கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் பற்றி இலங்கை இராணுவம்….

 

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் பிளாஸ்ரிக் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் 1991 இல் தாய்லாந்துக்குச் சென்று அங்கு திருமணம் செய்ததாக இராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பல வருடங்களாகப் பயங்கரவாதக் குழுக்களுக்கு கே.பி. ஆயுத விற்பனை செய்தவர் என்றும் ரோலர்களைப் பயன்படுத்தி திறமையாக சமாளித்து ஆயுதங்களைக் கொண்டு செல்பவர் எனவும் அதேசமயம் மிகவும் நவீனமான ஆயுதக் கொள்வனவு முறைமைகளை மேற்கொண்டு பிரதான ஆயுத வியாபாரிகளின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர் என்றும் இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி.யின் பயண முறைமைகளால் விடுதலைப் புலிகளின் கப்பல்களில் நடமாட்டம் அதிகரித்திருந்தது. விமான நிலையங்கள், துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று மிகவும் சுலபமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவர் ஆயுதத் தயாரிப்பு நாடுகளுக்கும் சென்று வந்தார். முன்னாள் சோவியத் நாடுகள் , மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய ஆயுத உற்பத்தி நாடுகளுக்கு அவர் சென்றுவந்தார். அத்துடன், ஹொங்கொங், சிங்கப்பூர், லெபனான், தாய்லாந்து, சைப்பிரஸ் போன்ற நாடுகளிலுள்ள ஆயுத வியாபாரிகளிடமும் அவர் தொடர்புகளை விருத்தி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சு அறிக்கையின் பிரகாரம் கே.பி. பிரான்ஸ், சைப்பிரஸ், தாய்லாந்து, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, கம்போடியா, பாகிஸ்தான், நோர்வே, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

வன்னி நடவடிக்கைகளின் பிந்திய கட்டத்தில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு கொழும்புக்கு சர்வதேச அழுத்தத்தைக் கொடுப்பதற்கு கே.பி. செயற்பட்டு வந்தார். இலங்கை அரசுக்கு எதிராக மேற்குலக தலை நகரங்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவதற்கு ஊக்குவித்தும் நிதி ஆதரவு வழங்கியும் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பிரிவினைவாதம் அவரின் அறிக்கைகளில் காணப்பட்டதாகவும் புலம்பெயர்ந்த சமூகத்தை ” ஈழத்தமிழர்கள்”என்றும் இலங்கை அரசாங்கத்தை அந்நிய ஆட்சியென கருதப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2007 செப்டெம்பர் 10 இல் தாய்லாந்து பொலிஸாரால் கே.பி. கைது செய்யப்பட்டதாக தாய்லாந்தின் பாங்கொங் போஸ்ட் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக இந்திய, இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்துவதற்காக அணுகிய போது அந்தச் செய்தி சரியானதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009 மே 18 இல் துரிதமாக விடுக்கப்பட்ட அறிவிப்பில் பிரபாகரன் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கே.பி.தெரிவித்திருந்தார். பின்னர் தனது அறிக்கையை அவர் திருத்திக்கொண்டார். முதலாவது அறிக்கை தொடர்பாகவும் பின்னர் அவர் விடுத்த அறிவிப்பு தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றச்செயல்கள் குறித்து இலங்கை, இந்தியா மற்றும் இன்ரர் போலின் தேடுதல் பட்டியலில் கே.பி.இருந்தார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உட்பட அதி முக்கிய பிரமுகர்களின் படுகொலைச்சதி மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் பில்லியன் டொலர் நிதியை கே.பி.தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பதவி வழங்குவோரிடமிருந்து இதனைப் பெற்றுக்கொண்டதாகவும் இந்த நிதியில் சில பகுதி வெளிநாடுகளிலுள்ள தமிழர்களிடமிருந்து கப்பமாகப் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.