கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்வு.

12.10.2008.

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அவற்றில் 40 கொட்டில்களை மிகவும் அவசரமாக உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இதற்குரிய உதவிகளைப் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் அவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் கேட்டபோது இந்தத் தேவைகளை கொழும்பில் உள்ள சிஎச்ஏ எனப்படும் மனிதாபிமான சேவைகளுக்கான நிலையத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.