குகை மா புகழேந்தியின் கவிதைகள் : கவிதா (நோர்வே)

யாருமற்ற நிசப்த இரவில் போரும் வாழ்க்கையும் நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளைக் களைந்துவிட்டு அமைதியாய் சில நொடிகளை எமதாக்கிக்கொள்ளவதென்பது அரிதானது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை நல்லதொரு இலக்கியப் படைப்பினால் கொடுக்க முடியும். சில மணிப்பொழுதுகளானாலும் இந்த அமைதியை தரவல்ல சக்தியைக் கொண்டது காதல்க் கவிதைகள்.

இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் எம்மை சில நொடி பிரபஞ்சத்தின் வெளியே அழைத்துச்செல்லக்கூடிய வல்லமை கூடியது. நேற்றிறவு கையில் தட்டுப்பட்ட குகை மா.புகழேந்தியின் ”மயிலிறகு பூத்த கனவுகள்” கவிதைத் தொகுதியைப் படித்தபோது எனக்கும் இதே உணர்வு ஏற்பட்டது. சமூகத்தின் காயங்களையும், போரின் வலிகளையும் பற்றியே அனேக கவிதைகள் படித்து களைத்த எமக்கு, காயங்களுக்கு தன் மயிலிறகால் ஒத்தி எடுக்கும் கவிஞர் புகழேந்தியின் கவிதைகளில் ஒன்று

உலக இலக்கியங்களையெல்லாம்
கரைத்துக் குடித்து
எல்லோரும்
விழுந்து விழுந்து
எழுதிக்கொண்டிருக்கிறார்கள் காதலை
நான் சப்தமில்லாமல்
உன்னை சந்தித்த காலங்களை
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

காதல் கடலைக் கையில் பிடித்திருக்கும் போது வரும் மெலிதான கர்வம் மிக அழகாக இந்த வரிகளில் ஊட்டப்பட்டிருக்கிறது. காதலர்கள் அனைவரும் தம் காதல் காவியமாக்கப்பட வேண்டிய ஒன்றே என்ற எண்ணம் அவரவர்களுக்கு வருவது சகஜம். இயற்கையாய் வந்திறங்கும் ஆண் பெண் காதல் என்பது இரகசியமாக பாதுகாக்கப்படவேண்டிய காலகட்டம் என்று பொய்யும் களவும் எம்மிடையே புரையோடிவிட்டிருக்கின்றது. இருந்தாலும் எதையும் மீறிய வண்ணம் காலத்தை ஊடுருவிக்கொண்டு காதல் உணர்வு எம்மோடு பயணித்துக்கொண்டேதான் இருக்கின்றது. கடற்கரையோரத்தின் ஈரமான காற்றைப்போல இதமாகக் கைகோர்த்தபடி தனது காதல் காலங்களை எம்மோடு அழைத்து வருகிறார் கவிஞர் புகழேந்தி. இதில் என்னை மிகவும் கவர்ந்த கவிதையொன்றில் இப்படிச் சொல்கிறார்.

நிகழப்போகிற
விபத்தைப்பற்றி எதுவமே அறியாமல்
ஒரே தண்டவாளத்தில்
பயணித்துக்கொண்டிருக்கிற
ரயில்களைப் போல
நீ வந்துகொண்டிருக்கிற தெருவில்
நானும் நடந்துகொண்டிருக்கிறேன்.

ஒரு மனிதன் உணரக்கூடிய அற்புதமான உணர்வு காதல். ”நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்து போகும் வரை, நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை. நான் உன்னைக் காதல் செய்வேன்” என்கிறார் ஷேக்ஸ்பியர். காதல் யாரையும் விட்டுவிடுவதில்லை. காதல் இல்லாது வாழ்க்கை நகர்வதில்லை. ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் அவர்களுடைய காதலும், அதன் முலம் பெற்ற உணர்வும் அனுபவங்களும் சிலிர்படைய வைப்பதாகவும் ஒரு சமயங்களில் பாறைகளின் கனத்தைக் கொண்டு தாக்குபவையாகவும் இருக்கக்கூடும். காதலில் விழ்ந்த பிறகு காதலர்களின் முதல் சந்திப்பானது அவர்களுக்கான வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற நாளாக போற்றப்படுகிறது. முதல் சந்திப்பு எனப்படுவது கவிஞர் புகழேந்தியின் வரிகளால் இப்படி எழுதப்படுகிறது.

நமது முதல் சந்திப்பில்
நீ எனக்காக செய்த புன்னகைக்கும்
அப்போதே தெருவில் எவனோ உரைத்த
அசரீரிக் குரலான
”சாவுடா மவனே”வுக்கும்
என்ன தொடர்பிருக்குமென்று
யோசித்துக் கொண்டிருக்கும்போதே
சுவாசம் திணறத் துவங்கிவிட்டது!

சோற்களின் பரிணாமம் எண்ணங்களாய் எம் மனத்திரையில் உருப்பெருகின்றன. சட்டென்று ஓர் உலகம் விரிகிறது. அதில் சனநெரிசல்களும் பயணிகளும் நிறைந்திருக்க, அங்கே அந்தக் கவிதையின் நாயகியும், சாரத்தை இழுத்துக்கட்டிய ஒரு சென்னை வாசியின் குரலும் கவிஞரின் இந்தக் கவிதைச் சொற்களின் மூலம் எம்மை தெருவோரத்துக்குக் கைபிடித்து அழைத்துச்சென்று சம்பவத்தை கண்முன் திரை போல விரிக்கிறது. சோற்களின் உயிர் அது பிறக்கும் இடத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்பதை இக்கவிதை மூலம் உணரமுடியும்.

உன்னைப் பற்றியே
எப்பொழுதும்
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
அதைப் போய்
மரணம் என்று நினைத்து
என்னைப் புதைத்துவிட்டார்கள்

சொற்களுக்கான சுயம்; என்பது அதை நாம் பிரசவிக்கப்போகும் கருவின் கனத்தில் எழுகிறது. கவிதையின் வீரியத்தில் சொற்களின் எடை கனமுள்ளதாகவும், சில நேரங்களிள் வலியுள்ளதாகவும், சமயங்களில் கைத்துப்பாக்கியாகவும் அதே சொற்கள் இசைமொழியாகவும் மாறிவிடும் அதிசயம் கவிதை மொழியில் நாம் காணலாம். சொற்கள் அழகானவையானதாகவும், மகிழ்வுணர்வை ஊட்டுபவையாகவும், உணர்வுகளின் இன்பக் குவியல்களாகவும் காற்றில் மிதந்து சுவாசத்துள் நுழைவதைக் காதல் கவிதைகளில் தெளிவாக உணரலாம்.

நீயும் நானுமற்ற
நம்மை
இவ்வுலகம்
வௌ;வேறு குடும்பங்களாக்கி
குதூகலித்துக் கொண்டிருப்பதில்
பிறந்த குழந்தைகளுக்கேனும்
காதல் கிட்டட்டும்

காதல் எம் வாழ்க்கையின் ஒரு அவசியமான காலகட்டம், ஒவ்வொருவருக்குமான இனிமையான சந்தர்ப்பம். காதல் உணர்வு என்பது ஏனோ எல்லோர்க்கும் இனிமையானதாகத்தான் ஆரம்பிக்கிறது ஆனால் விளைவுகள் எதிர்மாறான அனுபவங்களைக் கொண்டதாகிவிடுகிறது. காதலுக்காக நாடுகள் சூறையாடப்பட்டதும், போர்கள் மூண்டதும் எம் சரித்திரங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளாததல்ல. இருந்தும் காதல்வாழ்க்கையின் தொடக்கப்பகுதி இன்றளவும் கள்ளத்தனம், ஒழிப்புமறைப்பும் உடையதாகவே எம் சமூகத்தில் கலந்திருக்கிறது.

இன்றும் எமது சமூகத்தில் காதல் என்பது தீ போன்றது. அதில் நீ குளிர் காயப்போகிறாயா அல்லது உனது சுற்றமும் உனது கனவும் தீப்பற்றி எரியப்போகின்றதா என்ற கேள்வியை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் காதல் நிகழ்கின்றது.

உனது முதல்ப் பார்வைக்கும்
இரண்டாவது பார்வைக்கும்
உள்ள இடைவெளியில்
ஒரு சூரியன்
ஒரு நிலா
மற்றும் எனது மரணம்
புதைந்து கிடக்கிறது.

…….

யாருமில்லாத அறைகளிலெல்லாம்
காதலை
காதலிக்க முடியாது
எல்லோரும் பார்க்கமுடிகிற
பௌர்ணமி நிலவைப் போல
பகிரங்கமாக காதலி
அதற்குப் பெயர்தான்
காதல்!

காதல் என்பது நமது சமூகத்தில் எப்படிப் பார்க்கப்படுகிறது? உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொன்ன பாவத்திற்காக. அவர்கள் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் அல்லது செத்துப்போக வேண்டும். விவாகரத்தைக்கூட அனுமதிப்பார்கள் எம் சமூகத்தினர்.

காதல் பிரிவு ஒருத்திக்கு ஏற்ப்பட்டுவிட்டால் நமது பண்பாடு கெட்டுப்போய்விட்டது என்று புலம்பித்தீர்ப்பார்கள். இதுதான் எம் முன் எழுந்து நிற்கும் நிஜம். பகிரங்கமாக காதல் புரிவது அல்லாத நடைமுறையைக் கொண்ட இன்றைய எமது சமூகம் காதலுக்கு லாயக்கற்றது என்றே சொல்ல வெண்டும். பெண் மீது வைத்திருக்கும் சமூகத்தின் தவறான பார்வை இருக்கும் வரை இதுபோன்ற கனவுகள் வெறும் கனவுகளாவே உறங்கிவிடும்.

காதலித்த இருவர் பிரிய நேரும் போது ஆண்களுக்கு அது வெறும் காதல் தோல்வியாக நிறைவுறுகிறது. அதே காதல் பிரிவு என்பது ஒரு பெண் யாரிடமோ ஏமாற்றப்பட்டவள் என்றும் கெட்டுப்போனவள் என்றும் இந்தச் சமூகம் தூற்றுகிறது. ஒருவேளை எதிர்புகளை மீறி இருவரும் சேர்ந்து வாழ்வது என்ற முடிவெடுத்தாலும். ஓடுகாலி என்ற பெயரை பெண்களிடம் மட்டும் சமூகம் சுமத்திவிடுகிறது. இங்கே பெண்களுடைய காதலை கற்பு, ஒழுக்கம் என்று பாகுபாடு கொள்ளும் சமூகத்தின் பார்வைக்கு பயந்தே காதல்கள் யாவும் மறைக்கப்படுகின்றன.

பகிரங்கமாய் காதல் செய் என்ற கவிஞரின் இந்தக் கூற்று காதலிக்கு மட்டுமல்ல எம் ஒட்டுமொத்த சமூகத்திற்கானது என்றே சிந்திக்க முடியும். காலமாற்றத்தினூடு எம் சமூகத்தில் காதலின் நடைமுறை மாறும் என்ற நம்பிக்கையை கவிஞரின் இந்தக் கவிதை தருகிறது. இரண்டு பேர் சம்மந்தப்பட்ட காதலில் வெற்றியும் தோல்வியும் சரிசமமாகப் பார்க்கப்படும் மாற்றம் எம் சமூகத்தில் நிகழும் போதே பகிரங்கமாய் காதல் செய்வதும் சாத்தியமாகும். ஒரு சமூதாயம் பலவிதமான காலமாற்றங்களுக்கூடாக பயணித்தும் தனை மாற்றிக்கொண்டும் வாழும் என்பதே நிதர்சனம்.

5 thoughts on “குகை மா புகழேந்தியின் கவிதைகள் : கவிதா (நோர்வே)”

  1. தோட்டத்து புல்வெளீயில் மணீவாழைத் தோட்டத்தில் என் மனம் பேசிய முகம் கிழட்டு வயதிலும் விட்டுப் போகாமல் உள்ளீருக்கிறது.இப்போதும் என்னை பதினாறூ வயதிற்கு தூக்கிச் செல்லும் அந்த கனவவின் என்னை பள்ளீச் சிறூவனாக்குகிறது.உள்ளே எந்தக் கபடமும் இல்லாமல் காதல் நிறந்த அந்தக் காலம் என்னை மனிதனாக்குகிறது.மனமும் அலையைப் போல அவள் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் என்னை மின்சார அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.சுரதாவின் கனவுகள்,கற்பனைகள்,காகிதங்கள் நான் படித்த முதல் கவிதைப் புத்தகம் இப்போது இந்த புகழேந்தியின் கவிதகள் பற்றீய கட்டுரை.சந்திரிகா என்னவளே எங் கே இருக்கிறாய்.

  2. நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்…கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்…….என் உலகம் தனிமைக்காடு…..நீ வந்தாய் பூக்களோடு….என தொடரும் கனவுகளோடு……..உன் பேரைச் சொன்னாலே என் நெஞ்சில் போராட்டம்………………………….

  3. உண்மைதான், இந்த கட்டுரையின் மூலம் எனது கடந்த வசந்த காலங்களை இரைமீட்டுக்கொண்டேன். காதல் எத்தனை இனிமையான உணர்வு. நன்றி கவிஞர் கவிதா அவர்களே. மனிதனின் மென்மையான பக்கத்தைப் புரியவைப்பது காதல் மட்டும்தான்.

  4. கவிஞர் புகழேந்தியின் காதல் வயப்பட்ட கவிதைகள் உண்மையில் மனதிற்கு இதமானவை என்பதில் சந்தேகமில்லை.கட்டுரையாளர் கவிதா, அவர்கள் குறிப்பிட முயல்கிற பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான பொதுவான விதியாக காதலின் தண்டனையோ, வெற்றியோ சமூகத்தால் அங்கீகரிக்கப்படவேண்டும் அல்லது அணுகப்பட வேண்டும் என்கிற கரிசனை அர்த்தமுள்ளது. நான் நினைகின்றேன் இந்தக் கவிஞர் புகழேந்திதான் 1982 அளவிலே “ஒரு கையெழுத்தில்லாத கடிதம்” என்கின்ற கவிதைத்தொகுதியை வெளியிட்டிருந்தார் என்று. அதில் ///ஏ! கோபால கிருஸ்ணா புல்லாங்குழலின் மூச்சைப் புயலாக்கிக் காட்டு என்றால் – நீ பல்லாங்குழியாடப் பெண்களையா தேடுகிறாய்?? என்று பிள்ளைகளின் காதலால் நொருங்கிப் போன பெற்றவர்களின் இடிந்த இதயங்களை ஒரு மாறுபட்ட கோணத்திலேஅறிமுகப்படுத்தியிருந்தார். தமிழ்மாறன் அவர்கள் குறிப்பிட்ட //கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் //எனப்படும் பலரையும் பித்தாக்கி வைத்த,இதயத்தின் மகோனதமான காதலை அரிய வார்த்தைகளினால் ஆன அழகிய காதற் கவிதைகளை அந்தக்காலத்தில் எழுதியவர் கவிஞர் மீரா அவர்கள் சுரதா என்று அவர் தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கின்றேன். கண்டங்களைக் கடந்து இருக்கின்ற இன்னும் பலநல்ல கவிஞர்களையும் அறிந்து  அறிமுகமாக்கலாம்.  என் வாழ்த்துக்கள்.

  5. அன்பு கவிதா அவர்களுக்கு வணக்கம் நான் குகை மா புகழேந்தி மிகத் தாமதமாக உங்களின் மிக அழகான உண்மையான மன உணர்வுகளை வாசித்தேன் மிக்க மகிழ்ச்சி எப்போதாவது எங்கிருந்தோ ஒரு மரத்தின் இலை அல்லது பூ என்மீதில் விழுந்து ஆசிர்வதிக்கப்படுகிற மாதிரி உங்களின் உணர்வுகள் என்னை வந்தடைந்திருப்பதில் உணர்ந்தேன் தொடரட்டும் உங்களின் ஆழ்ந்த வாசிப்பு இயலுமெனில் ஒருமுறை பேசுங்கள் பாலைவனப் பயணத்தில் ஒருக் குவளை நீரரருந்தக் கிடைத்ததைப்போல மகிழ்வேன் நன்றி…

Comments are closed.