குடும்ப அரசியலை இல்லாதொழிப்போம் : ரனில்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு  ஐக்கிய தேசியக் கட்சி தலைமியிலான ஐக்கிய தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.  இலங்கையில்  சாரி சாரியாக  மக்கள் கொல்லப்பட்ட போது  உருவாகாத இக் கூட்டணியின்  அரசியல் நோக்கங்கள் குறித்து  பலத்த  சந்தேகங்கள்  எழுப்பப்படும் அதே வேளை இது குறித்து  ரனில் விக்ரம சிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

குடும்ப அரசியலை இல்லதொழித்து மக்கள் ஜனநாயகமிக்கதோர் அரசியலை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமை நாள்தோறும் வெளியாகும் செய்திகளின் மூலம் தெளிவாக புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு அகதிகளை தடுத்து வைத்திருத்தல், தொழிற்சங்கங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தல், பொலிஸாரின் அராஜகம், ஊடக அடக்குமுறை என தற்போதைய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத செயல்களை பட்டியலிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல மக்களையும் சமமாக மதிக்கக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்