குழந்தைத் திருமணத்தில் ‘வல்லரசு’ இந்தியாவிற்கு இரண்டாமிடம்

childmarriege_inioruஒரு சில ஏகாதிபத்தியப் பங்குதாரர்களான பல்தேசியப் பெரு முதலாளிகளின் வளர்ச்சியையும் கொள்ளையையும் இந்தியாவின் முன்னேற்றம் என்ற விம்பத்தை அதிகார வர்க்கம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உலகின் வறிய நாடுகளில் ஒன்று என்பது மட்டுமல்ல மிகவும் பிந்தங்கிய நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டுமானத்தைக் கொண்டது என யுனிசெப்பின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  20 முதல் 24 வயது வரையிலான திருமணமான பெண்களில் 43 வீதமானவர்கள் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வறிய உழைக்கும் பெண்கள் சாரிசாரியாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் போது டெல்லியில் மேட்டுகுடிப் பெண்கள் பாலில்யல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதை மட்டுமே இந்தியாவின் பெண்கள் மீதான ஒடுக்குமுறையாகக் காட்ட முற்பட்ட அதே அதிகாரவர்க்கம் சனத்தொகையின் அரைவாசிப் பெண்கள் குழந்தைத் திருமணம் செய்துகொள்வதைக் கண்டுகொள்வதில்லை.

ஐ.நா. அமைப்பான யுனிசெஃப், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் சிறார் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தில், மூன்றில் இரண்டு பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்விக்கப்பட்டுள்ளது.
2005 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 43 சதவீதத்தினருக்கு, 18 வயது பூர்த்தியாவற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களைவிட, படிப்பறிவு இல்லாத சிறுமிகள் திருமணம் செய்விக்கப்படுவது 5.5 மடங்கு அதிகமாக உள்ளது.
ஆண், பெண் விகிதாசாரம்: இந்தியாவில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆண் குழந்தைகளைவிட விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
4 வயது வரை உள்ள குழந்தைகளில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் என்ற அளவிலேயே ஆண் – பெண் விகிதாசாரம் உள்ளது.
பதிவு செய்யா பிறப்புகள்: உலகில் பிறப்பு பதிவு செய்யப்படாத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் கொண்ட நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது.
கடந்த 2000-லிருந்து 2012-ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் பிறந்த 7.1 கோடி குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழ் பெறப்படவில்லை.
குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதில் மதம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் 39 சதவீதமும், ஹிந்துக்களில் 40 சதவீதமும், ஜெயின் மதத்தினரில் 87 சதவீதமும் குழந்தை பிறப்பை பதிவு செய்துள்ளனர்.
நோய்த் தடுப்பு: 2012 நிலவரப்படி, இந்தியாவில் ஒரு வயதுக்குட்பட்ட 68.6 லட்சம் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.