கிழக்கில் கொலைகள்: மட்டக்களப்பு மக்கள் அச்சம்.

12.10.2008.

மட்டக்களப்பு நகரில் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களே கடந்த சில தினங்களுக்கு முன் காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படும் அதேநேரம், நேற்றுக் காலையும் மட்டக்களப்பு நாவலடியில் இளைஞர் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

அண்மைக் காலங்களில் மட்டக்களப்பு நகர் கடற்கரையில் அடிக்கடி சடலங்கள் கரையொதுங்குவதால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி நகரில் இடம்பெற்ற தேடுதலின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட, வர்த்தக நிலைய ஊழியர்களான கந்தசாமி குகதாஸ்(18 வயது)மற்றும் ஏ.குணசீலன் (26 வயது) ஆகியோரது சடலங்களே காத்தான் குடியில் கடந்த புதன்கிழமை கரையொதுங்கியவையென குடும்பத்தவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்கபாக இரு இளைஞர்களது குடும்பத்தவர்களும் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்கள், கைகள்,கால்கள் கட்டப்பட்டு இரு சடலங்களும் மரம் ஒன்றுடன் சேர்த்துப் பிணைக்கப்பட்ட நிலையில் இவ்விரு சடலங்களும் கரையொதுங்கியிருந்தன.

இதே நேரம் மட்டக்களப்பு நாவலடி கடலாட்சி அம்மன் கோவில் கடற்கரையில் நேற்றுக் காலை இளைஞர் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

மீனவர்கள் வழங்கிய தகவலின் பேரில் கடற்கரைக்குச் சென்ற பொலிஸார் இளைஞன் ஒருவரது சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம் பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

18 வயது மதிக்கத்தக்க இவரது சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.