கோவையில் அகதிப் பெண் தற்கொலை.

தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழ அகதிகளுக்காக தமிழகமெங்கிலும் பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகள் பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இம்முகாமில் இலங்கையில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு அகதியாக வந்தவர் சீனன். இவர் முகாமில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் கீர்த்தா (19). இவரது தாய் மாமன் இலங்கையில் உள்ளார். தாய் மாமனிடம் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு உள்ளார். ஆனால் இலங்கையில் இருந்த தாய்மாமன் கீர்த்தாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனம் உடைந்த கீர்த்தா யாருக்கும் தெரியாமல் அரளி விதையை அரைத்து குடித்து உள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தார்.இதை பார்த்த அவரது உறவினர்கள் கீர்த்தாவை மீட்டு சிகிச்சைக்காக தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கீர்த்தாவை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.