் பின்பு சுதேசிய மொழிகளில் ஆட்சி நடக்க வேண்டும் என்பது என்ன தவறு? அக்கால வடபகுதி ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ்பேசக்கூடாது தப்பித்தவறிப் பேசினால் ‘பிரம்படி கிடைக்கும்’ எந்தத் தமிழ்த் தேசியவாதியும் ‘தமிழ் மொழி பேசியதற்குப் பிரம்படியா?’ என்று கொதித்து எழுந்தது கிடையாது. ஆனால் ஒரே நாட்டின் சகோதர மொழியை அடுத்தவன் பாசை என்று லண்டன் பிரிவுக் கவுன்சில் வரை சென்று வழக்காடினார்கள். இங்கு தமிழினவாதிகளின் பிரிட்டிஸ் விசுவாசம் நாவலனுக்கு தென்படவில்லை

அடுத்து சிங்களக் குடியேற்றம் என்ற தமிழரசு காலத்தில் தொடங்கி இன்றைய புலிப்பாசிஸ்டுகளின் பிரச்சாரத்தை நாவலனும் ஏற்றுப் பிரச்சாரம் செய்கிறார். 1946 இல் திருமலையில்20.07வீத சிங்களவர் தொகையானது 1981 இல் 33.6வீதம் என்று உயர்ந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகிறார். அதே சமயம் 1946 இல் கொழும்பில் இருபது முப்பதாயிரம் தொகை கூட இல்லாத தமிழர் தொகை இன்று 7 லட்சத்துக்கும் மேலாகிவிட்டதே சிங்கள மக்களின் தலைநகரம் தமிழன் பெரும்பான்மையில் நிரம்பி வழிகின்றது என்று சிங்கள மக்கள் கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்கொழூம்பில்உருத்திரா என்றதமிழர்நகர மேயராகஇருந்தது போல்யாழ்ப்பாணத்தில்ஓருசிங்களவர் நகரமேயராகவர யாழ்நடுத்தரவர்க்கஅரசியல்விடுமா? சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் எம்.பியாகவரநினைத்துப்பார்க்கமுடியுமா? மலையக மக்கள் குடியேறிய பிரதேசங்கள் அனைத்தும் சிங்கள மக்களின் பாரம்பரிய பூமி என்று சிங்கள மக்கள் உரிமை கோர முடியாதா? ஒரு பல்லின மக்களின் தேசமாக இலங்கையை ஏன் நாவலனால் பார்க்க முடியவில்லை. இலங்கையர் என்று சிந்திப்பது என்ன அத்தனை பெரிய துரோகமா?தமிழர்,முஸ்லிம், சிங்களவர், பறங்கியர், வேடர் என்று எல்லா மக்களும் இலங்கையர் என்ற கூட்டுள் ஐக்கியப்படாமல் எப்படி சோசலிசம் வரும்? கிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாய்க் கொண்டது என்பதை ஏனைய தமிழ் தேசியவாதிகளைப் போலவே நாவலனும் திட்டமிட்டே பொருட்படுத்தாமல் விடுகின்றார். தமிழரோ, சிங்களவரோ,முஸ்லிமோ, பறங்கியரோ, ஜாவா மக்களோ, மலையக மக்களோ எவராயினும் நிலமற்ற எல்லா மக்களும் கிழக்கில் குடியேற உரிமையுடையவர்கள். காணி வழங்கப்படல் வேண்டும் என்று கேட்க நாவலனால் முடியாது ஏனெனில்அவர் தமிழினவாதத்துக்குள் கட்டுண்டு போன மனிதர்,எந்தச் சிங்களவர்களும் தமிழரை அழிக்கவேண்டும் அவர்களது நிலத்தைப் பறிக்கவேண்டும் என்று கிழக்கு மாகாணத்துக்கு தமிரெடுத்து வரவில்லை. நிலமற்ற எழைகளும் விவசாயிகளுமே வந்தனர். தென்னிலங்கை முழுவதும் தமிழ்மக்கள் வாழ உரிமை பெற்றுள்ளபோது வடக்கு கிழக்கை விட அதிகமாக வாழும் போது கிழக்கிலங்கையை சிங்கள மக்களற்ற பிரதேசமாக நாவலன் வைத்திருக்க ஆசைப்படுகின்றார். முலையகத்தில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விடம் சிங்கள மக்களின் பாரம்பரிய பூமி என்று சிங்கள மக்கள் வாதாட வெளிக்கிட்டால் என்னாவது?இதை எப்பவாவது ஒரு தமிழ்தேசியவாதி நினைத்துப் பார்த்ததுண்டா? இவை எல்லாவற்றையும் விட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிங்கள மக்களின் குடியேற்றுதலை எதிர்க்காதபோது ஒரு பல்லின வாழ்வுக்கு தயாராகவுள்ள போது இதை மறுக்க யாழ்.நடுத்தரவர்க்க தமிழினவாதிகட்கு என்ன உரிமையிருக்கின்றது

கிழக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களைப் போல் சிங்கள மக்களுக்கும் பாரம்பரியமான வாழ்விடம் தான் கிழக்கின் பெரும்பகுதி கண்டி இராச்சியத்தின் பகுதியாகவே இருந்தது. திருமலையில் தேவாரம் பாடல் பெற்ற தலம் இருந்தது என்றால் சேருவாவில உட்ப பல இடங்களில் மிகவும் தொன்மையான பௌத்த விகாரைகளும் இருந்தன. தமிழர், சிங்களவர் சேர்ந்து வாழ்ந்த அடையாளங்கள் நிலவின. அது தனித்தமிழ்ப் பகுதியாக இருந்தது என்பது தமிரசுப் பொய், கல்வி, சுகாதார அறிவு பெருகுதல், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் என்பன மக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யாதா? இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு இருக்காதா? தமிழர்கள் உலகமெல்லாம் குடியேற உரிமை வேண்டும். ஜெர்மன், பிரான்ஸ், சுவிஸ், பிரிட்டிஸ், கனடிய பிரசையாக எல்லாம் அவர்கள் ஆவார்கள்.ஆனால் சிங்கள மக்கள் தம் சொந்தநாட்டின் பகுதியில் குடியேறக்கூடாதா?

அவுஸ்திரேலிய பழங்குடி மக்கள், செவ்விந்தியர், பலஸ்தீனியர்கள், ஆபிரிக்கர்கள் ஆகியோருக்கு நடந்ததையொத்த இனக்கொலை,நிலப்பறிப்பு, குடியேற்றம் என்பன தமிழர்கட்கு எதிராகவும் நடந்ததாக தமிழினவாதிகள் எப்போதும் விபரிக்க முயன்றுள்ளார்கள். தென்னாபிரிக்க நிறவாத அரசை ஒத்த இனவாத அரசு இலங்கையில் உள்ளதாக அன்று தமிழரசு மேடைகளில் முறையிடப்பட்டது. தமிழர்களின் நிலம்களை சிங்களவர் ஆக்கிரமிக்கின்றனர் என்ற வாதம் கொலனிக்கால அந்நிய ஆக்கிரமிப்புக்குச் சமமாக நிலமற்ற சிங்கள ஏழை விவசாயிகளின் கிழக்குக் குடியேற்றலை சமர்ப்படுத்த முயல்வதாகும். இந்தியாவால் எப்படி கேரளாவில் தமிழரும் கர்நாடகத்தில் கேரளரும் தமிழரும் குடியேறுகிறார்களோ இவை இயல்பாக நடைபெற்ற மக்களின் குடிபெயரலாகும்.நிலத்தேவை இல்லாவிட்டால் என்னதான் முயன்றாலும் மக்கள் புதிய இடத்துக்கு குடிபெயரமாட்டார்கள். தென்னிலங்கை என்பது சன அடர்த்தி மிக்கதும் பெரிய விவசாய முயற்சிகட்கு தடையான மலைப்பிரதேசங்களையும் உடையதாகும். ஆனால் அனுராதபுரம் கிழக்கு மாகாணப் பகுதிகளிலேயே பரந்த காடுகளும் வளமான மண் மற்றும் நீர்ப்பாசன வசதிகளும் இருந்தன. கிழக்கை விட அனுராதபுரம் மிகிந்தலை போன்ற இடங்கட்கு அதிக நிலமற்ற சிங்கள மக்கள் குடியேறினார்கள். 1948 சுதந்திரம் அடையுமுன்பு தமிழர்கள் பிரிட்டிஸ் ஆட்சியில் ஒடுக்கப்பட்டதாக நிலப்பறிப்பு நடந்ததாக தமிழ்த்தேசியவாதிகள் ஒருபோதும் கூறுவதில்லை. கிழக்கு நீர்ப்பாசனத்திட்டங்களின் பெரும்பகுதி பிரிட்டிஸ் காலத்தில் தொடங்கப்பட்டவை. ஆனால் பிரிட்டிஸ்காறரை இதற்கு இவர்கள் பொறுப்பாக்குவதில்லை. கொலனிக் காலத்திலய பிரச்சனைகட்கு சிங்கள மக்களை மட்டும் பொறுப்பாக்கினார்கள். இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் குடியேறிகளாக சென்ற தமிழ்தேசியவாதிகள் அந்த நாட்டு பிரசைகளாக ஆகிவிட்ட கொழுப்பெடுத்த யாழ்.மத்தியதர வர்க்கத் தமிழர்கள் சோத்துக்கு வழி தேடக் கிழக்கில் குடியேறிய ஏழைச்சி;ங்கள மக்களை தமிழர்களின் நிலத்தைப் பறிக்க வந்தவர்களாகக் கற்பித்தனர். புகலிடத் தமிழர்கள் தாம் குடியேறிய நாடுகளில் ஐரோப்பியர், ஆபிரிக்கர், ஆசியர், லத்தீன் அமெரிக்கர் என்று உலகெல்லாம் உள்ள முன்பு பின்பு கேட்டுக் கண்டறியாத மக்களுடன் எல்லாம் வாழ்வார்கள். பல்லினக் கலாச்சாரத்துக்கு ஆட்படுவார்கள் ஆனால் இலங்கையுள் சொந்த நாட்டுக்குள் மட்டும் சிங்களவர்களுடன் வாழ மறுக்கின்றார்கள். தொட்டால் பட்டால் தீட்டு என்கிறார்கள். இந்த அநாகரீகர்களை மனித நாகரீகம் திருத்தியெடுக்க இன்னமும் எத்தனை சகாப்தங்கள் தேவை?

முதல் உலக யுத்தத்தில் அரிசி இறக்குமதி தடைப்பட்டது. அரிசிக்கு பெரும் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டது எங்கும் பட்டினி நிலவியது. இச்சமயம் களனிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களிடம் நெற்செய்கைக்காகத் தரப்பட்டது. அது சிங்களவரின் நிலம் என்று எந்த சிங்கள மக்களும் ஆட்சேபிக்கவில்லை. கிழக்கு உட்பட இலங்கையின் வரண்ட பகுதிகளில் மலையக மக்களைக் குடியேற்றி நெற்செய்கையில் ஈடுபடுத்துவது பற்றி உத்தேசிக்கப்பட்டதாயினும் உலக யுத்தம் முடிந்தமையால் இது கைவிடப்பட்டது. பண்டாரநாயக்கா அரசில் இருந்த இடதுசாரியான பிலிப் குணவர்த்தனா கிழக்கில் பிரமாண்டமாக விவசாயக் கூட்டுப் பண்ணைகளை அமைக்கத் திட்டமிட்டார். ஏனெனில் தென்னிலங்கையில் பெரிய விவசாயக் கூட்டுப் பண்ணைகளை அமைக்கவல்ல நிலப்பரப்போ சமதரையான பூமியோ இருக்கவில்லை பின்பு அவர் பதவியை விட்டு விலக்கப்பட்டதால் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. விவசாயத்தைப் பெருக்கவும் உள்ளுர் உற்பத்தியில் தங்கிய பொருளாதாரத்தை உருவாக்கவுமே இவை திட்டமிடப்பட்டனவே தவிர தமிழன் நிலத்தைப் பறிக்கவல்ல.அரைநூற்றாண்டு காலம் தமிழரசுவாதிகளால் தமிழ் மக்கள் மத்தியில் வலுவாக ஊன்றப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்ற கருத்தியல் வன்னிப் பகுதியிலோ, கிழக்கிலோ யாழ் குடாநாட்டைப் போல் பலமாக இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் சிங்கள மக்களுடன் அக்கம் பக்கமாய்க் கூடி வாழ்ந்த அனுபவம் இருந்தது.

‘தமிழ் சிங்கள முரண்பாடு வரலாற்றில் நிலவவில்லை என்று காட்ட நாவலன் முயன்றபோதும் மறுபுறம் தமிழ்த்தேசியவாதம் சிங்கள இன ஒடுக்குமுறையின் விளைவு எனக் கருதும் சராசரி தமிழினவாத மதிப்பீடுகளிலிருந்து அவரால் தப்பிக்கமுடியவில்லை. தமிழ், சிங்கள இனவாதம் இரண்டுமே ஏகாதிபத்திய அரசியலின் படையல் தமிழ்ப்பிரிவினை வாதம் அவர்களின் தூண்டுதல் என்று அவர் கருதவில்லை. தமிழினவாதத்துக்கு அவர் விசேட சலுகை தருவதுடன் புலிகள் பிழை தமிழ்த்தேசியம் சரி என்று இரண்டையும் பிரித்துப் பார்க்கின்றார். புலிகளின் தவறுகளுடன் நியாயம்களும் இருப்பதாக கற்பிக்க இடம் தருகின்றார். யாழ்.நடுத்தரவர்க்கம் கிளப்பிய தமிழ்த்தேசியப் பயணிப்பின் இறுதி முடிவே தமிழ்ப் பாசிசம் என்று அவர் விளங்கவில்லை. புலிப்பாசிசம் திடீரென பிரபாகரன் போன்ற கொடிய பாசிஸ்டுகளால் படைக்கப்படவில்லை. அதற்கான அகவயமான சூழல்கள் தமிழ்ச் சமூகத்தில் யாழ்ப்பாண நடுத்தரவர்க்க மேற்குலக சார்பு சமுதாய நிலையில் இருந்தன. இவர்கள் தமிழீழம் கேட்டுவிட்டு மேற்குலக நாடுகட்கு ஓடித்தப்ப வன்னி மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளின் பிள்ளைகள் போராட்டத்தில் செத்தார்கள்.மலையகத் தமிழர்களிடமும் கடைசியாக ஆள்பிடிப்பு நடந்தது. கட்டாயப்பிள்ளைபிடிப்பாககடைசியில் இது மாறியது. புகலிட நாடுகளில் குடியேறிய யாழ்.குடாநாட்டு தமிழர்கள் புலிப்பாசிசத்தை வளர்த்தெடுத்ததுடன் வடக்கு கிழக்கு தமிழர்களின் தலைமீது தமிழ் ஈழத்தை பலவந்தப்படுத்தி சுமத்திவிட்டனர்.அவர்களின் சமாதான வாழ்வுக்கான ஏக்கங்களை தமிழ் ஈழம் பற்றிய கனாக்களின்மேலான நிராகரிப்பை இவர்கள் பொருட்படுத்தவில்லை. புகலிடத் தமிழர்கள் ஏகாதிபத்திய அரசியலின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். புலிப்பாசிசத்தின் மனிதப் பண்பாடறியாத அரசியல் மூர்க்கம் இவர்கட்கு வெது வெதுப்பாக இருந்தது.நிதி,பிரச்சார,அமைப்பு ரீதியிலான ஆதரவை இவர்கள் புலிப்பாசிஸ்டுகட்கு வழங்கியதன் மூலம் தமிழ் மக்கள்மேல் புலிகளின் தொடர் அடிமைப்படுத்தலுக்கு காரணமாயினர்.நாவலன் போன்றவர்கள் கூட தமிழ் மக்களின் தரப்பில் இருந்து சிந்திக்கத் தலைப்படவில்லை என்பதுடன் புலிகளின் சிங்கள முஸ்லிம் மக்கள் மேலான பயங்கரவாதம் குறித்து எந்தஓருசிறு உணர்வுமற்றவர்களாக இருந்தனர்.

சிங்களத் தேசியவாதம் என்பது வரலாற்றி;ல் பல சமயங்களில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அரசியலைச் செய்துள்ளது. தமிழ்தேசியவாதிகளின் ஏகாதிபத்திய கைக்கூலித்தலைமைகட்கு எதிராக சிங்களத் தேசிய உணர்வானது முற்போக்கான இலங்கைத் தேசபக்த சக்தியாகவும் இருந்தது. தமிழினவாத வேலி வாய்க்கால்களில் மட்டுப்பட்டவர்கட்கு இதைக்காண முடியாது.இதை அவர்கள் சிங்களச் சார்பு, தமிழ்த்துரோகம் என்றே அரசியல் மொழி பெயர்ப்புச் செய்வார்கள். மாக்சியவாதிகள் மட்டுமே இதன் அரசியல் பரிமாணத்தையும் சோசலிசப் புரட்சியின் எதிர்கால நலன்களையும் இதனூடு கவனத்தில் கொள்வர். ‘சிங்கள மக்களின் உருவாக்கம் என்பது தென்னிந்தியர், மலாயர்,போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் கலப்பு ஊடாக நடந்தது என்று நாவலன் எழுதும்போது சிங்கள மக்களை விட தமிழர்களில் ஏற்பட்ட இத்தகைய இனக்கலப்புக்கள் அதிகம் என்ற வரலாற்றுண்மையை அவர் குறிக்கவில்லை. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கலப்பு என்பது தமிழ் சிங்கள இருபகுதிக்கும் பொதுவானது. ஐரோப்பியர்கள் தமிழ்,சிங்களப் பெண்களை திருமண உறவுக்கு வெளியே கொண்டிருந்தனர் என்பதுடன் ஐரோப்பியப் படைகளில் இருந்த அங்கோலா, இந்தோனேசியா, ஜாவா, நாட்டுப்படைகளில் பெரும்பகுதி இங்கு தங்கி தமிழ் , சிங்களவரில் கலந்தனர். இதை கொலனிக்காலத்துக்கு முன்பு இந்தியாவின் பல்லின மக்கள் தாய்லாந்து, ஜாவா உட்படப் பலவித மக்களின் கலப்புக்களில் இருந்து தப்பவில்லை. அப்படியிருக்க சிங்கள இனத்தை மட்டும் கலப்பு இனமாகக் காணும் அவசியம் நாவலனுக்கு ஏன் ஏற்பட்டது? இதற்கு தமிழ்தேசியவாதக் காரணியைத் தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது. தூய இனம், தூயமொழி என்ற நிரூபித்தல்கள் இனவாதிகட்கு உரித்தான விடயமாகும். வரலாற்று மற்றும் மானுடவியல் உண்மைகட்கு இவற்றோடு எந்த ஒட்டுறவுமில்லை.

அனுராதபுரத்தில் 17ம் நூற்றாண்டில் தமிழ்மொழி இருந்தது என்று கண்டியில் இருந்து தப்பி வந்த ஐரோப்பியரின் குறிப்பை நாவலன் ஆதாரமாய்க் காட்டுகிறார். அனுராதபுரத்தை தமிழர் நிலம் எனக் காட்டும் அவரது பிரயத்தனமாகவே இதைக் கொள்ளவேண்டும்.; 17ம் நூற்றாண்டில் அனுராதபுரம் ஒரு பாழடைந்த மக்கள் மிக மிக குறைவாக வாழ்ந்த பிரதேசமாக ஆகிவிட்டது. தென்னிந்தியப் படையெடுப்புகட்கு அஞ்சி சிங்கள மக்களது குடியேற்றம் தென்னிலங்கைக்கும் பகைவர் எளிதில் புகமுடியாத மலைப்பிரதேசங்கட்கும் நகர்ந்தது. ஆனால் அனுராதபுர நாகரீகம் என்பது முதன்மையாக சிங்கள மக்களின் பௌத்த மதவளர்ச்சியுடன் முக்கிய இடமாகும் என்பதை வரலாற்று நேர்மை இல்லாதவர்கள் மட்டுமே சந்தேகிக்க முடியும்.தமிழர்களும் அனுராதபுரத்தில் வாழ்ந்திருப்பர் என்பதை நாம் சந்தேகப்பட முடியாது என்ற உண்மை அது அவர்களின் பிரதான வாழ்விடமாக இருந்தது என்ற கருத்துக்கு இட்டுச் செல்லாது. போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்னே கொழும்பிலும் கண்டியிலும் இந்துக் கோவில்கள் இருந்தது என்பதால் அந்த இடங்களை நாம் தமிழர்களின் பிரதேசம் என்று உரிமை கோர முடியுமா? பொலநறுவையில் சிவாலயம் உள்ளது என்பதால் அப்பகுதி தமிழர்களின் பூமியா?வன்னிச் சிற்றரசனான பண்டாரவன்னியன் பெயரின்  முன்பு வரும் ‘நுகரகளாவி’ என்ற பட்டப் பெயர் அனுராதபுரப் பகுதியின் அக்காலப் பெயராக இருப்பதால் நாம் அவனை நாம் சிங்களச் சிற்றரசன் எனக் கொள்வதில்லை. கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் தமிழன் எனக் கருதப்பட்ட மதுரைநாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த தெலுங்கன் என்பதால் அவனால் ஆளப்பட்ட கண்டி மக்கள் தமிழர்களா? வரலாற்று ஆய்வுக்குத் துணிந்தால் அங்கு இனத்தை நிறுவ வெளிக்கிடக்கூடாது. இலங்கையின் தமிழ், சிங்கள வரலாற்று எழுதல்கள் இப்படித்தான் இனவாதசரித்திரமாக மாறின.  ஈழவேந்தன் இலங்கை முழுவதுமே இராவணனின் தமிழ் மண் என்கின்றபோது காசி ஆனந்தனோ இராஜ இராஜசோழன் போன்ற சோழ மன்னர்கள் ஏன் இலங்கை முழுவதையும் தமிழ் மயமாக்கவில்லை என்று இப்போது கவலைப்படுகின்றார்கள். அனுராதபுரத்தில் தமிழ் பேசப்பட்டது என்ற நாவலனின் வாதம் இது சிங்கள மக்களின் வரலாற்று உரிமையில் அத்துமீறி நுழைந்து அடாத்துப் பண்ணும் செயலாக அவருக்குப்படவில்லை. சிங்கள, தமிழ் மக்களின் கலாச்சாரங்கள் ஒருவர் மீது மற்றவரின் தாக்கத்துக்கு உட்பட்டு இருந்தது கூட எண்ணமுடியாதவராக அவர் உள்ளார்.

.கி.பி.6ம் நூற்றாண்டுக்கும் 12ம் நூற்றாண்டுக்கும் இடையில் சிங்கள மொழி முக்கியத்துவம் பெற்றதாக நாவலன் எழுதுவது சிங்களமொழி தமிழ்மொழிக்கு இளையது என்று காட்டத் தான். இதன் மூலம் தமிழர்கட்கு தொன்மை தேடித்தர முயல்கின்றார். சிங்கள மொழியானது தமிழ் மொழிக்கு மிகவும் பிந்தியதாக இருப்பதில் என்ன வெட்கம்? சிங்கள மொழிக்கும் மிகவும் பிந்திய பிரான்ஸ், ஜெர்மன் ஆங்கில மொழிகள் சிங்கள மொழியை மட்டுமல்ல சீனம், லத்தீன், கிறீஸ் உச்சரிப்புக்களையும் எழுத்துக்களையும் ஏனைய சிறப்புக்களையும் பெற்று அவற்றை முந்தி வளரவில்லையா?  பழைய மொழிகளில் உள்ள இல்லாமைகள் புதிதாய்ச் சொல்லும் திறனற்ற தன்மைகளை உணர்ந்தே புதிய மொழிகள் வருகின்றன.சிங்கள மொழியானது பாலி, சமஸ்கிருதம், ஒலு,தமிழ், ஒஸ்ரோயிட் ஆகிய மொழிகளை உள்வாங்கிச் செரித்தே வளர்ந்தது. சிங்கள மொழி பைலாப் பாடல்கள் மொழி தெரியாத வரிகளைக் கூட ஆட தாளம் போட வைப்பவை.தமிழ்தேசியத்தின் தனித்தீவு அரசியலுக்கு வரம் வாங்கியுள்ள நாவலன் மொழிகளில் மூத்தது இளையது தேடிப் பொருமையுறுகின்றார்.

இதன் தொடர்ச்சியை இங்கே பார்வையிடலாம்:
http://inioru.com/?p=4500

5 thoughts on “சபாநாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி : தமிழரசன்

 1. சபாநாவலின் ‘தேசிய இனப்பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களின் சதி’ எனும் நூல் தொடர்பாக தமிழரசன் எழுதிய விமர்சனம் வாசிக்கக் கிடைத்தது.

  கட்டுரையானது இலங்கையில் நிகழந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைகளை – அதுவும் மிக வெளிப்படையான இனக்கலவரம், நூலக எரிப்பு, தமிழர் படுகொலைகள், பாராளுமன்ற வாதிகள் மீதான குண்டர்களின் தாக்குதலை, ஒரே நாளில் இராணுவத் துணையுடன் ஆயிரக்கணக்கானோரை தமிழர் வாழும் பகுதிகளில் குடியேற்ற முயற்சித்ததை, சாதாரண மக்கள் மீதான பொருளாதாரத் தடைகளை, அப்பாவி மக்களை புலிகளின் பகுதிகளில் வாழ்ந்ததற்காக கொன்று புதைத்ததை, தமிழ்ப் பெண்கள் என்ற காரணத்தால் நடைபெற்ற பாலியல் கொடுரங்களை …… போன்றவற்றை அறிந்தேயிருக்க முடியாத ஒருவருடையது.
  அதற்கப்பால் விமர்சகர்களை மையப்பிரச்சினையில் இருந்து திசை திருப்பி விடுகிற – இலகுவில் முரண்பட்டுப் பிரிந்து அணி சேர்க்கக் கூடிய பல்வேறு கருத்துக்களை நோக்கி கவனத்தை ஈர்க்கச் செய்ய முனைகிறார்.
  அதற்கப்பாலம் அவருடைய எண்ணற்ற சிந்தனைகளை நாம் காணலாம். முக்கியமாக
  இந்தியாவின் தற்கால வளர்ச்சியை ,
  இலங்கை அரசின் முதலாளித்துவத்தை…
  இலங்கையரசின் தேசியத்தன்மையை… இ
  பல்லினங்கள் இருந்து இலங்கையர் உருவாவதை…
  இன்றைய காலம் எத்தனை பேரை இப்படி உருhவக்கி இருக்கிறது.
  வி.ஆர்.

 2. இலங்கை அரசின் கைக்கூலி, ஒட்டுண்ணி ஒன்று இந்த விமர்சனத்தைச் செய்திருக்கிறது

 3. நீண்ட நாட்களுக்குப்பிறகு வாசிக்ககிடைத்;த பயன்மிகு கட்டுரை. இனியொருவுக்கு நன்றி.
  இதுபோன்ற கட்டுரைகளை் கண்டு கொள்ளாமல் உப்புச்சப்பற்ற பின்னூட்டங்கள் எதற்கு?

  இதுபோன்ற கட்டுரைகளும் தொடர் விவாதங்களும் எப்போது இணையங்களில் உருவாகின்றதோ அப்போதுதான் இணையம் வெற்றிதரும்.

  தமிழரசனால் குறுக எழுதமுடியாது. இது இக்கட்டுரையிலுள்ள தலித்தியம் சிங்கள குடியேற்றம் தொடா;பான குறுபகுதிகளை எடுத்து விவாதத்றிகு விடுமாறு இனியொருவை வேண்டிக்கொள்கிறேன்.

  புகலிட தலித்தியம் தொடர்பான தெளிவான கருத்து தமிழரசனுடையது.
  குடியேற்றங்கள் பற்றிய தகவல்கள் சரியாக இருந்தபோதும் திட்டமிட்ட குடியேற்றங்களின் பின்னாலுள்ள அரசியல் ஒருபக்கமாக மட்டுமே பார்க்கப்படுவதாக தெரிகிறது.

  ஒரு நுhலுக்கான நாகரீகமான கெளரவம் இது.

 4. Tamil people are human being too mr thailarsan not only thelungar,kannadar,malaiyaee.tamils in india having been treated ill in other part of india and other states not even consider themas a indians too.if look tamilnadu from cheif minister to cinema no tamils,all the tamil nadu land owns by non tamils.please read and write.think.

 5. சபாநாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி : என்ற நூல் தொடர்பாக தமிழரசன் எழுதிய விமர்சனத்தின் அரைவாசியை தான் நான் வாசித்துள்ளேன்.
  அது தொடர்பாக
  தமிழரசன் தரப்படுத்தல் என்ற கொள்கையின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் சொற்பதத்தைப்பயன் படுத்தியுள்ளார். மாவட்டக் கோட்டா முறை அல்லது பின் தங்கிய மாவட்டங்கட்கான கல்விக்கோட்டா முறை என்பதே. இப்பதம் மிகப்பொருத்தமானது.
  அவர் கூறிச்செல்லும் விடயங்களுடன் இன்னுமொன்றையும் அவர் உள்ளடக்கியிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
  அதாவது இவ் மாவட்டக் கல்விக் கோட்டா முறையினால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறைந்த புள்ளிகளுடன் பல்கலைக்கழக அனுமதியை பெற்ற அதேவேளை அதிக புள்ளிகளைக்கொண்ட சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பலருக்கான அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்டக் கல்விக் கோட்டா முறை பின்தங்கிய பிரதேசங்களுக்கு ஒரு சாதகமான அம்சமாக இருந்தாலும் கூட குறைந்த மதிப்பெண்களுடன் பெரும்பான்மையினத்தை சார்ந்தவர்கள் பெருமளவிலும் சிறுபான்மையினத்தவர்களில் குறைந்தளவிலும் பல்கலைக்கழக அனுமதிக்கும் வழிவகுத்தது.
  இக்கோட்டா முறையை ஒரு சிறுபான்மை சமூகம் தமது உரிமையை மறுக்கும் அல்லது அரசு பாரபட்சமான முறையில் நடந்து கொள்கிறது என உணருமேயானால் அது அவர்களைப் பொறுத்தவரையில் நியாயமானதும் கூட.
  மிகுதியை வாசித்து விட்டு பின்பு கருத்துக்களை முன் வைக்கிறேன்.

Comments are closed.