குழப்பத்தை தோற்றுவிக்க முயற்சிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் : வவுனியா முகாம் மக்களுக்கு இராணுவ அதிகாரி பகிரங்க எச்சரிக்கை!

 வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது காயம் ஏற்படும் வகையிலேயே இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்பின்னர் இவ்வாறு குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் எனவும் அந்த இராணுவ அதிகாரி பகிரங்கமாக எச்சரித்ததாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
 
  அத்துடன், குறித்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்டவர்களில் சிலரிடமிருந்து பெறப்படும் பகிரங்க வாக்குமூலத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அசௌகரியத்திற்குள்ளாக்க அரசாங்கம் முனைப்புக்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. கைதுசெய்யப்பட்டவர்களை முகாம்களில் வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

vanni77கடந்த சனிக்கிழமை சம்பவத்தின் பின்னர், ஆத்திரமடைந்துள்ள நிலையில், இராணுவத்தினருடன் முரண்படும் மனநிலையை முகாம் மக்கள் கொண்டிருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களை அடுத்தே இந்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.