காஷ்மீர் மக்களின் சுயாட்சிப் போராட்டம் வெற்றி பெற பாகிஸ்தான் ஆதரவு.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் கூறுகையில், காஷ்மீர் மக்களின் சுய நிர்ணயப் போராட்டம் வெற்றி பெற தார்மீக அடிப்படையிலும், தூதரக அளவிலும் பாகிஸ்தான் தனது ஆதரவுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.காஷ்மீர் மக்கள் அவர்களது இலக்கை அடைவதிலிருந்து யாரும் அவர்களைத் தடுக்க முடியாது. தங்களது நோக்கத்திற்காக தியாகங்களை செய்ய காஷ்மீரி மக்கள் தயாராகி விட்டபோது அதை யாராலும் தடுக்க முடியாது என்பது எங்களது நம்பிக்கை.காஷ்மீர் மக்கள் தங்களது சுயாட்சி உரிமைக்காக தீவிரமாக போராடத் தொடங்கியுள்ளனர். இதை ஒடுக்க இந்தியப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆனால் காஷ்மீரிகளின் சட்டப்பூர்வமான உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கும் வரை அவர்களது போராடட்ம் தொடரும் என நம்புகிறோம்.ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து பாகிஸ்தான் கவலையுடன் உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவே சரியான தருணம் என்பதை இந்தியா உணர வேண்டும் என்றார் பாசித்.காஷ்மீரி இளைஞர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு ஆசியும், ஆதரவையும் பாகிஸ்தான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.