கிரேக்க தேர்தலில் எதிர்க்கட்சியான பன்ஹெல்லனிக் சோஷலிஸ்ட் மூவ்மென்ட் (பஸோக்) வெற்றி!

kirisகிரேக்கத்தின் பொதுத் தேர்தலில் அந்நாட்டு எதிர்க்கட்சியான பன்ஹெல்லனிக் சோஷலிஸ்ட் மூவ்மென்ட் (பஸோக்) வெற்றி பெற்றுள்ளது.

பதவி விலகிச் செல்லும் பிரதமர் கொஸ்தாஸ் கரன்மன்லிஸ், “பஸோக்’ கட்சியின் தலைவர் ஜோர்ஜ் பபன்ட்ரேயுவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பஸோக் கட்சி 43 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் புதிய ஜனநாயகக் கட்சி 35 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையை பெறுவதற்குத் தேவையான வாக்குகளை “பஸோக்’ கட்சி வென்றெடுத்துள்ளது. மேற்படி கட்சி கடந்த 5 வருட காலத்திற்கும் அதிகமாக எதிர்க்கட்சி நிலையில் உள்ளது.

தேர்தல் வெற்றியையடுத்து ஜோர்ஜ் பபன்ட்ரேயு (57 வயது) எதென்ஸ் நகரில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், “”எமக்கு முன்பு பாரிய பொறுப்பு காத்திருக்கிறது. ஊழல், பாகுபாடு, சட்டவிரோத செயல்கள், கழிவுகள் என்பனவற்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது” என்று தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்ள 3 பில்லியன் யூரோ (4.4 பில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான மீட்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கரன்மன்லிஸ் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் கரமன்லிஸ் தனது 4 வருட பதவிக் காலம் முடிவடைய சுமார் இரு வருடங்கள் உள்ள நிலையில் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பாராளுமன்றத்தின் 300 ஆசனங்களில் 260 ஆசனங்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் கட்சிகளிடையே பங்கிடப்படுகின்ற அதே சமயம், ஏனைய 40 ஆசனங்கள் தன்னிச்சையாக தேர்தலில் முன்னிலையிலுள்ள கட்சிக்கு வழங்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.