சங்க கால தமிழ் இலக்கியங்களும் கள் மது அல்ல அது உணவின் ஒரு பகுதி என கூறுகின்றன. – தமிழ்நாடு கள் இயக்கம்.

15 லட்சம் விவசாயிகளின் பிரச்சனையான கள் இறக்கும் தொழிலுக்கு அனுமதி கோரி செம்மொழி மாநாட்டையொட்டி போராட்டம் நடக்க விருந்த நிலையில் அப்போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறும் செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் சொன்னார் கருணாநிதி. ஆனால் இன்றுவரை இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத நிலையில் தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க கால தமிழ் இலக்கியங்களும் கள் மது அல்ல அது உணவின் ஒரு பகுதி என கூறுகின்றன. இவைகளை தமிழ்நாடு அரசு மட்டும் மதிக்காமல் கடந்த 23 ஆண்டுகளாக கள்ளை இறக்குவதற்கும், பருகுவதற்கும் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவில் நல்லதொரு முடிவை எடுத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, சிவசுப்பிரமணியன் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.சிவசுப்பிரமணியம் கமிட்டியின் அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு வெளியிட தவறினால், 2 தொகுதி கொண்ட 805 பக்கங்கள் அடங்கிய தமிழ்நாடு கள் இயக்கம் வெளியிடும்.தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கொண்டு வரப்படும் வரை டாஸ்மாக் விற்பனை மதுக்கள் அனைத்தும் பனை தென்னை பொருட்களை கொண்டே தரமாக தயாரிக்கப்பட வேண்டும். உலக அளவில் சந்தைப்படுத்த வேண்டும்.தமிழ் மண்ணின் மரமான பனை மரங்கள் வேகமாக வெட்டப்பட்டும், தோண்டப்பட்டும் வருகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசால் தடை விதிக்கப்பட வேண்டும்.அரிசிக்கு அரசு ஆண்டுதோறும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான மானிய தொகை ஒதுக்கி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரிசியை விட அதிக சத்துகள் கள்ளில் இருப்பதாலும், தாய்ப்பாலுக்கு நிகரானது என்பதாலும், அரிசிக்கு மானியம் கொடுப்பதை போல கள்ளுக்கும் மானியம் கொடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.