கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்! : மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு.

krish77கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடி, கடல் போல் காட்சியளிக்கிறது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் அணைக்கட்டு முற்றிலும் நிரம்பியது. எந்த நேரமும் அணைக்கட்டு உடைந்து அருகில் இருக்கும் கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. 

ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரைகளில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிருஷ்ணா நதியில் உள்ள பிரகாசம் அணைக்கு 10.61 லட்சம் கன அடி நீர் வருவதால் அது கடல்போல் காட்சி அளிக்கிறது.

 106 வருடங்களுக்குப் பின் கிருஷ்ணா நதியில் இதுபோல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. 1903 ஆம் ஆண்டு 10.30 லட்சம் கன அடி நீர் பதிவானதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையினால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தற்போது மழை ஓய்ந்து விட்டது. ஆனாலும் அணைகள், ஏரிகள், நிரம்பி விட்டதால் அதில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள ஸ்ரீசைலம், நாகார்ஜுனா சாகர், பிரகாசம் ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இதனால் அனைத்து அணையில் இருந்தும் பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை உடையும் ஆபத்து

ஸ்ரீசைலத்தில் இருந்து திறந்து விடப்பட்ட 11 லட்சத்து 72 ஆயிரம் கனஅடி தண்ணீர் நாகர்ஜுனா சாகருக்கு வருகிறது. அங்கிருந்து 10 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தத் தண்ணீர் பிரகாசம் அணைக்கு வந்து சேர்கிறது. ஏற்கனவே பிரகாசம் அணை நிரம்பியுள்ள நிலையில் ஒரே நேரத்தில் இவ்வளவு தண்ணீர் வருவதால் அதை தாங்கும் அளவுக்கு பிரகாசம் அணை இல்லை. இது 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். எனவே தண்ணீரைத் தாங்கி கொள்ள முடியாமல் அணை உடையும் ஆபத்து உள்ளது.

பிரகாசம் அணை விஜயவாடா நகருக்கு முன்னால் உள்ளது. அணை உடைந்தால் விஜயவாடா நகரமே அழிந்து விடும் ஆபத்து உள்ளது. இதனால் நகரில் இருந்து இதுவரை ஒன்றரை லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமாக இருப்பதால் நகரில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முதல்வர் ரோசய்யாவும் மக்களுக்குத் தனியாக வேண்டுகோள்விடுத்து உள்ளார். அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அவர் கூறியுள்ளார்.

அணை உடைந்து விட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட, மீட்புக் குழுக்களும் தயாராகவே உள்ளன. அணைக்கு வரும் தண்ணீரை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற உள்ளனர். இதற்காக மதகுகள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றன.