சத்தீஸ்கரில் கடும் மோதல்.

மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பெயரில் க்ரீன் கண்ட் போரை உள்நாட்டு மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்டுகள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது. சத்தீஸ்கரில் தந்தேவாடா மாவட்டத்தில், கிரண்டுல் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர், கோயா கமாண்டோக்கள், மாவட்ட போலீஸôர் இணைந்து அடர்ந்த வனப் பகுதியில் புதன்கிழமை மதியம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தினர்.மதியம் தொடங்கிய இந்த மோதல் மாலை வரை நீடித்தது. பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் மாவோயிஸ்டுகள் சிலர் கொல்லப்பட்டனர். கூடுதல் சிஆர்பிஎஃப் போலீஸôரும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மாவோயிஸ்டுகள் பின்வாங்கினர். பாதுகாப்புப் படையினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், மாவோயிஸ்டுகள் சிலர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என கூடுதல் டிஜிபி ராம்நிவாஸ் தெரிவித்தார். மாவோயிஸ்டுகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. சண்டையின்போது கொல்லப்படும் மாவோயிஸ்டுகளின் உடல்களை உடனிருக்கும் மற்றவர்கள் உடனடியாக அப்புறப்படுத்திவிடுவர். அதனால், கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை தெரியவருவது சிரமமாகும். ஜார்க்கண்டில் பாலம் தகர்ப்பு பேர் பலி:

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் குண்டுவைத்து பாலத்தை தகர்த்ததில் 5 பேர் பலியாயினர். மாவோயிஸ்டுகளை ஒடுக்க துணை ராணுவப் படையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை மாவோயிஸ்டுகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் பூர்ணாநகர்காந்தே இடையிலுள்ள பிர்டண்ட் போலீஸ் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சிறிய பாலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கார் வந்தபோது வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் காரில் இருந்த 5 பேர் கொல்லப்பட்டனர். ஒரிசாவில் சிறிய பாலம் தகர்ப்பு: ஒரிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டம் பிஸ்ரா பகுதியில் சாலையோர பாலத்தை மாவோயிஸ்டுகள் புதன்கிழமை வெடிவைத்து தகர்த்தனர். அருகிலேயே ரயில்வே தண்டவாளங்கள் இருந்ததால், முன்னெச்சரிக்கையாக ரயில் போக்குவரத்தை அதிகாரிகள் நிறுத்தினர். அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.